2011-03-28 16:44:45

நாத்ஸிப் படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்ட இத்தாலியர்களின் நினைவிடத்தைப் பார்வையிட்டார் திருத்தந்தை.


மார்ச் 28, 2011. ஆக்ரமிப்பு ஜெர்மன் படையினரால் 1944ம் ஆண்டு உரோம் நகருக்கு சிறிது வெளியே 335 இத்தாலியர்கள் கொல்லப்பட்ட இடத்தை இஞ்ஞாயிறன்றுச் சென்று பார்வையிட்டு அவர்களுக்காகச் செபித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஃபோஸே அர்தியத்தீனே எனுமிடத்தில் 67 ஆண்டுகளுக்கு முன் மார்ச் 24ந்தேதி இடம்பெற்ற இப்படுகொலைகளின் நினைவு நாளையொட்டி இஞ்ஞாயிறன்று அங்கு சென்று, பலியானவர்களின் கல்லறையைத் தரிசித்த பாப்பிறை, இப்படுகொலைகள் இறைவனுக்கு எதிரான குற்றம் என்றார்.
உரோம் நகரின் ஆயர் என்ற முறையில் அவ்விடத்தை தரிசிக்கச் சென்றதாக உரைத்த திருத்தந்தை, இறை அன்பின் வல்லமையோடு உலகின் ஒவ்வொருவரும் அமைதியில் நடைபோடவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
1944ம் ஆண்டு ஆக்ரமிப்பு ஜெர்மன் காவல்துறை மீது உரோம் நகரில் இத்தாலியத் தேசப்பற்றுக் குழு ஒன்று வெடிகுண்டு வீசியதில் 33 ஜெர்மானியர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட ஒவ்வொரு ஜெர்மானியருக்கும் பத்து இத்தாலியர் கொல்லப்படவேண்டும் என்று ஹிட்லர் தந்த ஆணையின்படி, மறு நாளே 335 இத்தாலியர்கள் ஜெர்மன் படையினரால் கொல்லப்பட்டனர்.








All the contents on this site are copyrighted ©.