2012-05-14 15:01:05

மியான்மாருடன் இந்தியா கூட்டுறவு முயற்சிகள் மேற்கொள்வது இரு நாடுகளுக்கும் மிகுந்த பயனளிக்கும்


மே,14,2012. மக்களாட்சியை நோக்கி நடைபயிலும் மியான்மாருடன் இந்தியா, அதிலும் சிறப்பாக இந்தியாவின் வடகிழக்குப் பகுதி கூட்டுறவு முயற்சிகள் மேற்கொள்வது இரு நாடுகளுக்கும் மிகுந்த பயனளிக்கும் என்று இயேசு சபை அருள்பணியாளர் Walter Fernandes, கூறினார்.
இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளின் வர்த்தகத் தலைநகர் என்று கருதப்படும் குவகாத்தியில் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்த வடகிழக்குச் சமுதாய ஆய்வு மையத்தின் இயக்குனரான அருள்தந்தை Fernandes, இவ்விரு நாடுகளுக்கும் இடையே நிலவவேண்டியக் கூட்டுறவு முயற்சிகள் குறித்து பேசினார்.
சட்டத்திற்குப் புறம்பாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் போதைப் பொருள், ஆயுதம், மனிதர்கள் போன்ற வர்த்தகத்தால் இரு நாடுகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக் காட்டிப் பேசிய அருள்தந்தை Fernandes, அதிகாரப் பூர்வமான, ஆக்கப்பூர்வமான கூட்டுறவு முயற்சிகள் இரு நாடுகளையும் முன்னேற்றும் என்று எடுத்துரைத்தார்.
மியான்மாரிலும், இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளிலும் வாழும் பழங்குடியினரின் பிரச்சனைகள் குறித்தும் இக்கருத்தரங்கில் பேசப்பட்டன என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.