2011-07-19 16:29:38

ஜூலை 20 – வாழந்தவர் வழியில்...


"வானொலியின் தந்தை" என்று அழைக்கப்படும் குலியெல்மோ மார்க்கோனி (ஏப்ரல் 25, 1874 - ஜூலை 20, 1937) 1874ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி இத்தாலி நாட்டில் பொலோனா நகரில் பிறந்தவர். இவரது தந்தை ஓர் இத்தாலிய உயர்குடி மகன். பதினாறு வயதிலேயே, மார்க்கோனிக்கு கம்பியில்லாத் தொலைத் தொடர்பில் ஆர்வம் ஏற்பட்டு ஆழ்ந்து ஆய்வுகள் செய்து வந்தார். 1895ம் ஆண்டு, இவரது 21ம் வயதில் முதன் முதலில் ஓரிரு மைல் தூரத்தில் 'திசைதிரும்பும் மின்கம்பம்' [Directional Antenna] மூலம் தொடர்பு ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றார். இரு ஆண்டுகளுக்குப்பின் கரையிலிருந்து கப்பலுக்கு 18 மைல் தூரம் தொடர்பு அமைத்துக் காட்டினார். 1899ல் ஆங்கிலேயச் சிறுகடலைத் தாண்டி, இங்கிலாந்திற்கும் பிரான்சுக்கும், எந்தவிதக் கால நிலையிலும் இயங்கும், கம்பியில்லாத் தொடர்பை 200 மைல் சுற்றளவுக்கு உண்டாக்கினார். 1905ல் வர்த்தகக் கப்பல்கள், இராணுவப் படைக்கப்பல்கள் பல மார்க்கோனியின் கம்பியில்லாத் தந்திக் கருவியை நிறுவி, கரை நிலையங்களுடன் தொடர்பு கொண்டன. மார்க்கோனியின் இவ்வரிய சாதனங்கள் பிரித்தானிய மற்றும் இத்தாலிய கடற்படைகளுக்கு அதிகமாகப் பயன் பட்டன. 1909ம் ஆண்டு இயற்பியலுக்கான நொபெல் பரிசை Karl Ferdinand Braun உடன் இணைந்து பெற்றார். 1931ம் ஆண்டு, திருத்தந்தை 11ம் பத்திநாதரின் வேண்டுகோளை ஏற்று, மார்க்கோனி வத்திக்கான் வானொலியை வடிவமைத்தார். ‘வானொலியின் தந்தை’ என்று அழைக்கப்படும் மார்க்கோனி நிறுவிய ஒரே வானொலி நிலையம் வத்திக்கான் வானொலி நிலையம் என்பது பெருமைக்குரிய வரலாற்று உண்மை. 1937ம் ஆண்டு, ஜூலை 20ம் தேதி இவர் இறையடி சேர்ந்தார். இவர் காலமான போது, உலக வானொலி நிலையங்கள் அனைத்தும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தின.







All the contents on this site are copyrighted ©.