வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம்வத்திக்கான் வானொலி
வத்திக்கான் வானொலி   
more languages  

     முகப்பு பக்கம் > தி௫ச்சபை >  2014-05-10 16:46:30
A+ A- இந்தப் பக்கத்தை அச்சிட...ஞாயிறு சிந்தனைRealAudioMP3 இன்று அன்னை தினம். உலகின் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிறு அன்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஸ்திரேலியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்று பல நாடுகளில் இவ்வாண்டு மே மாதம் 11ம் தேதி கொண்டாடப்படும் அன்னை தினத்தை நம் ஞாயிறு சிந்தனையின் முதல் பகுதியாக்குவோம்.

அம்மாவை, அன்னையை மையப்படுத்திய வழிபாடுகளும், விழாக்களும் மனித வரலாற்றில் பல பழமைக் கலாச்சாரங்களில் மதிப்புடன் கொண்டாடப்பட்டு வந்துள்ளன. அன்னைக்கென வருடத்தின் ஒரு நாளை அர்ப்பணிக்கும் எண்ணம் 19ம் நூற்றாண்டில் ஆரம்பமானது. சமூக ஆர்வலரும், கவிஞருமான Julia Ward Howe, 1870ம் ஆண்டு சக்திவாய்ந்த ஒரு கவிதையை எழுதினார். "அன்னைதின அறைகூவல்" (Mother's Day Proclamation) என்ற பெயரில் வெளியான இக்கவிதை, உலகெங்கும் அன்னை தினத்தைக் கொண்டாடுவதற்கு வித்திட்டது. இக்கவிதை விவரிக்கும் பெண்மை, தாய்மை, தலைமைத்துவம் ஆகியப் பண்புகள் நமது இன்றைய உலகிற்கு மிகவும் தேவையான பாடங்களைச் சொல்லித்தருகின்றன. இதோ இக்கவிதையின் வரிகள்:

மகளிரே, இன்று எழுந்து நில்லுங்கள்! இதயமுள்ள மகளிரே எதிர்த்து நில்லுங்கள்!
உங்களது திருமுழுக்கு, தண்ணீரால் நடந்திருந்தாலும், கண்ணீரால் நடந்திருந்தாலும் சரி... இப்போது எழுந்து நில்லுங்கள், எதிர்த்து நில்லுங்கள்.
உறுதியாகச் சொல்லுங்கள்:
வாழ்வின் மிக முக்கியக் கேள்விகளின் விடைகளைத் தீர்மானிக்கும் உரிமையை குடும்பத்துடன் சிறிதும் தொடர்பற்ற நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்.
சண்டைகளில் உயிர்களைக் கொன்று குவித்த கொலை நாற்றத்துடன் வீடு திரும்பும் கணவர்கள், எங்கள் அரவணைப்பையும், ஆரவார வரவேற்பையும் பெறுவதற்கு நாங்கள் இணங்கமாட்டோம்.
பிறரன்பு, கருணை, பொறுமை என்று நாங்கள் சொல்லித்தரும் பாடங்களை மாற்றி, அவற்றிற்கு எதிரான பாடங்களைச் சொல்லித் தருவதற்காக, அரசோ, வேறெந்த நிறுவனமோ எங்கள் குழந்தைகளை எங்களிடமிருந்து பறிப்பதற்கு நாங்கள் விடமாட்டோம்.
ஒரு நாட்டைச் சேர்ந்த பெண்களாகிய நாங்கள், மற்றொரு நாட்டுப் பெண்கள் மீது கனிவு கொண்டவர்கள். எனவே, எங்கள் மகன்கள் அப்பெண்களின் மகன்களைக் காயப்படுத்த விடமாட்டோம்.
நிர்மூலமாக்கப்பட்ட இந்தப் பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் ஓர் ஓலம் எங்கள் குரல்களுடன் இணைகிறது. அது சொல்வது இதுதான்: "ஆயுதங்களைக் களையுங்கள்! ஆயுதங்களைக் களையுங்கள்! உயிர் குடிக்கும் வாள் ஒருநாளும் நீதியை நிலைநாட்டும் தராசு ஆகாது!" என்பதே பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் அந்த ஓலம்.
போர்க்கள அழைப்பைக் கேட்டு, தங்கள் நிலங்களையும், தொழிற்சாலைகளையும் விட்டுச் சென்றுள்ள ஆண்களைப் போல், பெண்களும் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறட்டும். போரில் ஈடுபடும் ஒவ்வொரு நாட்டிலும் நல்ல முடிவுகள் உருவாக, பெண்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறட்டும். போரில் இறந்தோரை நினைவுகூர, அவர்களுக்காக அழுது புலம்ப, பெண்கள் ஒன்று சேரட்டும். இந்த மனிதக் குடும்பம் அமைதியில் வாழ்வதற்குரிய வழிமுறைகளைப் பெண்கள் கலந்து பேசட்டும்.
உலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை பெண்கள் இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.

தாய், அல்லது அன்னை என்றதும் வீட்டுக்குள், அடுப்படியில் முடங்கிக் கிடக்கும் பெண்ணாக அவர்களை எண்ணிப்பார்த்த காலத்தைக் கடந்து, சமுதாயத்தில் நல்ல முடிவுகளை எடுக்க, பெண்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும்; அவர்களது மென்மை கலந்த உறுதி உலகின் பிரச்சனைகளைத் தீர்க்கும் வழிகளை உருவாக்கும் என்று 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இக்கவிதை முழங்குகிறது. அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் இக்கவிதை எழுதப்பட்டது. அப்போரின் விளைவுகளைக் கண்ட Julia Ward Howe அவர்கள் எழுதிய இவ்வரிகள், இன்றும் நம்மைச் சூழ்ந்துள்ள அவலங்களைக் கூறுகின்றன. அத்துடன், அன்னையர் இவ்வுலகிற்குத் தேவையான பல முக்கிய முடிவுகளை எடுக்க, பலத் துறைகளில் தலைமைப் பொறுப்பை மேற்கொள்ள முன்வரவேண்டும் என்பதையும் இக்கவிதை முழங்குகிறது.
பல வடிவங்களில் வன்முறையைச் சந்தித்து காயப்பட்டிருக்கும் இவ்வுலகிற்கு, தாய்மை, பெண்மை ஆகிய குணமளிக்கும் குணங்கள் அதிகம் தேவைப்படுகின்றன. எனவே, இந்த அன்னை தினம் வெறும் வியாபாரத் திருநாளாக இல்லாமல், நம் ஒவ்வொருவரிலும் உள்ள தாய்மையை வெளிப்படுத்தும் ஒரு நாளாக, அதன் வழியாக உலகின் அமைதிக்கு உறுதியான அடித்தளமிடும் ஒரு நாளாக இருக்க வேண்டுமென்று சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.

அன்னை தினத்தைக் கொண்டாடும்போது, பெண்மை, தாய்மை என்ற மென்மையான பண்புகளை இவ்வுலகம் உணர வேண்டும் என்று மன்றாடுவோம். இப்பண்புகள் பெண்களுக்கு மட்டுமே உரியன என்பது தவறான கருத்து. அனைத்து மனிதர்களிடமும் இந்த மென்மையான பண்புகள் காணப்படவேண்டும். குறிப்பாக, இவ்வுலகின் முக்கிய முடிவுகளை எடுக்கும் தலைவர்கள் மத்தியில் இந்தப் பண்புகள் மேலோங்கி வளர வேண்டும்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சென்ற ஆண்டு தலைமைப் பணியை ஏற்ற புனித யோசேப்பு திருநாளன்று (2013, மார்ச் 19), தலைமைப் பணி, பாதுகாக்கும் பணி ஆகியவற்றைக் குறித்து திருத்தந்தை பேசியது நம் கவனத்தை இப்போது ஈர்க்கிறது:
பாதுகாவல் என்ற பணிக்கு, தலைமைப் பணிக்கு, நன்மைத்தனமும், மென்மையும் கொண்டிருப்பது அவசியம். புனித யோசேப்பு, உடலளவில் உறுதிவாய்ந்த தொழிலாளியாக இருந்தார் எனினும், மனதில் மென்மை உணர்வுகள் கொண்டிருந்ததால், அவர் பாதுகாவலராக இருக்க முடிந்தது. மென்மையான மனது கொண்டிருப்பதை வலுவிழந்த நிலையாகக் காண்பது தவறு. மென்மை உணர்வுகள் கொண்டோரிடமே, கனிவு, கருணை, பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது போன்ற நற்பண்புகள் காணப்படும். எனவே, நன்மைத்தனத்தையும், மென்மையான உணர்வுகளையும் கண்டு நாம் அஞ்சக்கூடாது.

புனித யோசேப்பின் கண்காணிப்பில் வளர்ந்த இயேசு, நன்மைத்தனமும், மென்மையான உணர்வுகளும் கொண்ட ஒரு நல்ல ஆயனாக தன்னை உருவகித்துப் பேசிய வார்த்தைகள் மக்கள் மனதில் முதலில் ஆழமாகப் பதிந்தன. எனவேதான், கிறிஸ்துவை ஓவியமாகத் தீட்ட முனைந்த பலர், துவக்கத்தில் அவரை ஒரு நல்ல ஆயனாகவே வடித்தனர். தாய்மை உணர்வுகளும், தலைமைப் பண்பும் கொண்ட அந்த நல்ல ஆயனுக்கு இந்த ஞாயிறு அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.

இஞ்ஞாயிறை நல்லாயன் ஞாயிறென்றும், இறையழைத்தல் ஞாயிறென்றும் கொண்டாட தாய் திருஅவை நம்மை அழைக்கிறார். தாயாக நம்மைக் காத்து, தலைவராக நம்மை வழி நடத்தும் நல்லாயனை எண்ணிப் பார்க்கும்போது, மாவீரன் அலெக்சாண்டரைப் பற்றிய ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
மாவீரன் அலெக்சாண்டர் தன் படையுடன் மக்ரான் என்ற பாலை நிலத்தைக் கடக்க வேண்டியிருந்தது. கொளுத்தும் வெயிலும், எரிக்கும் மணலும் வீரர்களின் உயிரைக் குடிக்கும் தீயாய் மாறின. அலெக்சாண்டரும் தாகத்தால் துடித்தார். அவர் தாகத்தைத் தணிக்க, இரு தளபதிகள் நீண்ட தூரம் நடந்து, தங்கள் கவசத்தில் சிறிது தண்ணீர் கொண்டு வந்தனர். அலெக்சாண்டர் அத்தளபதிகளின் விசுவாசத்தைப் பாராட்டினார். பின்னர், அவர்களிடம், "வீரர்களுக்கும் தண்ணீர் கிடைக்க வழி உண்டா?" என்று கேட்க, அவர்கள், "இல்லை மன்னா. உங்கள் ஒருவருக்கு மட்டுமே தண்ணீர் கிடைத்தது." என்று சொன்னார்கள். வீரர்களுக்குத் தண்ணீர் இல்லாதபோது, தனக்கும் தண்ணீர் தேவையில்லை என்று கவசத்தில் இருந்த நீரை மணலில் ஊற்றினார் அலெக்சாண்டர். சூழ இருந்த வீரர்கள், தங்கள் தலைவனைப் பெருமையுடன் எண்ணி, ஆர்ப்பரித்தனர்.

தன்னைப் பின் தொடர்பவர்களின் இன்ப, துன்பங்களில்... முக்கியமாக, அவர்களின் துன்பங்களில் தன்னையே இணைத்துக் கொள்பவரே உண்மைத் தலைவர். உண்மை ஆயர். தன்னை நல்ல ஆயனாக உருவகித்து இயேசு கூறும் வார்த்தைகள் இன்றைய நற்செய்தியாக ஒலிக்கின்றன. அத்துடன், ஆடுகளின் நலனில் அக்கறை கொள்ளாமல், தங்கள் சுயநலனுக்காக, சுய ஆதாயத்திற்காக ஆடுகளைப் பலியாக்கும் திருடர், கொள்ளையர், கூலிக்கு மேய்ப்பவர் ஆகியோருடன் தன்னை ஒப்பிட்டு இயேசு பேசியுள்ள வார்த்தைகள் நம் மனதில் பல கேள்விகளை ஏக்கங்களை உருவாக்குகின்றன.
இந்தியாவில், இன்னும் சில நாட்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. நல்ல தலைவர்களைத்தான் நாம் தேர்ந்தேடுத்திருக்கிறோமா என்ற கேள்வியும், ஏக்கமும் இந்நாட்களில் மனதை நிறைக்கின்றன.

நல்ல ஆயனுக்கு, நல்ல தலைவனுக்கு உரிய பண்புகளை இன்றைய நற்செய்தியில் இயேசு குறிப்பிட்டுள்ளார். பெயர் சொல்லி பாசமாய் அழைத்தல், முன்னே சென்று ஆடுகளை வழி நடத்துதல் ஆகிய நற்பண்புகளுடன் ஆயனின் மற்றொரு முக்கியமான குணத்தையும் யோவான் நற்செய்தி 10ம் பிரிவில் இயேசு குறிப்பிடுகிறார்.
நல்லாயனின் ஒரு முக்கியமான குணம்... ஆடுகளுக்காகத் தன் உயிரையேத் தருவது. எந்த ஒரு சூழலிலும் தன்னைப் பற்றி சிந்திக்காமல், மற்றவர்களையே எண்ணி வாழ்வதைப் போன்ற ஓர் உயர்வான வாழ்வு உலகில் இல்லை. ஆபத்து, துன்பம் என்று வரும்போது தன்னைக் குறித்து ஒருவர் கவலை கொள்வதும், தன்னைக் காத்துக் கொள்ள முயல்வதும் வெகு சாதாரண மனித இயல்பு. அந்த இக்கட்டானச் சூழல்களிலும் தன்னைப்பற்றிய கவலை இல்லாமல், அடுத்தவரைப்பற்றி கவலைப்படும் மனம், மலைபோல் உயர்ந்த மனம். மனித வரலாற்றில் தங்களையே மறந்து, பிறருக்காக வாழ்ந்த பலரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.
கடந்த ஈராண்டுகளாக முற்றுகையாலும், வன்முறைகளாலும் துன்புற்றுவரும் சிரியாவின் ஹோம்ஸ் நகர் மக்களைவிட்டுப் பிரியாமல், அவர்களுடனேயே தங்கியவர் 76 வயது நிறைந்த இயேசு சபை அருள் பணியாளர் Frans van der Lugt அவர்கள். கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமியரும் இவரது பாதுகாப்பைத் தேடிவந்தனர். இவர், ஏப்ரல் 7ம் தேதி அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தாய்மை, தலைமைத்துவம் ஆகிய உன்னதப் பண்புகளை வளர்க்கும் நாற்றங்கால், நமது குடும்பங்கள். குடும்பங்களில்தான் இறை அழைத்தலின் விதைகளும் ஊன்றப்படுகின்றன.

    எனவே, அன்னை தினம், நல்லாயன் ஞாயிறு, இறை அழைத்தல் ஞாயிறு என்ற மூன்று ஆழமான எண்ணங்களைக் கொண்டாடும் இந்த நாளில், நம் குடும்பங்களுக்காகவும் சிறப்பான செபங்களை எழுப்புவோம்.
    பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பு ஆகியவற்றை முடித்துவிட்டு, வாழ்வில் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் காத்திருக்கும் இளையோரை இன்று சிறப்பாக இறைவனின் திருப்பாதம் கொணர்வோம். நல்லாயனாம் இயேசுவின் அழைத்தலை ஏற்று, மக்கள் பணிக்குத் தங்களையே வழங்க முன் வரும் இளையோரை இறைவன் வழிநடத்த வேண்டுமென்று இறையழைத்தல் ஞாயிறன்று மன்றாடுவோம்.
    மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட தலைவர்களை இந்தியத் தாய் இந்த தேர்தல் வழியே பெற்றெடுக்க வேண்டும் என்று உருக்கமாக மன்றாடுவோம்.

பகிர்ந்து


நாங்கள் யார் நிகழ்ச்சிகள் நேரம் வானொலி மையத்திற்கு எழுது வத்திக்கான் வானொலியின் தயாரிப்புகள் இணைப்புகள் பிற மொழிகள் தி௫ப்பீடம் வத்திக்கான் நகரம் தி௫த்தந்தை நிகழ்த்தும் தி௫வழிபாடுகள்
இவ்விணையத்தில் உள்ள அனைத்தும் உரிமம் பெற்றவை ©. இணைய ஒருங்கிணைப்பாளர் / இணைய அமைப்பாளர்கள் / சட்ட விதிமுறை / விளம்பரம்