2012-02-21 15:19:18

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 104


RealAudioMP3 வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.
இது எனது 8ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலே முதல் பக்கத்திலே இடம்பெற்ற செய்யுள். இயற்கையில் உறையும் இறைவனைக் கண்டு வாழ்த்தி, வணங்கிய மாணிக்கவாசகரின் திருவாசகப்பாடல்.
நீர், நிலம், மரம், செடி, கொடி, விலங்கு, பறவை, மனிதர்கள், ஆவியுலகு, கதிரவன், நிலா முதலிய அனைத்தும் இறைவன் வாழும் கோவில்கள். இவ்வாறு நாம் பார்க்கின்ற, தொடுகின்ற, பயன்படுத்துகின்ற எல்லாவற்றிலும் இறைவன் இருக்கிறார். இவ்வாறு நம்மைச் சுற்றியுள்ள எல்லாமே இறைவனின் படைப்புகள். இறைவன் நம்மை அன்பு செய்கிறார் என்பதற்கு நம்மைச் சுற்றியுள்ள இயற்கையை விட மிகப்பெரிய சான்று தேவையில்லை. அப்படிப்பட்ட இறைவனை அவரது படைப்புகளிலே காண்கிறோமா? இயற்கையில் உறைந்திடும் இறைவனிடம் பேசுகிறோமா? இயற்கை நம்மோடு பேசுகிறதா? இயற்கைக்கும் நமக்கும் உள்ள உறவு எப்படி உள்ளது? என்ற கேள்விகள்தான் இன்றைய மையச்சிந்தனை.

நாம் இன்று சிந்திப்பது திருப்பாடல் 104. இறைவனின் படைப்பைக் கண்டு வியந்து ஆசிரியர் இத்திருப்பாடலை எழுதியிருக்கிறார். மலையிலிருந்து அருவியாகக் கொட்டுகிற தண்ணீர் பள்ளத்தாக்குகளில் துள்ளிக்குதித்து, சலனமின்றி சமவெளியை அடைந்து, கடலில் கலக்கும் அழகைக் கண்டு, என்னே! இறைவனின் படைப்பு என இரசித்து தன் வியப்பை வெளிப்படுத்துகின்றார் இத்திருப்பாடல் ஆசிரியர்.
6 முதல் 8 முடிய உள்ள சொற்றொடர்கள்.
அதனை ஆழ்கடல் ஆடையென மூடியிருந்தது; மலைகளுக்கும் மேலாக நீர்த்திரள் நின்றது;
நீவீர் கண்டிக்கவே அது விலகி ஓடியது; நீவீர் இடியென முழங்க, அது திகைப்புற்று ஓடியது;
அது மலைகள்மேல் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, அதற்கெனக் குறித்த இடத்தை அடைந்தது;
கால் நடைகளுக்குப் புல்லையும், மானிடர்களுக்கு பயிர்வகைகளையும், உணவு வகைகளையும் கொடுக்கும் இறைவன் பறவைகளுக்குக் கூடுகளையும், முயல்களுக்கு பாறை இடுக்குகளையும் புகலிடமாகத் தருகிறார் என இறைபராமரிப்பைக் கண்டு வியக்கிறார்.
14 மற்றும் 17, 18 சொற்றொடர்கள்
கால்நடைகளுக்கெனப் புல்லை முளைக்கச் செய்கின்றீர்; மானிடருக்கெனப் பயிர்வகைகளை வளரச் செய்கின்றர்; இதனால் பூவுலகினின்று அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கின்றீர்;
அங்கே பறவைகள் கூடுகள் கட்டுகின்றன; தேவதாரு மரங்களில் கொக்குகள் குடியிருக்கின்றன.
உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்குத் தங்குமிடமாகும்; கற்பாறைகள் குழிமுயல்களுக்குப் புகலிடமாகும்.
காட்டுவிலங்குகள் இறைதேட இரவை வரவழைத்து, அவை உறங்குவதற்கு கதிரவனையும் எழச்செய்கிறார் என இறைஞானத்தைக் கண்டு ஆச்சர்யமடைகிறார்.
20 முதல் 22 முடிய உள்ள சொற்றொடர்கள்.
இருளை நீர் தோன்றச் செய்யவே, இரவு வருகின்றது; அப்போது, காட்டு விலங்குகள் அனைத்தும் நடமாடும்.
இளஞ்சிங்கங்கள் இரைக்காகக் கர்ச்சிக்கின்றன; அவை இறைவனிடமிருந்து தங்கள் உணவைத் தேடுகின்றன.
கதிரவன் எழவே அவை திரும்பிச் சென்று தம் குகைகளுக்குள் படுத்துக்கொள்கின்றன

இத்திருப்பாடலின் ஆசிரியர் இயற்கையின் இரசிகர் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. இப்பாடலை எழுதுவதற்கு முன்பு இறைவனின் படைப்புகளை நினைத்து வியந்திருக்க வேண்டும். படைத்ததோடு விட்டுவிடாமல் அவற்றைப் பராமரிக்கும் அறிவையும், ஞானத்தையும் இரசித்திருக்க வேண்டும். எனவேதான் இத்திருப்பாடலை திருவிவிலியத்திலேயே இறைவனின் படைப்பின் அழகைச் சொல்லும் மிகச்சிறந்த பாடல் என்று விவிலிய ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட இறைவனின் படைப்புகளை நாம் இரசித்திருக்கிறோமா? அவற்றில் இறைவனின் வல்லமையையும், ஞானத்தையும் கண்டு உணர்ந்திருக்கிறோமா?
எங்கேயாவது எப்போதாவது சுற்றுலா செல்லுகின்ற போது 'அப்பா, எவ்வளவு அழகு!' எனச் சொல்கிறோம். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் இரசிக்கிறோமா? இரசிப்பது என்றால் என்ன? ஒரு பொருளை ரசிக்கிறோமென்றால் நாம் அதன் அழகில் மயங்குகிறோம், அதன் வயப்படுகிறோம், நம்மையே மறக்கிறோம். அதன்பிறகு அதை உருவாக்கியது யார்? உருவாக்கப்பட்ட விதம் என்ன? உருவாக்கியவரின் வேறு படைப்புகள் என்னென்ன? என அலசி ஆராய்கிறோம். அதன்பிறகு அவரைப்பற்றி பெருமையாகப் பேசுகிறோம். அதே போல நாம் இறைவனின் படைப்பைப் பார்த்து இரசிக்கும்போதுதான் அந்தப் படைப்பின் வழியாக அவரையும், அவரது வல்லமையையும் நாம் மேலும் புரிந்துகொள்ள முடியும். ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காணவேண்டும் என்பதைப் போல இறைவனின் படைப்பிலே அவரைக் காணவேண்டும் என்பதைப் பின்வரும் சொற்றொடர்கள் நமக்குச் சொல்கின்றன. சாலமோனின் ஞானம் 13:1-4
கடவுளை அறியாத மனிதர் அனைவரும் இயல்பிலேயே அறிவிலிகள் ஆனார்கள். கண்ணுக்குப் புலப்படும் நல்லவற்றினின்று இருப்பவரைக் கண்டறிய முடியாதோர் ஆனார்கள். கைவினைகளைக் கருத்தாய் நோக்கியிருந்தும் கைவினைஞரை அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
மாறாக, தீயோ, காற்றோ, சூறாவளியோ, விண்மீன்களின் சுழற்சியோ, அலைமோதும் வெள்ளமோ, வானத்தின் சுடர்களேதாம் உலகை ஆளுகின்ற தெய்வங்கள் என்று அவர்கள் கருதினார்கள்.
அவற்றின் அழகில் மயங்கி அவற்றை அவர்கள் தெய்வங்களாகக் கொண்டார்கள் என்றால், அவற்றிற்கெல்லாம் ஆண்டவர் அவற்றினும் எத்துணை மேலானவர் என அறிந்துகொள்ளட்டும்; ஏனெனில் அழகின் தலையூற்றாகிய கடவுளே அவற்றை உண்டாக்கினார்.
அவற்றின் ஆற்றலையும் செயல்பாட்டையும் கண்டு அவர்கள் வியந்தார்கள் என்றால், அவற்றையெல்லாம் உருவாக்கியவர் அவற்றைவிட எத்துணை வலிமையுள்ளவர் என்பதை அவற்றிலிருந்து அறிந்து கொள்ளட்டும்.

இயற்கையைப் பற்றிப் பேசும்போது, சுற்றுச்சூழலின் பாதுகாவலர் அசிசி நகர் புனித பிரான்சிஸ் பற்றி பேசாமல் இருக்கமுடியாது. வானம், பூமி, விலங்குகள், மலர்கள், மனிதர்கள் என எல்லாமே இறைவனின் படைப்புகள். அனைத்திற்கும் அவரே தந்தை. படைப்புகள் அனைத்தும் அவர் பிள்ளைகள். எனவே இயற்கை நமது சகோதரன் மற்றும் சகோதரி என்று சொன்னார். நீர், நெருப்பு, காற்று, விளக்கு, முயல், பறவைகள் என எல்லா படைப்புகளையுமே சகோதர சகோதரிகளாக பாவித்து அப்படியே அழைத்தார். இறைவன் படைத்ததால் அவருக்கே உரிய நற்பண்புகள் அவர் படைத்த படைப்புகளிலும் இருக்கின்றன. எனவே படைப்பனைத்தையும் மதிக்க வேண்டும். அவரது படைப்புகளான நாம் மற்றதொரு படைப்பை பாதுகாக்க வேண்டும். இறைவன் இயற்கையில் பிரசன்னமாயிருக்கிறார். இயற்கை வழியாகத்தான் நம்மைக் காத்து வருகிறார். சூரியன் நம் சகோதரன். அவர் வழியாக இறைவன் நமக்கு ஒளியைத் தருகிறார். நிலா நம் சகோதரி. அவர் வழியாக இரவை ஒளிர்விக்கிறார். நீர் நம் சகோதரன். அவர் வழியாக நம் தாகத்ததைத் தணிக்கிறார் என ஒட்டு மொத்த இயற்கையை நம் உடன்பிறந்தவர்களாக்கினார். “காற்றின் வழியாக, மேகத்தின் வழியாக, காலநிலையின் வழியாக எங்கள் வாழ்வை நடத்தும் இறைவா உம்மைப் போற்றுகிறோம், பகலிலே சகோதரன் சூரியன் வழியாக ஒளியைத் தந்து எங்களை வழிநடத்தும் இறைவா உமது எல்லா படைப்புகளோடு சேர்ந்து உம்மை போற்றுகிறோம்” என்று செபித்தார். பறவைகளையும், மலர்களையும் மனிதர்களைப் போல அறிவு கொண்டவைகளாகப் பாவித்து இறைவனைப் போற்றுங்கள் என்று போதித்தார். சாலையில் செல்லும்போது புழுக்களைக் கண்டால், மிதித்துவிடக் கூடாது என்பதற்காக அவற்றின் பாதுகாப்பிற்கு வழிசெய்தாராம். பிற உயிர்களை ஒட்டு மொத்த இயற்கையையே பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு என தன் வாழ்வால் சொல்லிக் கொடுத்தார்.

இறைவன் இவ்வுலகையும் பிற உயிரினங்களையும் தன் சொல்லால் படைத்தார். ஆனால், மனிதர்களாகிய நம்மை மட்டும் தன் ஆவியைத் தந்து உருவாக்கினார். ஏனெனில் அவரது உருவையும், சாயலையும் கொடுத்து நம்மை அவரது பங்காளிகளாக படைத்திருக்கிறார். நாம் அவரது உடன்படைப்பாளிகள். எனவேதான் இவ்வுலகை பராமரிக்கும் பொறுப்பை நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார்.
தொடக்கநூல் 1:28
கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, 'பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்' என்றார்.

நாம் இருக்கும் ஒன்றிலிருந்து மற்றொன்றைத் தயாரிக்கிறோம். ஆனால் இறைவன் இல்லாததிலிருந்து புதிதாகப் படைக்கிறார். நாம் உருவாக்கியது சிறிதாக இருந்தாலும் அதைப்பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறோம். அது
விவிசாயி விளைவிக்கும் நெல்மணியாக இருக்கலாம்
நெசவாளி நூற்கின்ற துணியாக இருக்கலாம்
ஆசிரியர் உருவாக்கும் மாணவ மாணவிகளாக இருக்கலாம்
மென்பொருள் பொறியாளர் உருவாக்கும் மென்பொருளாக இருக்கலாம்
சிறிதோ பெரிதோ அதை நாம் உருவாக்கும்போது அது நமக்கு மகிழ்ச்சி, பெருமிதம்
ஆனால் இறைவன் படைத்த இம்மாபெரும் உலகை நாம் பொறுப்பில்லாமல் பாதுகாப்பற்ற முறையில் தான் பயன்படுத்துகிறோம். ஒரு பொருளை நாம் உருவாக்கும்போது அதன் உருவாக்கத்தில் ஏற்பட்ட கஷ்டங்களையும், இடையூறுகளையும் நாம் நன்கு அறிவோம். நம்மைப் பொறுத்தவரை உருவாக்கப்பட்ட பொருளின் மதிப்பும் அதற்கான நமது உழைப்பும் விலைமதிப்பில்லாதது. நாம் உருவாக்கினவை நமக்குக் கருவூலம். அவற்றைப் பார்த்து, பார்த்து இரசிக்கிறோம், பெருமையடைகிறோம் அதைப் பிறருக்கு சொல்வதிலும் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் பிறர் உருவாக்கத்தில் உருவானவொன்றை நாம் அப்படிப் பார்ப்பதில்லை. அதன் உருவாக்கத்தின் போது அவர்கள் எதிர்கொண்ட இடையூறுகளையோ, அதற்காக அவர்கள் எடுத்துக் கொண்ட, மேற்கொண்ட கடின உழைப்பையோ நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை. மாறாக அப்பொருள்களின் பயன்பாட்டை மட்டுமே பார்க்கிறோம். அதே போல இறைவனின் படைப்பபைக் கண்டு இரசிப்பதுமில்லை; சிலர் இரசித்தாலும் அவரது வல்லமையை உணர்வதில்லை; சிலர் உணர்ந்தாலும் பலர் அவற்றைப் பாதுகாப்பதில்லை.

இயற்கை வழி ஆன்மீகம் என்பது இயற்கை வழி இறைவனை அடைவது மட்டுமல்ல. அவ்வியற்கையைக் கண்ணும் கருத்துமாகப் பேணிக்காப்பது இயற்கையை அழிக்காதிருப்பது, மரம் செடி கொடி விலங்குளையும் அன்பு செய்வது போன்றவை இறைவன் நமக்குக் கொடுத்த பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுத்த வேண்டும். மாணிக்கவாசகரின் திருவாசகத்திலிருந்து ஒரு பகுதியோடு இன்றைய சிந்தனையை நிறைவு செய்வோம்.
பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி








All the contents on this site are copyrighted ©.