2008-11-18 14:18:07

அடைபட்ட துறவியர் கடவுளின் பிரசன்னத்திற்கு ஆழமான சான்று பகர வேண்டும் - கர்தினால் ரோட்


நவ.18,2008. அடைபட்ட துறவு வாழ்வும் திருச்சபையிலும் இன்றைய உலகிலும் அதன் முக்கியத்துவமும் என்ற தலைப்பில் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வுக்கான திருப்பீட பேராயம் இச்செவ்வாய் முதல் வியாழன் வரை ஆண்டு கூட்டம் ஒன்றை நடத்தி வருகிறது.

திருச்சபையின் வாழ்வில் அடைபட்ட துறவு வாழ்வின் முக்கியத்துவம் பற்றி இககூட்டத்தில் அதிகக் கவனம் செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இககூட்டத்தில் தொடக்கவுரையாற்றிய இப்பேராயத்தின் தலைவர் கர்தினால் பிராங் ரோட், பல மத நமபிக்கையாளரும் மத நமபிக்கையற்றவரும் அடைபட்ட துறவு மடங்களைப் பார்வையிடச் செல்லுகின்றனர், எண்ணற்ற ஆண் பெண் துறவியர் தங்களது ஆன்மீக வாழ்வைப் புதுப்பிப்பதற்காக அங்கு செல்கின்றனர், எனவே அடைபட்ட துறவியர் கடவுளின் பிரசன்னத்திற்கு ஆழமான சான்று பகர வேண்டும் என்றார்.

அடைபட்ட மடங்களில் வாழும் துறவியர் கிறிஸ்துவோடு இருக்க வேண்டியவர்கள், திருமறைநூலிலும் திருநற்கருணையிலும் அடங்கியுள்ள இறைவார்த்தையில் நம் ஆண்டவரைச் சந்திக்க வேண்டியவர்கள் என்று குறிப்பிட்ட கர்தினால், இககூட்டத்தில் முக்கியமாக கவனம் செலுத்தவிருப்பவைகள் பற்றிக் கோடிட்டு காட்டினார். புரட்சிகரமாக வழியில் கன்னிமை வாழ்வையும் குழு வாழ்வையும் வாழ்தல், துறவு வாழ்வுப் பணியில் எதிர்படும் ஆபத்துக்களை எதிர்நோக்குதல், துறவு பயிற்சியில் ஞானம் நிறைந்த இறையியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் ஆகியவை பற்றிச் சிந்திப்பதற்கும் அவர் அழைப்புவிடுத்தார்.

திருச்சபையில் தற்போது 905 அடைபட்ட ஆண் துறவு இல்லங்களில் 12,876 ஆண் துறவிகளும் 3520 அடைபட்ட பெண் துறவியர் இல்லங்களில் 48,493 பெண் துறவிகளும் உள்ளனர். இவற்றில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பகுதி ஐரோப்பாவில் உள்ளது.

நவம்பர் 21 காணிக்கை அன்னை விழா அன்று அடைபட்ட துறவியர் தினம் திருச்சபையில் கடைபிடிக்கப்படுகிறது. இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் அத்துறவியருக்கு வாழ்த்து தெரிவித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்காகச் செபிக்குமாறும் உதவுமாறும் அவ்வாழ்வுக்கு இறையழைத்தல் பெருகுமாறும் அழைப்புவிடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.