2010-05-04 16:01:57

ஈராக்கில் கிறிஸ்தவ சமூகத்திற்கு எதிராக மீண்டும் இடம் பெற்றுள்ள வன்முறைத் தாக்குதல் குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை


மே04,2010 ஈராக்கில் கிறிஸ்தவ சமூகத்திற்கு எதிராக மீண்டும் புதிதாக இடம் பெற்றுள்ள வன்முறைத் தாக்குதல்கள் குறித்த தமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கும் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இஞ்ஞாயிறன்று மொசூல் பல்கலைகழகத்திற்கு கிறிஸ்தவ மாணவர்கள் சென்ற மூன்று பேருந்துகள் முதலில் குண்டு வெடிப்பினாலும் பின்னர் கார் குண்டு வெடிப்பினாலும் தாக்கப்பட்டன. இதில் 4 பேர் இறந்துள்ளனர், 17பேர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர் மற்றும் 171 பேர் காயமடைந்துள்ளனர். இந்தப் பேருந்துகள் ஒவ்வொன்றிலும் 18க்கும் 26 வயதுக்கும் உட்பட்ட ஏறத்தாழ 50 மாணவர்கள் பயணம் செய்தனர்.

ஈராக்கில் கிறிஸ்தவர்களுக்கெதிராகப் புதிதாக இடம் பெற்றுள்ள இந்த வன்முறைத் தாக்குதல்கள் திருத்தந்தையை மிகவும் கவலைப்பட வைத்துள்ளதாகவும் இந்தக் வன்குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் திருத்தந்தை தமது அனுதாபத்தைத் தெரிவிப்பதாகவும் அச்செய்தி கூறுகிறது.

ஈராக் திருப்பீடத்தூதர் பேராயர் Francis Assisi Chullikatt, மொசுல் சிரியன்ரீதி பேராயர் Basile Georges Casmoussa ஆகியோருக்குத் திருத்தந்தையின் இந்த அனுதாபச் செய்தியை அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே.

ஈராக் கிறிஸ்தவ சமூகத்துடனானத் தமது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ள திருத்தந்தை, அதிகத் துன்பங்களை ஏற்படுத்தும் அனைத்து வன்முறைச் செயல்களைக் கைவிட்டு அமைதியை நோக்கிய உறுதியான பாதையில் செல்வதற்கு நன்மனம் கொண்ட அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.