2012-05-02 15:27:19

கொடுமை அனுபவிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள்: கொத்தடிமையாக 50 ஆயிரம் பேர்


மே,02,2012. தமிழகத்தைச் சேர்ந்த 50 ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்கள், வடஇந்திய மாநிலங்களில் கொத்தடிமையாக இருப்பதாக, மதுரையில் நடந்த குழந்தை உழைப்பு எதிர்ப்பு தின மாநில கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
வடஇந்திய மாநிலங்களில் முறுக்கு, மிட்டாய், அப்பளம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, தமிழகக் குழந்தைகளை அனுப்ப நிறைய தரகர்கள் உள்ளனர். 7 முதல் 15 வயதுக்குட்பட்டக் குழந்தைகள், தொழிலுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
குழந்தை ஒன்றுக்கு, ஆண்டுக்கு ரூ.25,000 கூலி நிர்ணயிக்கப்பட்டு, முன் பணமாக, ரூ.10 ஆயிரம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, குழந்தையை அழைத்துச்செல்லும் தரகர்கள், அதன்பின் பேசியபடி பணம் தருவதில்லை என்று கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
தென்மாவட்டத்திலிருந்து, 50,000 குழந்தைத் தொழிலாளர்கள் வடஇந்திய மாநிலங்களில் கொத்தடிமையாக உள்ளனர் என்றும், அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு ஆர்வலர்கள் கூறினர்.
சட்டத்தில் குழந்தைகளுக்கான வயதில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்றும், கட்டாயக் கல்வி சட்டத்திற்கு முரணாக உள்ள, 1986ன் குழந்தைத் தொழிலாளர் சட்டத்தைத் திரும்ப பெறவேண்டும் என்றும் குழந்தை உழைப்பு எதிர்ப்பு விழிப்புணர்வை வளர்க்கும் தென்பகுதி அமைப்பாளர் வனராஜன் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.