2012-01-27 15:39:34

திருப்பீடப் பேச்சாளர் : நாத்சி யூதஇனப் படுகொலைகள் மறக்கப்படக் கூடாது


சன.27,2012. ஒவ்வொரு மனிதரின் தவிர்க்க இயலாத மனித மாண்பு, மனித உரிமைகளின் உலகளாவியத்தன்மை, மனித உரிமைகளைக் காப்பதற்கான அர்ப்பணம் ஆகியவை பற்றிப் பேசும் போது, இரண்டாம் உலகப் போரின் போது நடத்தப்பட்ட யூதஇனப் படுகொலை குறித்த நினைவு முன்னிறுத்தப்பட வேண்டுமென்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
67 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1945ம் ஆண்டு சனவரி 27ம் நாளன்று, ஆஷ்விஷ் வதைப்போர் முகாமின் கொடூரம் முடிவுக்கு வந்தது, அந்த நாளே அனைத்துலக யூதஇனப் படுகொலை நினைவு தினமாக அனுசரிக்கப்படுகின்றது என்று கூறியுள்ளார் அருள்தந்தை லொம்பார்தி.
Octava Dies என்ற வத்திக்கான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவ்வாறு பேசியுள்ள அருள்தந்தை லொம்பார்தி, 67 ஆண்டுகள் ஒன்றும் சிறிது காலம் அல்ல, அந்த இனப்படுகொலை கொடூரங்களை நேரடியாகப் பார்த்தவர்கள் குறைந்து வருகிறார்கள், அறியாமையினால் மட்டுமல்ல, அரசியல், இன அல்லது மத நோக்கங்களால் இந்நிகழ்வு புறக்கணிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
எனவே அறிவற்ற விதத்தில் நடத்தப்பட இக்கொடுமைகளை மறக்க முடியாது மற்றும் மறக்கக் கூடாது என்றும் உரைத்துள்ள திருப்பீடப் பேச்சாளர், இவ்வுலக தினத்தில் இஸ்ரேல் மக்களோடும் இதில் பாதிக்கப்பட்டவருடனும் நமது தோழமையுணர்வைத் தெரிவிப்போம் என்று கேட்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.