2011-03-19 14:52:06

அரசின் பாலியல் கல்வி வகுப்புக்குப் பிள்ளைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோருக்குச் சிறைத் தண்டனை


மார்ச்19,2011. ஜெர்மனியில் அரசால் நடத்தப்படும் பாலியல் கல்வியைக் கற்பதற்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்புவதற்கு மறுக்கும் குடும்பங்களின் உரிமைகளுக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்று செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
2006ம் ஆண்டில் தனது பிள்ளைகளை வகுப்புகளுக்கு அனுப்ப மறுத்த Irene Wiens என்ற பெண் தற்போது சிறையில் இருக்கிறார். அவரது வழக்கு ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ளாகியுள்ளது. இதே காரணத்திற்காக இவரது கணவர் ஏற்கனவே ஆறு வாரங்கள் சிறையில் இருந்துள்ளார். இதே காரணத்திற்காக மேலும் நான்கு பெற்றோர் சிறையில் இருப்பதாக அமெரிக்க ஐக்கிய நாட்டை மையமாகக் கொண்ட ஓர் அமைப்பு கூறுகிறது.
அரசால் நடத்தப்படும் பாலியல் கல்வி, தங்களது மத நம்பிக்கைகளுக்கு முரணாக இருக்கின்றது என்று சொல்லி இந்தத் தம்பதியர் தங்கள் பிள்ளைகளை அவ் வகுப்புகளுக்கு அனுப்புவதற்கு மறுத்துள்ளனர்.
இதற்கிடையே, பெற்றோர் தங்களது மத நம்பிக்கையின் அடிப்படையில் பிள்ளைகளுக்கு கல்வி வழங்க உரிமை உள்ளது என்பதை ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட் இவ்வாரத்தில் ஐ.நா.வில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது







All the contents on this site are copyrighted ©.