2011-11-23 15:18:37

பாகிஸ்தானில் SMS களில் இயேசுகிறிஸ்து என்ற வார்த்தைக்கு இருந்த தடை நீக்கம்


நவ.23,2011. பாகிஸ்தானில் செல்லிடப்பேசிகளில் பரிமாறப்படும் SMS எனப்படும் குறுஞ்செய்திகளில் நீக்கப்பட வேண்டிய வார்த்தைகள் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ள பட்டியலில் இயேசுகிறிஸ்து என்ற வார்த்தையும் சேர்க்கப்பட்டிருப்பதற்கு அந்நாட்டின் கிறிஸ்தவர்கள் கடந்த இரு நாட்களாகக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
குறுஞ்செய்திகளில் பயன்படுத்தக்கூடாத ஆபாசமான, ஆபத்தான வார்த்தைகள் என்று பாகிஸ்தான் அரசு செல்லிடப் பேசி சேவைகளை நடத்தும் நிறுவனங்களுக்கு அளித்திருந்த 1600 வார்த்தைகளில் இயேசுகிறிஸ்து என்ற வார்த்தையும் அடங்கும். இந்த வார்த்தைகளைத் தடை செய்யும் வழிகளைச் செல்லிடப் பேசி நிறுவனங்கள் ஒரு வாரத்திற்குள் நடைமுறைப் படுத்த வேண்டும் என்றும் அரசு ஆணை பிறப்பித்திருந்தது.
கிறிஸ்தவ அமைப்புக்கள் மேற்கொண்ட இந்த எதிர்ப்புக்கு பல்வேறு சமயம் சாரா அமைப்புக்களும் ஆதரவு தந்தன என்று FIDES செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்த எதிர்ப்புக்களைத் தொடர்ந்து, நீக்கப்பட வேண்டிய வார்த்தைகள் என்று தாங்கள் வெளியிட்ட வார்த்தைகளின் பட்டியலை மறு பரிசீலனைச் செய்து விரைவில் வெளியிடுவதாக பாகிஸ்தான் அரசு இச்செவ்வாயன்று கூறியிருந்தது.
புதிய வழிகளில் நற்செய்தியை அறிவிப்பதில் திருச்சபை தற்போது காட்டி வரும் ஆர்வத்தைத் தடை செய்யும் வகையில் பாகிஸ்தான் அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்கொள்ளும் எந்த முயற்சியையும் தலத்திருச்சபை எதிர்க்கும் என்று பாகிஸ்தான் ஆயர் பேரவையின் தொடர்புசாதன பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை ஜான் ஷகீர் நதீம் கூறினார்.
மதங்களிடையே நல்லுறவு என்ற துறையின் அமைச்சராகப் பணியாற்றும் Akram Gill என்ற கத்தோலிக்கர், தொடர்பு சாதன அமைச்சருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளாலும், அமைச்சரவையில் கூறிய கருத்துக்களாலும் இயேசுகிறிஸ்து என்ற வார்த்தை இந்தப் பட்டியலில் இருந்து இப்புதனன்று நீக்கப்பட்டது என்று FIDES செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.