2011-08-22 15:23:26

இளையோர்தினக் கொண்டாட்டத்தால் இஸ்பெயின் அரசுக்கு இலாபமேயொழிய நஷ்டமில்லை என்கிறது இளையோர்தின ஏற்பாட்டுக் குழு


ஆக.22,2011. திருத்தந்தையுடனான உலக இளையோர் தினக்கொண்டாட்டங்களுக்கு இஸ்பானிய அரசு மக்களின் வரிப்பணத்தை வீணடித்துள்ளது என்ற சில குழுக்களின் குற்றச்சாட்டிற்குப் பதில் வழங்கும் விதமாக, இக்கொண்டாட்டங்களின் வரவு செலவு கணக்கை வெளியிட்டுள்ளது இளையோர் தின ஏற்பாட்டுக் குழு.
இத்தினக் கொண்டாட்டங்களின் மொத்தச் செலவு ஏறத்தாழ 5 கோடி யூரோக்கள் எனக்கூறும் இந்த ஏற்பாட்டுக் குழு, திருப்பயணம் மேற்கொண்ட இளையோரின் பதிவுத்தொகையாக 3 கோடியே 15 இலட்சம் யூரோக்கள் கிட்டியதாகவும், இந்நிகழ்வுக்கு ஆதரவு வழங்கிய சில நிறுவனங்களின் ஊக்கத்தொகையாக 1 கோடியே 65 இலட்சம் யூரோக்கள் கிட்டியதாகவும், தனியார் நிதியுதவிகள் மற்றும் இளையோர் தினம் தொடர்புடைய பொருட்களின் விற்பனைகள் மூலம் 24 இலட்சத்து 82 ஆயிரத்து 621 யூரோக்கள் கிட்டியதாகவும் தெரிவித்துள்ளது.
இளையோருக்கு வழங்கியப் பொருட்கள், வரவேற்பு மற்றும் பயண ஏற்பாடுகள், நகர் சுற்றுச்சூழல் காப்பு நடவடிக்கைகள், தங்கும் வசதிகள் அமைத்தல், என பல்வேறு தயாரிப்பு நடவடிக்கைகளுக்கு என இத்தொகை முழுவதும் செலவழிக்கப்பட்டதாகவும், இஸ்பானிய அரசோ, மத்ரித் நகர சபையோ இதற்கு எவ்வித நிதி உதவியையும் செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளது இந்த இளையோர் தின ஏற்பாட்டுக் குழு.
இளையோர் வருகையால் இஸ்பானிய பொருளாதாரத்திற்கு 10 கோடி டாலர் வருமானம் கிட்டியிருக்கும் என நம்புவதாகவும் இக்குழு தன் கருத்தை வெளியிட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.