2010-08-09 14:50:25

திருத்தந்தையின் மூவேளை ஜெப உரை.


ஆகஸ்ட் 09, 2010. இறை வருகைக் குறித்த நம் நம்பிக்கை நம் வாழ்வை நாம் முழுமையாக வாழ நம்மை உந்தித் தள்ளுவதுடன் சுயநலப்போக்குகளைக் கைவிட்டு பிறருக்கான அன்புடன் வாழ்வை வித்தியாசமானதாக வாழ அந்நம்பிக்கை உதவுகிறது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

உலகில் அல்ல மாறாக வானுலகில் செல்வங்களைச் சேர்த்து வையுங்கள் என்ற இயேசுவின் அழைப்புடன் கூடிய இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து தன் ஞாயிறு நண்பகல் மூவேளை ஜெப உரையை காஸ்தல் கந்தோல்ஃபோவிலிருந்து வழங்கியத் திருத்தந்தை, நற்செய்தி என்பது பொருட்களையோ நிகழ்வுகளையோப் பற்றியத் தகவல்களை மட்டும் தருவதன்று மாறாக நம் வாழ்வையே மாற்றவல்லது என்றார்.

எங்கு போகிறோம் என்று தெரியாமலேயே இறைவார்த்தையில் மட்டும் நம்ம்பிக்கை கொண்டு தன் பயணத்தைத் துவக்கிய ஆபிரகாமின் எடுத்துக்காட்டு குறித்தும் தன் மூவேளை ஜெப உரையில் எடுத்தியம்பிய பாப்பிறை, இவ்வாரம் திருச்சபையில் சிறப்பிக்கப்படும், தொமினிக்கன் சபையை நிறுவிய புனித தோமினிக், அசிசியின் புனித கிளாரா, மூன்றாம் நூற்றாண்டில் மறைசாட்சியாய் உயிரிழந்த புனித லாரன்ஸ், ஆவ்ஸ்விச் நாத்ஸி வதை முகாமில் உயிரிழந்த புனிதர்கள் எடித் ஸ்டெய்ன் மற்றும் மாக்ஸிமில்யன் கோல்பே ஆகியோரின் வாழ்க்கை எடுத்துக்காட்டுக்களையும் முன்வைத்தார்.








All the contents on this site are copyrighted ©.