2011-02-24 15:43:29

நாசி படையினரால் கொல்லப்பட்ட 335 இத்தாலியர்களின் நினைவுச்சின்னத்தைத் திருத்தந்தை பார்வையிடுவார்


பிப்.24,2011. இரண்டாம் உலகப்போரில் நாசி படையினரால் கொல்லப்பட்ட 335 இத்தாலியர்களின் நினைவுச்சின்னத்தைத் திருத்தந்தை பார்வையிடுவார் என்று வத்திக்கான் செய்தியொன்று கூறுகிறது.
உரோமை நகரின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள Fosse Ardeatine என்ற இடத்தில் உள்ள இந்த நினைவுச்சின்னத்தை வருகிற மார்ச் மாதம் 27ம் தேதி திருத்தந்தை பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1944ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி ஜெர்மானிய காவல் படையினர் மீது இத்தாலிய தேசப்பற்று அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் 33 ஜெர்மானியர்கள் இறந்தனர். இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இறந்த ஒவ்வொரு ஜெர்மானிய வீரருக்கும் பத்து இத்தாலியர்கள் 24 மணி நேரத்தில் கொல்லப்பட வேண்டுமென ஹிட்லரின் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இவ்வாணையைத் தொடர்ந்து, மார்ச் 24ம் தேதி 75 யூதர்கள் உட்பட பொதுமக்கள், சிறைக் கைதிகள் மற்றும் போர் வீரர்கள் என 335 இத்தாலியர்கள் நாசி படையினரால் கொல்லப்பட்டனர்.
இந்நினைவுச் சின்னத்தை மறைந்தத் திருத்தந்தையர் ஆறாம் பவுல் மற்றும் இறையடியார் இரண்டாம் ஜான் பால் ஆகியோர் முறையே, 1965 மற்றும் 1982 ஆகிய இரு ஆண்டுகள் சென்று பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.








All the contents on this site are copyrighted ©.