2011-07-25 16:35:39

வாரம் ஓர் அலசல் – ஒளியை ஏற்று சகோதரா


ஜூலை25,2011. நீதிபதி ஒருவர் நூற்றுக்கணக்கான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்தார். ஒருநாள் அவர் மகனே கொலைக் குற்றத்திற்காக அவர்முன் நிறுத்தப்பட்டார். மகன் செய்த கொலை உறுதியாயிற்று. மகனுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டிய நேரமும் வந்தது. அனைவரும் தீர்ப்புக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அதிர்ச்சியுற்ற நீதிபதி சொன்னார் – “மரண தண்டனை அளிப்பது மனித தர்மத்துக்கு ஏற்றதல்ல. இதனால் குற்றவாளி திருந்த வாய்ப்பில்லை. ஆத்திர வேகத்தில் அவன் கொலை செய்தான். கொலை செய்யத் தூண்டிய ஆவேசம் தணிந்த பின்னர் அவனது புத்தித் தெளிவடையும் தருணத்தில் அவனைத் தூக்கு மேடைக்கு ஏற்றிச் செல்வது மனிதத்தன்மையைக் களங்கப்படுத்துவதாகும்” என்று. நீதிபதி தனது திறமையைக் காட்டி நியாயத் தீர்ப்பு வழங்கினார். இல்லை தனது மகனுக்கென ஒரு தீர்ப்பு வழங்கினார்.
இன்றைய சமுதாயத்தில் மனசாட்சியை அடகுவைத்துவிட்டு நடப்பவர்கள் மலிந்து விட்டார்கள். அதேசமயம் தனது மனசாட்சி சொன்னது போல் நடந்தவர்கள் பலர் அநியாயமாய்ச் சிறைத் தண்டனைகளையும் சித்ரவதைகளையும் அனுபவித்து வருகிறார்கள். இதற்குப் பல எடுத்துக்காட்டுகளை விவரிக்கலாம். சீனாவில் திருத்தந்தைக்கு விசுவாசமாக இருக்கும் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்களும் அருட்பணியாளர்களும் சிறைப்படுத்தப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது. சிலர் இன்றும் சிறையில் இருக்கிறார்கள். ஆயர்கள் GAO Kexian, HAN Dingxiang போன்றோர் சிறையில் மரணம் அடைந்தார்கள். இவர்கள் எப்படி இறந்தார்கள் என்பதற்கானக் காரணம் தெரியாமலே இருக்கின்றது. நாடுகளில் எத்தனையோ சித்ரவதை மரணங்கள் பற்றிக் கேள்விப்படுகிறோம்?
சிரியாவில் Tal al-Mallouhi என்ற பெண், 2009ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி சிரியப் பாதுகாப்பு அதிகாரிகளால் கட்டாயமாகத் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு கைது செய்யப்ட்டாள். இவள் தனது blog மூலமாக, வெளிநாட்டுக்கு உளவாளியாகச் செயல்பட்டாள் என்று குற்றம் சாட்டப்பட்டு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாள். அப்போது இப்பெண்ணுக்கு வயது 17. இவ்வாண்டு ஏப்ரலில் இத்தகவலை வெளியிட்ட ஊடகம் ஒன்று, Tal al-Mallouhi, உலகில் மிக இளம் வயதில் மனச்சான்றின் கைதியாகத் தண்டனை விதிக்கப்பட்டவள் என்று குறிப்பிட்டிருந்தது. அத்துடன், இந்த 17 வயதுச் சிறுமி வெளிநாட்டு அரசுக்கு எத்தகைய தகவல்களை அனுப்பியிருக்க முடியும் என்ற கேள்வியையும் கேட்டிருந்தது. இவ்விளம்பெண் தனது குடும்பத்தினரையோ, வழக்கறிஞரையோ பிற பார்வையாளரையோ சந்திப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பன்னாட்டு மனித உரிமை நிறுவனங்கள் இவ்விளம்பெண் போன்ற மனச்சான்றின் கைதிகள் விடுதலை செய்யப்படுமாறு தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. உலகிலுள்ள முந்நூறுக்கும் மேற்பட்ட இச்சர்வதேச மனித உரிமை நிறுவனங்களில் நீண்டகால வரலாற்றுடன் பரவலான நற்பெயரையும் பெற்றிருப்பது ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற அனைத்துலக மனித உரிமைகள் கழகமாகும். இந்த 2011ம் ஆண்டு இந்தச் ஜூலையில் ஐம்பது வயதைக் கொண்டாடும் இக்கழகம், நாடு, இனம், நிறம், மொழி, பொருளாதாரநிலை, அரசியல், சமயம், மற்றும்பிற தங்களது மனச்சான்றின் நம்பிக்கைகளுக்காகச் சிறையில் இருக்கும் அனைவரும் விடுதலை செய்யப்படுமாறு குரல் கொடுத்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமைகூட, சவுதி அரேபியாவில் தற்போது தயாரிக்கப்பட்டு வரும் பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய இரகசியச் சட்டம் அமைதியானப் போராட்டங்கள் இடம் பெறுவதற்குத் தடையாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியது. இலங்கை அதிபர் ராஜபக்ஷே அமெரிக்காவுக்கு திடீர்ப் பயணம் மேற்கொண்ட போது அவர் மீதான போர்க்குற்றப் புகார்கள் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்தது.
இந்த ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் கழகத்தை, Peter Benenson என்ற ஆங்கிலேய வழக்கறிஞர் 1961 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இலண்டனில் ஆரம்பித்தார். இவர், இதற்கு ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பே “நீதி” என்ற பிரிட்டன் வழக்கறிஞர் கழகத்தைத் தொடங்கி சர்வதேச மனித உரிமைகள் சாசனம் செயல்படுத்தப்பட உழைத்து வந்தவர். Peter Benenson, 1960ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி இலண்டனில் பாதாள இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது போர்த்துக்கல் நாட்டு Coimbra வைச் சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட செய்தியை வாசித்தார். இம்மாணவர்கள் அந்நாட்டின் விடுதலைக்காக, “திராட்சை இரசக் கிண்ணத்தையும் ரொட்டியையும் உயர்த்தி பிடித்து, விடுதலை” என “சியர்ஸ்” சொன்னார்கள் என்ற குற்றத்தின் பேரில் தண்டனை விதிக்கப்பட்டதை அறிய வந்தார். போர்த்துக்கல் நாடு, 1960ல், ஆப்ரிக்காவில் காலனி ஆதிக்கத்தைக் கொண்டிருந்த ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றாக இருந்தது. அச்சமயத்தில் போர்த்துக்கல் நாட்டை, Estado Novo என்ற சர்வாதிகாரி ஆட்சி செய்து வந்தார். இவரது அரசுக்கு எதிரான எச்செயலும் சதிவேலை என்று முத்திரை குத்தப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டது. இப்படித்தான் Coimbra வின் இரண்டு மாணவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் பற்றிய செய்தியே, Peter Benenson ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற அனைத்துலக மனித உரிமைகள் கழகத்தைத் தொடங்க வித்திட்டது. Peter Benenson பேசுகிறார் .....
RealAudioMP3 "மறக்கப்பட்ட கைதிகள் The Forgotten Prisoners" என்ற தலைப்பில் தான் வாசித்த இந்தச் செய்தியை "மன்னிப்புக்கான அழைப்பு 1961 - Appeal for Amnesty, 1961" என்ற தலைப்பில் அப்சர்வர் தினத்தாளில் வெளியிட்டார் Peter Benenson. இந்த மாணவர்களை மனச்சான்றின் கைதிகள் என்றார். இந்த மாணவர்களின் கைது பற்றிப் பின்னாளில் பேசிய Peter Benenson, வாரத்தின் எந்த நாளில் செய்தித்தாளைத் திறந்தாலும் உலகில் எங்காவது யாராவது தனது அரசால் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துக்களைப் பேசியதற்காக அல்லது தனது மதநம்பிக்கைக்காகக் கைது செய்யப்படுவது, சித்ரவதைப்படுத்தப்படுவது அல்லது மரணதண்டனை நிறைவேற்றப்படுவது ஆகிய செய்திகளை வாசிக்க முடிகின்றது என்றார். இவர் ஆரம்பித்த இக்கழகத்தின் முதல் சர்வதேச கூட்டம், 1961ம் ஆண்டு ஜூலையில் நடைபெற்றது. இதில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 1962ம் ஆண்டு பாதிக்குள், இந்தியா, மலேசியா, இலங்கை உட்பட 18 நாடுகளில் இக்கழகம் பரவியது. 1961ம் ஆண்டு, டிசம்பர் 10ம் தேதி உலக மனித உரிமைகள் தினத்தன்று இலண்டன் St.Martin-in-the-Fields என்ற ஆலயத்தில் முதல் சர்வதேச மன்னிப்பு மெழுகுதிரி ஏற்றப்பட்டது. இந்த மெழுகுதிரியே அக்கழகத்தின் அடையாளமாகவும் மாறியது.
இந்த மெழுகுதிரி முள்கம்பிகளால் சுற்றப்பட்டதாக இருக்கின்றது. இதனை வடிவமைக்கும் பொறுப்பும் Peter Benenson டம் கொடுக்கப்பட்டது. இந்த அடையாளத்தைத் தான் வடிவமைத்த போது, “இருளைப் பழிப்பதைவிட ஒளியை ஏற்றுவதே மேல்” என்ற பழமொழியே தனக்கு நினைவுக்கு வந்ததாகத் தெரிவித்தார். பின்னர் இந்தப் பழமொழியே இந்தப் பன்னாட்டுக் கழகத்தின் விருதுவாக்காகவும் அமைந்தது. இலண்டனை மையமாகக் கொண்ட இலாப நோக்கமற்ற ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் கழகம், தற்சமயம் 14 நாடுகளில் 360 குழுக்களைக் கொண்டுள்ளது. மேலும், இக்கழகத்தில் 150க்கு மேற்பட்ட நாடுகளில் முப்பது இலட்சத்துக்கு அதிகமானவர்கள் உறுப்பினர்களாகவும் ஆதரவாளர்களாகவும் இருக்கிறார்கள்.
அரசு-சாரா அமைப்பான இந்த அனைத்துலக மனித உரிமைகள் கழகம், நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படும் போது, குறிப்பாக, பேச்சுச் சுதந்திரமும் சமய சுதந்திரமும் நசுக்கப்படும் போதும் அரசியல் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்படும் போதும் அவை குறித்து பொது மக்களுக்குத் தகவல்களைக் கொடுக்கும் வழிகளில் முனைகின்றது. மனச்சான்றின் கைதிகளின் விடுதலைக்காகச் சிறப்பாக உழைக்கின்றது. 1972க்கும் 1975க்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் ஆறாயிரம் மனச்சான்றின் கைதிகளின் விடுதலைக்காகப் போராடியது. இவர்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் விடுதலை அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்ரிக்க கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா, மியான்மார் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சு கீ உட்பட பல நாடுகளின் மனச்சான்றின் கைதிகள் சார்பாக இக்கழகம் போராடியுள்ளது. அதேசமயம், எந்த ஒரு விவகாரத்தையும் கையில் எடுக்குமுன்னர் அதைப் பற்றிய முழுவிபரங்களை அலசி ஆராய்ந்து பாரபட்சமின்றி செயல்படுகின்றது.
இதற்குச் சான்றாக, இக்கழகத்தின் முதல் இயக்குனர் Sean MacBrideக்கு 1974ல் அமைதி நொபெல் விருதும், 1977ல் இக்கழகத்திற்கு அமைதி நொபெல் விருதும் வழங்கப்பட்டதைக் குறிப்பிடலாம். உலகில் இடம் பெறும் “சித்ரவதைகளுக்கு எதிராக இந்தக் கழகம் எடுத்து வரும் நடவடிக்கைகளைப்” பாராட்டி இவ்விருது வழங்கப்படுவதாக அச்சமயம் நார்வே நொபெல் குழு அறிவித்தது. 1978ல் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமைகள் விருதும் இந்தச் சர்வதேச கழகத்திற்கு வழங்கப்பட்டது. இதன் பொதுச் செயலாளர்களாகப் பல்வேறு நாடுகளிலிருந்து நியமிக்கப்படுகின்றனர். 2001ல் பங்களாதேஷைச் சேர்ந்த ஐரின் கான் நியமிக்கப்பட்டார். 2010ல் இந்தியாவின் சலீல் ஷெட்டி(SalilShetty) நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இம்மாதத்தில் பொன்விழா காணும் ஆம்னஸ்டி அனைத்துலக மனித உரிமைகள் கழகத்திற்கு நமது நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். இந்நாட்களில், பயங்கரவாத இருளின் சக்திகள் அடுத்தடுத்துப் பெரும் துயரங்களை ஏற்படுத்துவது கண்டு உலகமே அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறது. ஒரேயொரு தீமையான செயல் நாட்டையே இரத்த வெள்ளத்தில் ஆழ்த்தி விடுகின்றது. ஆம். மும்பைத் தாக்குதல்கள் நம் கண்முன்னின்று மறையுமுன்னர் நார்வேயில் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல். இந்தப் பயங்கரவாதச் செயலால் பாதிக்கப்பட்ட நார்வே நாட்டினருக்காகச் செபிக்குமாறு இஞ்ஞாயிறு மூவேளை செப உரையிலும் அழைப்பு விடுத்தத் திருத்தந்தை, வெறுப்பு மற்றும் அறிவற்றத் தீமையின் பாதையை மனித சமுதாயம் என்றென்றும் கைவிடுமாறு வருந்திக் கேட்டுக் கொண்டார். அதேசமயம், மனிதன் தீமையிலிருந்து நன்மையைப் பிரித்துப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
RealAudioMP3 அன்பு நேயர்களே, ஷேக்ஸ்பியர் சொன்னது போன்று இவ்வாழ்க்கை நன்மை தீமை எனும் இரண்டு நூல்களால் பின்னப்பட்டது. மனிதன் தான் செய்யும் தீமை பிறருக்குத் தெரியக் கூடாது என்பதற்காக ஒளியைவிட இருளையே அதிகம் நாடுகிறான். ஆதலால், ஆம்னஸ்டி கழகம் சொல்வது போல, இருளில் வாழாமல் ஒளியில் வாழ்வோம். இருளைப் பழித்துக் கொண்டிருப்பதை விடுத்து எங்கும் எதிலும் எப்பொழுதும் ஒளியை ஏற்றிக் கொண்டே இருப்போம்.









All the contents on this site are copyrighted ©.