2011-10-12 16:03:00

விரைவில் இவ்வுலகில் பிறக்கப் போகும் 700 கோடியைத் தாண்டிய முதல் குழந்தைக்கு நல்லதொரு சூழலை உருவாக்குவது நமது கடமை - ஐ.நா.பொதுச் செயலர்


அக்.12,2011. இந்த மாத இறுதிக்குள் இவ்வுலகில் பிறக்கப் போகும் 700 கோடியைத் தாண்டிய முதல் குழந்தைக்கு நல்லதொரு சூழலை உருவாக்கித் தருவது அனைத்து நாடுகளின் கடமை என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
டென்மார்க் அரசின் முயற்சியால் இச்செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்கள் Copenhagenல் நடைபெறும் 3G Global Green Forum என்ற அகில உலகச் சுற்றுச்சூழல் கருத்தரங்கில் உரையாற்றிய பான் கி மூன் இவ்வாறு கூறினார்.
700 கோடி மக்களைத் தாண்டி வளரவிருக்கும் இவ்வுலக மக்கள் தொகையில், வருங்கால சந்ததி தகுந்த சூழலில் நலமுடன் வாழும் வழிகளை இன்றே அமைப்பது நமது கடமை என்பதை இச்செவ்வாயன்றும், அதற்கு முன், திங்களன்றும் பான் கி மூன் இருவேறு கருத்தரங்குகளில் வலியுறுத்தினார்.

உணவு, எரிபொருள், பொருளாதாரம் ஆகிய மூன்று சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ள நாம், சமத்துவப் பகிர்வில் இன்னும் வளர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று ஐ.நா.பொதுச் செயலர் கூறினார்.
உலகின் 20 விழுக்காடு மக்கள் எரிபொருள் வசதிகள் அதிகமின்றி வாழும்போது, மற்ற 80 விழுக்காடு மக்கள் தேவைக்கும் அதிகமாக எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் உலகின் எரிபொருள் சக்திகள் தீர்ந்து போகும் ஆபத்து நம்மை நெருங்கியுள்ளது என்று பான் கி மூன் எச்சரிக்கை விடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.