2008-11-22 19:37:42

வழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறு – கிறிஸ்து அரசர் பெருவிழா.

நவம்பர் 22-11-08 .


வாசகங்கள்–எசக்கியேல் 34 , 11-12 ,15-17. 1 கொரி, 15,20-26. 28 .

நற்செய்தி, மத், 25, 31-46 .

ஆண்டவர் கிறிஸ்துவை மாமன்னராக வழிபடும் நாள் , கிறிஸ்து அரசரின் பெருவிழா .திருப்பாக்கள் மெசியாவை அரசராக அறிமுகப்படுத்துகின்றன . அவர் தாவீது மன்னரின் அரியணையில் அமர்வார் .அவரது ஆட்சிக்கு முடிவு இராது என்பது எசாயா இறைவாக்கு . “எம் மாமன்னர் நீதிபதியாகத் தோன்றி உலகத்திற்குத் தீர்ப்பு வழங்குவார்” . செயலளவில் காட்டப்படும் அன்பின் அடிப்படையிலேயே இறுதித் தீர்ப்பு அமையும் .



தீர்ப்பளிக்க வரும் நீதிபதி “தாமே” என்று இயேசு அறிவித்துள்ளார் . அவர் தம் மாட்சிமையில் வானதூதர் புடை சூழ இறுதி நாளில் தோன்றுவார் .வலப்பக்கம் உள்ள நல்லவர்களை உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்துள்ள அரசு உங்களுக்கு உரியதாகுக என்று கூறி வரவேற்பார் . இடப்பக்கம் உள்ளவரை என்னைவிட்டு அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்துள்ள முடிவில்லா நெருப்புக்குள் செல்லுங்கள் என்று சபிப்பார் . இறுதி நாளில் நாம் எப்பக்கம் ?



பிறரன்பே இறையன்பு . ஒருவனது அறிவு , ஆற்றல் , செல்வம் ஆகியவற்றின் அடிப்படையில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படவில்லை . அடிப்படைத் தேவைகளில் ஒரு பக்தன் தன்னால் ஆன உதவி புரிந்திருந்தால் அதைத் தமக்கே செய்ததாக இயேசு ஏற்றுக் கொள்கிறார் . “இரக்கத்தின் செயல்களைச் செய்யாதவன் இறையன்பு இல்லாதவன்” என்கிறார் தூய யோவான் .



அன்பு செயல்களிலே மலர வேண்டும் . செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம் .



சிறையில் இருந்த தம்மை விடுவித்தாதகவோ , நோயுற்று இருந்த தம்மைக் குணமாக்கியதாகவோ கூறவில்லை . அங்கிருந்த தம்மைப் பார்க்க வந்த பரோபகாரச் செயலுக்காகவே இயேசு அவர்களைப் பாராட்டுகிறார் . ஆண்டவர் தாம் அவர்கள் உருவில் துன்புற்றார் என்பதை அறியாமலே அவர்களுக்கு அவர்கள் உதவியுள்ளனர் . தொழு நோயாளனைத் தொட்டுத் தூக்கித் தழுவிக்கொண்டபொழுது அவனில் கிறிஸ்துவின் முகத்தைக் கண்டவர் பிரான்சிஸ் அசிசி . குளிரில் நடுங்கிய ஓர் ஏழைக்குத் தன் போர்வையைப் பங்கிட்டளித்த மார்ட்டீனுக்கு காட்சியளித்த இயேசு “இதோ நீ கொடுத்த பாதிப் போர்வை” என்று கூறியது வரலாறு . இப்பக்தர்கள் இவ்வுவமையின் பொருளைப் புரிந்து கொண்டவர்கள் . அயலானுக்கு அன்பு செய்யாதவனிடம் இறுதி நாளில் கேட்கப்படும் கேள்வி வேத நூல்களின் விளக்கம் அன்று . அறிந்தவற்றைச் செயல்படுத்தினாயா ? என்பதேயாகும் . “பட்டினிச் சாவுகளைப்பற்றி நீ கவலைப்படவில்லையே . பிணியாளரைச் சந்திக்கவில்லையே” என்ற குற்றச் சாட்டேயாகும் . இயேசு அன்பின் அரசர் . கருணைக்கடல் . எனினும் இறுதி நாளில் கடுமையான நீதிபதியாகவே தம் மாட்சிமையில் வருவார் . அன்று அவரை யாதொரு அச்சமின்றிச் சந்திக்கவேண்டுமானால் , இன்று , இவ்வுலகில் நடமாடு்ம் அவரை நாம் அடையாளம் கண்டு அன்புச் சேவை புரிய வேண்டும் .



இறைவா நாங்கள் எல்லோரையும் சகோதர , சகோதரிகளாக ஏற்று அன்புற்று வாழ வரம் தாரும் .








All the contents on this site are copyrighted ©.