2010-01-26 13:46:13

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படுவதற்கு அந்நாட்டு ஆயர் வருத்தம்


சன.26,2010 ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படுவதற்கு அந்நாட்டு ஆங்லிக்கன் ஆயர் ஒருவர் வருத்தம் தெரிவித்திருப்பதை வரவேற்றுள்ளனர் இந்திய கத்தோலிக்க ஆயர்கள்.
மெல்பெர்ன் புனித பவுல் பேராலயத்தில் ஞாயிறன்று இடம் பெற்ற செபவழிபாட்டில் இவ்வாறு செபித்த, மெல்பெர் மறைமாவட்டத்தின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கான ஆங்லிக்கன் ஆயர் ஹக்கின்ஸ், ஆஸ்திரேலியர்கள் பிற நாட்டவர் மீது காட்டும் முற்சார்பு மற்றும் பாராமுக நடவடிக்கைகளுக்கு மன்னிப்பை இறைஞ்சுவதாகக் கூறினார்.
மற்றவர்களின் கலாச்சாரங்களையும் அவர்களின் சுயமதிப்பையும் மதிக்காதது மற்றும் இம்மண்ணில் நசுக்கப்படுகிறவர்களின் வேதனைகளைப் புறக்கணித்தது ஆகியவற்றுக்காக இறைவனிடம் மன்னிப்பு வேண்டுவோம் என்றும் அவர் செபித்தார்.
ஆஸ்திரேலிய ஆயரின் இச்செபத்தை வரவேற்றுப் பேசிய இந்திய ஆயர் பேரவை பேச்சாளர் அருள்தந்தை பாபு ஜோசப், அந்நாட்டில் இந்தியர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது கவலை தருவதாக உள்ளது என்றார்.
ஆஸ்திரேலியாவில் சுமார் 97ஆயிரம் இந்தியர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் ஏறத்தாழ 45 ஆயிரம் பேர் மெல்பெர்னில் படிக்கின்றனர்.







All the contents on this site are copyrighted ©.