2011-05-11 16:42:47

மே 12, 2011.. – வாழ்ந்தவர் வழியில்........,


செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்து நாட்டவரான ஃபுளாரன்ஸ் நைட்டிங்கேல், செல்வம் மிகுந்த ஆங்கிலேய உயர்குடிக் குடும்பமொன்றில் 1820ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி இத்தாலியின் புளாரன்ஸ் நகரில் பிறந்தார்.
கிறிஸ்தவர் என்ற முறையில் தனக்கு இறைவனால் விதிக்கப்பட்டப் பணியாக செவிலியர் சேவையை அவர் உணர்ந்தார். 1837ம் ஆண்டில் அவருக்கு ஏற்பட்ட இந்த உணர்வு, அவரது வாழ்நாள் முழுதும் நீடித்தது. பெற்றோரின், குறிப்பாகத் தாயாரின் எதிர்ப்புக்கும், துன்பத்துக்கும் மத்தியில், செவிலியர் சேவையில் ஈடுபடவேண்டும் எனும் தனது முடிவை புளோரன்ஸ் 1845ம் ஆண்டு அறிவித்தார். இவ்விடயத்தில் தொடர்ந்து செவிலியர் சேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டமை அச்சேவையில் இவரது பெருவிருப்பையும், அவரது காலத்தைய பெண்ணுக்குரிய எதிர்பார்ப்புகளை முறியடிப்பதாகவும் அடையாளம் காணப்படுகிறது. அக்காலத்தில் செவிலியர் சேவை ஒரு மதிப்புள்ள பணியாகக் கருதப்படவில்லை. வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். செவிலியர் சமையலாட்களாகவும் வேலை செய்யவேண்டி இருந்தது.
புளாரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டிருந்தார். ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார் புளாரன்ஸ்.
பிரித்தானியாவில் இருந்த இராணுவ மற்றும் பொது மருத்துவமனைகளில் கவனிப்பையும் சூழலையும் மேம்படுத்த வேண்டுமென்று நைட்டிங்கேல் வாதாடி வந்தார். மருத்துவ வசதிகளுக்கும், நலவியல் நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மருத்துவமனைகள் பற்றிய குறிப்புக்கள் (Notes on Hospitals), அக்காலத்தில் செவிலியர்களுக்கான மிகச் சிறந்த பாடநூலாகக் கருதப்பட்ட செவிலியர் பணி பற்றிய குறிப்புக்கள் (Notes on Nursing), "உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள்" (Notes on Matters Affecting the Health), "பிரித்தானிய இரணுவத்தின் மருத்துவமனை நிர்வாகமும், செயல் திறனும் (Efficiency and Hospital Administration of the British Army) என்பவை ஃபுளாரன்ஸ் எழுதிய புகழ் பெற்ற நூல்களுள் சில.
செவிலியர் சேவையை நிறுவி அதை முன்னேற்றும் பணியிலேயே அவர் தனது வாழ்நாளைக் கழித்தார். மருத்துவமனைத் திட்டமிடலிலும் இவரது கருத்துக்கள் முன்னோடிகளாக இருந்ததுடன், இங்கிலாந்தின் பிற பகுதிகளிலும் ஏனைய நாடுகளிலும் அவை முன்னெடுத்துச் செல்லப்பட்டன.
1896ம் ஆண்டளவிலிருந்து படுத்த படுக்கையானார். 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி இவர் இறந்த போது வெஸ்ட்மின்ஸ்டர் அபியில் புதைக்க அரசு முன்வந்த போதும், அவரது உறவினர்களால் அது மறுக்கப்பட்டது. புளாரன்ஸ் நைட்டிங்கேலின் உடல் ஈஸ்ட் வெலோவிலுள்ள புனித மார்கரட் தேவாலய இடுகாட்டில் புதைக்கப்பட்டுள்ளது.
உலகச் செவிலியர் தினம் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான இவ்வியாழனன்று கொண்டாடப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.