2010-08-17 16:26:15

ஹெய்ட்டி நாட்டின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது அமெரிக்க ஆயர் பிரதிநிதிகள் குழு ஒன்று.


ஆகஸ்ட் 17, 2010. ஹெய்ட்டி நாட்டில் மறு கட்டுமானப்பணிகள் அதிகக் காலதாமதமாகவே இடம்பெறுவதாகவும், அந்நாட்டின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இன்னும் பாதுகாப்பு தேவைப்படுவதாகவும் அறிவித்துள்ளது அந்நாட்டில் அண்மையில் பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஆயர் பிரதிநிதிகள் குழு ஒன்று.

இவ்வாண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி ஏற்பட்ட நில அதிர்ச்சியில் பெரும் சேதம் அடைந்த ஹெய்ட்டி நாட்டின் மறு சீரமைப்புப் பணிகள் வெகுகாலதாமதமாக இடம்பெற்று வருவதாக உரைத்த இக்குழுவின் தலைவர் பேராயர் தாமஸ் வென்ஸ்கி, ஹெய்ட்டி நாட்டு மக்களின் வருங்காலம் ஆபத்திலிருப்பதாகவும் கவலையை வெளியிட்டார்.

கத்தோலிக்க அமைப்புகளால் நடத்தப்படும் அநாதை இல்லங்கள் மற்றும் துயர்துடைப்பு நிறுவனங்களையும் பார்வையிட்ட அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இன்னும் அதிக மருத்துவ உதவிகளுக்கும், அவர்களின் பிரிந்த உறவினர்களைக் கண்டுபிடிப்பதற்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசிடம் விண்ணப்பித்துள்ளனர்.

பெற்றோர்களை இழந்த குழந்தைகள் குற்றக் கும்பல்களால் தவறாக நடத்தப்படும் அபாயம் இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.