2010-09-22 16:03:07

கிறிஸ்தவர்கள் மத்தியில் உறுதியான அமைதியும் நல்லிணக்கமும் வளருவதற்கு செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு


செப்.22, 2010. திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவர்கள் மத்தியில் உறுதியான அமைதியும் நல்லிணக்கமும் வளருவதற்கு வியன்னாவில் இடம் பெற்று வரும் கூட்டம் உதவுமாறு எல்லாரும் செபிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கத்தோலிக்க மற்றும் ஆர்த்தாடாக்ஸ் திருச்சபைகள் இணைந்த சர்வதேச இறையியல் உரையாடல் குழு ஆஸ்ட்ரிய நாட்டு வியன்னாவில் இம்மாதம் 20 முதல் 27 வரை கூட்டத்தை நடத்தி வருகிறது.
இக்கூட்டதையொட்டி இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் இவ்வழைப்பை முன்வைத்த திருத்தந்தை, கிறிஸ்தவ வரலாற்றின் முதல் ஆயிரம் ஆண்டின் குறிப்புக்களின் அடிப்படையில் உலகளாவியத் திருச்சபையின் ஒன்றிப்பில் உரோமை ஆயரின் இடம் பற்றி இக்கூட்டம் விவாதித்து வருகிறது என்றார்.
இக்காலத்தில் கிறிஸ்தவத்திற்கு முன்வைக்கப்படும் மாபெரும் சவால்களைக் கருத்தில் கொண்டு திருச்சபைகளுக்கிடையே முழு ஐக்கியம் ஏற்படுவதற்கான வழிகளில் நம் ஆண்டவர் இயேசுவின் விருப்பத்திற்குப் பணிந்தவர்களாய், அதில் நாம் ஈடுபடுவதற்குக் கடமைப்பட்டுள்ளோம் என்றும் திருத்தந்தை கூறினார். இந்தக் குழுவின் பணிக்காகவும் அதன் தொடர் வளர்ச்சிக்காவும் செபிக்குமாறு அழைப்பு விடுத்தத் திருத்தந்தை, நற்செய்திக்கு நாம் இன்னும் தெளிவான விதத்தில் உலகில் சாட்சியம் சொல்வதற்கு உதவியாகக் கிறிஸ்தவ சபைகளிடையே அமைதியும் நல்லிணக்கமும் ஏற்பட செபிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.