2008-11-26 20:21:24

எங்கே நிம்மதி ? 26-11-08.




நமக்கு உள்ளேயும் நம் மனதுக்கு வெளியேயும் போராட்டம் நடக்கிறது . போராட்டம் என்பது வாழ்வின் நியதியாகும் . நாம் இங்கு உலகில் நாடுகளுக்கு இடையே நடைபெறும் யுத்தம் பற்றி அல்ல , தீமைக்கு எதிராக நடக்கும் போராட்டம் பற்றிப் பேசுகிறோம் . விவிலியத்தில் வான் வீட்டிலேயே போர் நடந்ததாகப் பார்க்கிறோம் . தீய சக்திகளை எதிர்த்து மிக்கேல் வானதூதர் போர் தொடுத்ததாகப் பார்க்கிறோம் . சுதந்திரம் என்பது ஒரு கூரிய வாள். அது நன்மைக்குப் பதிலாக தீயனவற்றை புரியமுடியும் .



இருளுக்கு எதிராக ஒளி போர் தொடுக்கிறது . துன்பம் இல்லாமல் வெற்றி மாலை இல்லை என்பது இயற்கையின் நியதியாக இருக்கிறது . கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் தான் நூறு மடங்கு பலன் தர முடியும் . இயேசுவைப் பின் தொடர விரும்புவோர் தம்மை மறந்து , தம் சிலுவையை நாள் தோறும சுமந்து கொண்டு அவரைப் பின் தொடர வேண்டும் எனக் கூறுகிறார் .



உலகுக்கு அமைதியை அல்ல , வாளையே கொண்டு வந்தேன் என்கிறார் இயேசு. ஒன்று வெளிப்புறம் சுழல்வது . மற்றது உள்புறமாகச் சுழல்வது . வெளியே சுழல்வது பிறரைக் காயப்படுத்துவது . உள்ளே சுழல்வது யான் எனது எனும் செருக்கு அறுத்து , சுயநலத்தையும் , பேராசையையும் நீக்குவது . வெளியே சுழலும் வாள் போரில் பயன்படுத்தப்பட்டு மனிதர்களுக்கு எதிராகப் பயன்படுவது . மனதுக்குள் நாம் நடத்தும் போர் நமக்கு எதிரானது . தனக்குள் போர் தொடுக்காத ஒருவன் வெளி உலகில் போர் தொடுக்க முயல்கிறான் . தனக்குள் உருவாகும் பாவத்துக்கு எதிராகப் போரிடுபவன் வெளியில் உள்ள எதிரியோடு போர் தொடுக்கத் தேவையில்லை .



நம் மனத்தைப் பண்படுத்த நாம் கொத்தி, களை நீக்கும் போது , வெளியில் யாரையும் கொத்திக் கொலைசெய்ய வேண்டியதில்லை . தான் எனும் ஆணவமும் மற்றவரோடு சண்டைக்குப் போவதும் கையோடு கை சேர்த்துச் செல்பவை .



தனக்குள் இருக்கும் எதிரியைக் காணாதவன் வெளியுலகில் நிறைய எதிரிகளைக் காணுகிறான் .ஒவ்வொரு மனித மனதுக்குள்ளும் உள் நாட்டுப் போர் நிகழ்கிறது. நல்ல எண்ணங்களுக்கும் , தீய எண்ணங்களுக்கும் , உயர்ந்த மதிப்பீடுகளுக்கும் ,தாழ்வான எண்ணங்களுக்கும் இடையே நிகழும் போர் இது. நல்ல மதிப்பீடுகள் இந்தப் போரில் வெற்றி பெறவில்லை என்றால் நாம் தீய செயல்களில் இறங்குவோம் என்பது உறுதி . தன்னுடைய உடல் இன்ப ஆசைகளையும் , பொருளாசைகளையும் சிலுவையில் அறையாதவன் பிறரைச் சிலுவை மரத்தில் அறைகிறான் . தனது சிலுவையைத் தானே சுமக்காதவன் வீணாக அச்சிலுவையை பிறர்மீது சுமத்துகிறான் .



நம் உள்ளத்தில் நிம்மதி இல்லாமைக்குக் காரணம் என்னவென்று நாம் சிந்திக்கிறோம் . நம் மனதில் நிம்மதி இல்லாமைக்குக் காரணம் ,நமக்குள் இருக்கும் எதிரியோடு நாம் போர் தொடுப்பதில்லை . நம் மனதுக்குள் போரிட்டு வென்றிட எதிரியே இல்லை எனக்கூறிவிடுகிறோம் . நன்மைத்தனம் பற்றியும் கடவுளுடைய அளவில்லாத தூய்மையைப் பற்றியும் சிந்திக்காதவன் தனக்குள் போரிடவதில்லை . தனது வாழ்க்கையின் உயர்வு மட்டுமே அவனது வாழ்க்கைச் சட்டம் . தன்னலம் மட்டுமே அவனுக்குத் தூண்டுகோல் . தான் இன்புறுவது மட்டுமே அவனுடைய வாழ்க்கையின் இலக்கு . தன்னையே அவன் தெய்வமாகக் கருதுகிறான் .



அவனே இறையருளால் ஆட்கொள்ளப்படும்போது முழுமையான மாற்றம் பெறுகிறான் . அரச வாழ்வையே ஆண்டவனுக்காகத் துறந்தவர்கள் பலர். சவுல் இயேசுவால் தமாஸ்கஸ் சென்ற வழியில் தடுத்து ஆட்கொள்ளப்பட்டதால் திருத்தூதர் பவுல் ஆனார் . இயேசுவை மறுதலித்த பேதுரு ஆண்டவரால் அருள் பாலிக்கப்பட்டு சிலுவைச் சாவை ஏசுவக்காக ஏற்று திருத்தூதர் பேதுருவாக மாறியது வரலாறு காட்டும் உண்மை . உள்ளத்தில் ஒளி உண்டாகும் போது வாக்கினிலும் வாழ்விலும் ஒளி உண்டாகிறது .



நல்ல மனம் உடைய பலர் மனம் மாற்றம் பெற வாய்ப்பிருந்தும் தயக்கத்தாலும் , சந்தேகத்தாலும் , காலம் தாழ்த்துதவதாலும் , மனப் போரில் தோல்வியைச் சந்திக்கிறார்கள் . இன்று போய் நாளை பார்க்கலாம் எனக் கூறும் அவர்கள் வாழ்வில் ஆயிரக்கணக்கான நாளைகள் வந்து போகின்றன . மாற்றங்கள் காற்றோடு கரைந்த கனவாகிவிடுகின்றன . நரகத்தின் பாதைகள் செயல் வடிவம் பெறாத நல்ல எண்ணங்கள் என்ற படிக்கட்டுகளால் ஆனவையே.



இவ்வாறு இறைவனில் அருளைப் பெறும் சிலர் நான் முழுமையாக மனம் மாற விரும்புகிறேன் ஆனால் இப்பொழுது அல்ல , கொஞ்ச நாள் பொறும் இறைவா எனக் கூறி ஒதுங்கிக் கொள்கின்றனர் . என்னைப் பின் தொடர்ந்து வா என இயேசு ஓர் இளைஞனுக்குக் கூறியபோது , அவன் தயக்கம் காட்டினான் ஏனெனில் அவனுக்கு ஏராளமான சொத்து இருந்தது . அடுத்து ஒருவர் நான் சென்று என் தந்தையைக் கவனித்துக் கொண்டு அவர் இறக்கும் போது நல்லடக்கம் செய்துவிட்டு வருகிறேன் எனக் காரணம் கூறித் தன் வழியே சென்றுவிட்டான் . மூன்றாமவன் நான் சென்று நண்பர்களிடம் விடைபெற்றுவிட்டு வருகிறேன் எனக் கூறி இயேசுவைப் பின் தொடர மறுத்துவிட்டான் .



கடவுள் திட்டத்துக்கு மாறாக மனிதன் தன் விருப்பப்படி செயல்களைப் புரிகிறான். இறைவன் விரும்புவதை உணர்வதுமில்லை , ஏற்றுக் கொள்வதுமில்லை . உணமையான இறை பக்தி என்பது நிபந்தனை இல்லாது நல்லது எதுவோ அதை ஏற்றுக் கொள்வதாகும் . அகுஸ்தினார் மனம் மாறுவதற்கு முன்னர் , இறைவா நான் மனம் மாறுகிறேன் ஆனால் இப்பொழுது அல்ல எனக் கூறினார் . காலம் தாழ்த்துவது பேராபத்தைத் தரும் .உம்மைக் கொல்லுவதற்குத் திட்டமுள்ளது என இரகசியத் தூதர்கள் கூறியிருந்தும் அலட்சியப்படுத்தியதால் ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்டதாக வரலாறு கூறுகிறது . கலப்பையில் கை வைத்தவர் பின் நோக்கிப் பார்த்தால் நேராக உழுதல் முடியாது . ஒவ்வொரு சிறு காரியமும் நம்முடைய முழுக் கவனத்தையும் கொண்டதாக இருக்கவேண்டும் . உழுபவரும் , உழைப்பவரும் கருத்தாகப் பணி மேற்கொள்ளும் போது தனக்கு நிகரிலா ஆண்டவனைப் பின்பற்றி வாழ நினைப்போர் தமது கண்களை அவர்பால் கருத்தாகப் பதிக்கவேண்டும்.



நம் உள்ளத்துள் நடக்கும் மனப்போரைத் தக்கமுறையில் எதிர் கொண்டு மனித மாண்புக்கும் இறைவன் காட்டும் ஒளிமயமான பாதைக்கும் உரிய முறையில் வாழ்வது என்பது போராட்டமே . நிம்மதி வேண்டுவோர் சிறுமை நீக்கி, வாழ்வாங்கு வாழ்ந்தால்தான் வானுறையும் தெய்வத்தின் முன்னே நாம் செல்ல முடியும் .



நத்தம் போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க் கல்லால் அரிது .



உள் மனப்போரில் வென்ற ஒருவனது புகழுடம்பு கரு வளர்ச்சியடைவது போல, முழு வளர்ச்சிபெறும் . மூப்பினால் பூத உடம்பு தளர்ந்து அழிந்தாலும் , புகழுடம்பு மிக்க ஒளியோடு ஒளிர்ந்து மிளிரும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. இவர்கள்தான் நிரந்தரமானவர்கள் . அவர்கள் இறந்தும் வாழ்பவர்கள். அதோடு அருள் உள்ளோர்க்குத்தான் வானுலகு உரித்தாகுமென்கிறார் . அவலம் மிக்க வாழ்வில் உயிர் உள்ளவரை மனிதன் உடலோடு போர் தொடுக்க வேண்டியிருக்கிறது. ஊனியல்பு இச்சிப்பதும் , கண்கள் காண இச்சிப்பதும் , செல்வத்தில் செருக்குக் கொள்வதுமாகிய உலகப்பற்றுக்கள் நம்மைத் திசை மாறிச் செல்ல இழுக்கின்றன. தங்களையே நாடுபவர்கள் புதுமை மோகம் படைத்தவதர்கள் நிறைவின்றி அலைபவர்கள் விலங்கிடப்பட்டிருக்கிறார்கள். எனவே நாம் இந்த ஆசைகளிலிருந்து விடுபட்டால் நிம்மதி நம்முடையதே .

 








All the contents on this site are copyrighted ©.