2012-04-13 15:05:28

இலங்கை ஆயர்கள் : தலைவர்கள் ஒப்புரவுப் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு உயிர்த்த கிறிஸ்து வழி காட்டுவாராக


ஏப்.13,2012. இலங்கையில் கடந்தகாலக் காயங்கள் குணப்படுத்தப்படவும், வறுமையால் பாதிக்கப்பட்டோரின் துன்பங்கள் நினைவுக்கூரப்படவும் வேண்டுமென கொழும்புப் பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் கேட்டுக் கொண்டார்.
உயிர்ப்புப் பெருவிழாச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ள கர்தினால் இரஞ்சித், ஒப்புரவு, நல்லிணக்கம் மற்றும் ஒன்றிப்பின் பாதையில் இலங்கையை வழிநடத்திச் செல்ல அரசியல் தலைவர்களுக்காக, உயிர்த்த கிறிஸ்துவின் கொடையாம் தூய ஆவியிடம் செபிக்குமாறு கேட்டுள்ளார்.
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக அண்மையில் ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து நாட்டில் பதட்ட நிலைகள் ஏற்பட்டதை நாம் ஏற்க வேண்டும் என்றும் கர்தினால் இரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
ஒப்புரவு விவகாரம், இலங்கையின் மிகப்பெரும் சவாலாக இருக்கின்றது எனவும், எதிர்காலத்துக்கானப் பயணத்தில் கடந்த காலம் குறித்த விழிப்புணர்வு அவசியம் எனவும் கொழும்புப் பேராயரின் செய்தி கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.