2012-06-02 14:36:56

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 கல்லூரி ஒன்றில் வகுப்பு ஆரம்பமானது. ஆசிரியர் கரும்பலகையில் ஒரு புள்ளியை வரைந்தார். பின்னர் மாணவர்களிடம், "இது என்ன?" என்று கேட்டார். மாணவர்கள் சிரித்தனர். ஒருவர் எழுந்து, "அது ஒரு புள்ளி" என்றார். ஆசிரியர், "அவ்வளவுதானா?" என்று கேட்டதும், மாணவர் கொஞ்சம் சிந்தித்தார். பின்னர், "ஓகே, அது கரும்பலகையில் சாக்பீசால் வைக்கப்பட்ட ஒரு புள்ளி" என்று கூறினார். தான் சரியான, தெளிவான பதிலைச் சொல்லிவிட்டதாக மாணவர் பெருமையுடன் புன்னகைத்தார். ஆசிரியர் மாணவர்களிடம், "இது மிகவும் சரியான, பொருத்தமான பதில். ஆனால், நேற்று இதே கேள்வியை நான் குழந்தைகள் வகுப்பில் கேட்டேன். உடனே அங்கிருந்த குழந்தைகள் 'இது ஒரு சிட்டுக் குருவியின் கண், மழைத்துளி, விண்மீன், இரவில் தூரத்தில் வரும் இரயிலின் முன் விளக்கு' என்று 50க்கும் அதிகமான பதில்களைச் சொன்னார்கள்" என்றார். ஆசிரியர் இவ்வாறு சொன்னதும், கல்லூரி மாணவர்களிடையே அமைதி நிலவியது. ஆசிரியர் வைத்த புள்ளிக்கு மிகச் சரியான, பொருத்தமான பதிலைமட்டுமே தங்களால் தர முடிந்தது. ஆனால், குழந்தைகளோ அந்தப் புள்ளியைத் தாண்டி, பொருளுள்ள பதில்களைத் தந்தனர் என்பதை அந்த மாணவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.

குழந்தைகளுடன் பேசியிருக்கிறோம், பழகியிருக்கிறோம். நாமும் குழந்தைகளாய் இருந்திருக்கிறோம். குழந்தைகளின் அறிவுக்கூர்மை, கற்பனைத்திறன், உண்மைகளை அவர்கள் பார்க்கும் கண்ணோட்டம், பல நேரங்களில் நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. குழந்தைகளைப்பற்றி எண்ணிப்பார்க்க, குழந்தைகளைப்போல நமது எண்ணங்களை வளர்க்க, இந்த ஞாயிறு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
இந்த ஞாயிறு, மூவொரு கடவுள் பெருவிழா. இந்த ஞாயிறு, இத்தாலியின் மிலான் நகரில் அகில உலக குடும்ப மாநாடு நிறைவடைகிறது. மூவொரு இறைவனையும், குடும்பங்களையும் சிந்திக்கும் இன்று, குழந்தைகளுக்காக நமது சிறப்பான சிந்தனைகளையும், செபங்களையும் எழுப்புவோம்.

மூவொரு இறைவன் என்றதும், நம்மில் பலருக்கு புனித அகுஸ்தின் பற்றிய கதை நினைவுக்கு வந்திருக்கும். கடற்கரையில் நிகழ்ந்த இந்தக் கதையில், இறையியல் அறிஞரான அகுஸ்தின் ஒரு குழந்தையிடம் பாடங்களைக் கற்றார். நம் இறைவன் மூன்று ஆட்களாய், ஒரே கடவுளாய் இருப்பது எவ்விதம் சாத்தியம் என்று புனித அகுஸ்தின் தன் மூளையைக் கசக்கிப் பிழிந்து விடை தேடிக்கொண்டிருந்தார். அந்தக் கடற்கரையில் ஒரு சிறுவன் சிறியதொரு சிப்பியில் கடல் நீரை அள்ளி எடுத்து, கரையில் இருந்த ஒரு குழியில் ஊற்றிவிட்டு, மீண்டும் கடலுக்குச் சென்று நீர் எடுத்து வந்தான். சிறுவன் இதுபோல் நான்கைந்து முறை செய்ததைப் பார்த்த அகுஸ்தின் சிறுவனிடம் சென்று, "என்ன செய்கிறாய்?" என்று கேட்டார். சிறுவன் அவரிடம், "பார்த்தால் தெரியவில்லையா? நான் இந்தக் கடல் நீர் முழுவதையும் அந்தக் குழிக்குள் ஊற்றிக் கொண்டிருக்கிறேன்." என்றான்.
அந்தக் குழந்தைத்தனமான பதிலைக்கேட்டு, இலேசாகப் புன்னகைத்த அகுஸ்தின், அச்சிறுவனிடம், "இந்தக் கடல் நீர் முழுவதையும் உன்னால் எப்படி அந்தச் சிறு குழிக்குள் ஊற்றிவிட முடியும்?" என்று கேட்டார். அந்தச் சிறுவன் அகுஸ்தினை ஆழமாகப் பார்த்து, "உங்களுடைய சிறிய அறிவைக்கொண்டு அளவுகடந்த கடவுளை எப்படி உங்களால் புரிந்துகொள்ள முடியும்?" என்று பதில் கேள்வி கேட்டுவிட்டு, மறைந்து போனான்.
அன்று அகுஸ்தின் அக்குழந்தையிடம் கற்றுக் கொண்டது மூவொரு கடவுளைப் பற்றிய உண்மை அல்ல. தன்னைப் பற்றிய உண்மை. குழந்தையிடம் கற்றுக்கொண்ட பாடம் அகுஸ்தினை வாழ்நாள் முழுவதும் பணிவுடன் வாழவைத்தது. முக்கியமாக, கடவுளைப்பற்றிய சிந்தனைகளைப் பணிவுடன் கற்றுக்கொள்ள வைத்தது. வாழ்க்கை என்ற பள்ளியில் நாம் பணிவுடன் காலடி எடுத்துவைத்தால், நம்மைப்பற்றி, உலகைப்பற்றி, கடவுளைப்பற்றி பல அழகான உண்மைகளைக் கற்றுக்கொள்ள முடியும். குழந்தைகளுக்கு இந்தப் பணிவு இயல்பாகவே உள்ளது. எனவேதான், அவர்கள் பல ஆழமான உண்மைகளை எளிதாகப் புரிந்து கொள்கிறார்கள்.

குழந்தைகள் வழியாக நாம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள் பல உள்ளன. ஆனால், குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தர வேண்டியது பெரியவர்களே என்று நாம் தீர்மானித்துவிட்டதால், குழந்தைகளிடமிருந்து வரும் மிக அருமையான பாடங்களை நாம் கற்றுக்கொள்ள மறுக்கிறோம். அவ்வப்போது நமக்குள் வாழும் குழந்தை மனங்களுக்குச் செவிசாய்த்தாலே பல அற்புதமானப் பாடங்களைப் பயிலமுடியும்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசுத்தலைவராக இருந்த Theodore Roosevelt பற்றி சொல்லப்படும் ஒரு கதை இங்கு உதவியாக இருக்கும். Rooseveltம் அவரது நெருங்கிய நண்பர் Bernard Baruchம் ஒருநாள் வெள்ளை மாளிகையில் சந்தித்து, அன்று முழுவதும் உலகப் பிரச்சனைகளைப்பற்றிப் பேசினார்கள். இரவு அவர்கள் உறங்கச் செல்வதற்குமுன், Roosevelt தன் நண்பரிடம், "வாருங்கள், நாம் தோட்டத்திற்குச் சென்று, விண்மீன்களைச் சிறிதுநேரம் பார்த்துவிட்டு வருவோம்" என்றார். Rooseveltன் இந்த யோசனையை நண்பர் புரிந்து கொள்ளவில்லை. இருந்தாலும், அவர் உடன் சென்றார். அவர்கள் இருவரும் தோட்டத்தில் நின்று வானத்தில் கண்சிமிட்டிய விண்மீன்களை ஒரு சில நிமிடங்கள் அமைதியாகப் பார்த்தனர். பின்னர் Roosevelt நண்பரிடம், "நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது இப்போது தெளிவாகிவிட்டது. வாருங்கள் உறங்கச் செல்வோம்." என்று சொன்னார்.
அமெரிக்க அரசுத்தலைவராக இருப்பதால், தானே இந்த உலகம் முழுவதையும் சுமப்பதுபோல் Roosevelt உணர்வதற்கு ஒவ்வொரு நாளும் வாய்ப்புக்கள் அதிகம் இருந்தன. ஆனால், இரவில் அவர் மேற்கொண்ட இந்த ஒரு சிறு பயிற்சியின் மூலம் தனது உண்மை நிலையை அவரால் உணரமுடிந்தது. மேலோட்டமாகப் பார்த்தால், Roosevelt செய்தது குழந்தைத்தனமான ஒரு செயலாக நமக்குத் தெரிகிறது. ஒருவேளை, அந்த விண்மீன்களை அமைதியாகப் பார்த்தபோது, Rooseveltன் மனதில் ‘Twinkle twinkle little star’ என்ற குழந்தைகள் பாடலும் ஒலித்திருக்கலாம். குழந்தையின் மன நிலையோடு Theodore Roosevelt உறங்கச்சென்றது அவர் தனக்குத் தானே சொல்லித்தந்த ஓர் அழகிய பாடம். கடவுளுக்கு முன், அவரது படைப்புக்கு முன், நாம் யார் என்பதை உணர்ந்தால், அவரை நம் அறிவுக்குள் அடக்கிவிடும் முயற்சிகள், அடக்கிவிட முடியும் என்ற கனவுகள் விலகி, உண்மைக் கடவுளை உய்த்துணர முடியும். மூவொரு இறைவனின் பெருவிழாவன்று இத்தகையதொரு குழந்தை மனதுடன் இறைவனை நாடிவரும் வரத்தை வேண்டுவோம்.

நம் இறைவன் மூவொரு கடவுள் என்பதையே நமக்கு அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் கூறியது, பலரை வியப்பில் ஆழ்த்தியது. வேறு பலரை கோபத்தில் ஆழ்த்தியது. இயேசுவின் காலம்வரை இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகமான கடவுள், தானாக இருக்கும், தனித்திருக்கும், தனித்து இயங்கும் ஒரு கடவுள். தனித்திருக்கும் கடவுளை ஒரு கூட்டு உறவாய், குடும்பமாய் அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு அறிமுகம் செய்துவைத்த மூவொரு இறைவனின் இலக்கணம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? நாம் வழிபடும் இறைவனின் இலக்கணமே உறவு. நம் இறைவன் உறவுகளின் ஊற்று. அப்படியிருக்க, நாமும் உறவுகளுக்கு முதன்மையான, முக்கியமான இடம் தரவேண்டும் என்பதுதானே அந்தப் பாடம்?

உறவுகளுக்கு நம் வாழ்வில் முதன்மையான இடத்தைத் தந்திருக்கிறோமா என்பதை ஆராய்ந்து பார்க்க இன்று நல்லதொரு தருணம். மே மாதம் 30ம் தேதி இத்தாலியின் மிலான் நகரில் ஆரம்பமான அகில உலகக் குடும்ப மாநாடு இஞ்ஞாயிறன்று நிறைவடைகிறது. நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட குடும்பங்களையும், இவ்வுலகம் என்ற குடும்பத்தையும் சிந்திப்பதற்கு இந்த மாநாடு அழைப்பு விடுத்துள்ளது.
உலகம் ஒரு குடும்பம் என்று அவ்வப்போது கூறிவருகிறோம். பரந்து விரிந்த மனித சமுதாயத்தை ஒரு குடும்பம் என்று சொல்வதற்கே இன்று பயமாக உள்ளது. உலகம் என்ற குடும்பத்தில் ஆழமாகப் புரையோடிப் போயிருக்கும் வெறுப்பு, வன்முறை, போர், கலவரம்... இவைகளை நினைத்துப்பார்த்தால் விரக்தியில் உறைந்துபோகிறோம்.
உலகம் என்ற குடும்பம் உறுதியாக அமையவேண்டும் என்றால், நமது ஒவ்வொருவரின் குடும்பங்களும் உறவில் உறுதி பெறவேண்டும். "The Family: Work and Celebration" அதாவது, 'குடும்பம்: வேலையும் கொண்டாட்டமும்' என்ற மையக்கருத்தில் அகில உலகக் குடும்ப மாநாடு நடைபெற்றது. குடும்பம், வேலை, கொண்டாட்டம் என்ற இந்த மூன்று அம்சங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த எண்ணங்கள்... ஏறத்தாழ மூவொரு இறைவனைப்போல. வேலையும் கொண்டாட்டமும் சரியான அளவில் இணையும் குடும்பங்கள், உறவில் வளரும், முழுமையாகும். 'வேலை' என்ற பாரத்தால், எத்தனையோ குடும்பங்கள் சிதைந்து வருவதை நாம் அறிவோம். அதிலும் சிறப்பாக, கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் பொருளாதாரச் சரிவு, வேலையின்மை என்ற பிரச்சனைகளால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளவை நம் குடும்பங்களே.

உறவுகளை வளர்ப்பதைவிட, செல்வம் சேர்ப்பது, புகழ் தேடுவது, போலியான வெளி கொண்டாட்டங்களில் அதிகம் ஈடுபடுவது என்ற மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால், மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை, உறவுகளின் ஊற்றாய் விளங்கும் மூவொரு கடவுள் நமக்குச் சொல்லித் தர வேண்டும் என்று இன்று சிறப்பாக மன்றாடுவோம்.
நம் ஒவ்வொருவரின் குடும்பங்களிலும் வேலையும், கொண்டாட்டமும் நலமான அளவில் இணைந்து நம் குடும்ப உறவுகளைப் பலப்படுத்தவேண்டும் என்று மன்றாடுவோம். குடும்பங்கள் சரிவர அமைந்தால், குழந்தைகள் சரிவர வளர முடியும். இவ்விதம் வளரும் குழந்தைகள் உருவாக்கும் நாளைய உலகம் நல்லதொரு குடும்பமாக அமைய வாய்ப்புக்கள் உண்டு.
நாமும் நமது தலைமுறைகளும் இறைவன் காட்டும் வழியில் நடக்கும்போது, அவரது அசீரால் நிறைவோம் என்பதை மோசே இன்றைய முதல் வாசகத்தில் கூறுகிறார். மோசே தரும் ஆசி மொழிகளுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்:
இணைச்சட்டம் 4: 40
(நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது) இறைவனது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.








All the contents on this site are copyrighted ©.