2012-07-24 15:55:58

பொறுப்புள்ள சுற்றுலாக்களுக்குத் திருப்பீடம் அழைப்பு


ஜூலை,24,2012. சுற்றுலாவைப் பொறுப்புள்ள மற்றும் மதிப்புமிக்க விதத்தில் ஊக்குவித்து வளர்க்குமாறு ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்வோர்க்கான மேய்ப்புப்பணி அவை.
வருகிற செப்டம்பர் 27ம் தேதி கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக சுற்றுலா தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்வோர்க்கான மேய்ப்புப்பணி அவை, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உள்ளிட்ட மில்லென்யம் வளர்ச்சித்திட்ட இலக்குகளை அடைவதற்குச் சுற்றுலா முக்கியமான அங்கம் வகிக்கின்றது என்று கூறியுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் சுற்றுலா குறிப்பிட்டத்தக்க வகையில் முன்னேறியுள்ளது என்றுரைக்கும் இச்செய்தி, பன்னாட்டு அளவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நூறு கோடியை எட்டியுள்ளது, இது 2030ம் ஆண்டில் 200 கோடியை எட்டும் என WTO என்ற உலகச் சுற்றுலா நிறுவனம் வெளியிட்ட புள்ளி விபரங்களையும் சுட்டிக் காட்டியுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தற்போது மிகுந்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கின்ற போதிலும், விடுமுறை காலங்களில் சில வசதிகளைத் தேடி மக்கள் தங்களது இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மறந்து விடுகின்றனர் என்றும் அச்செய்தி கூறுகிறது.
புதிய வாழ்க்கைமுறைகளை அமைத்துக் கொள்வதற்கு கற்றுக் கொள்வதற்குப் பெருமளவில் முயற்சிகள் எடுக்கப்படுமாறும் அச்செய்தி வலியுறுத்துகிறது.
இச்செய்தியில் திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்வோர்க்கான மேய்ப்புப்பணி அவைத் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliò, அதன் செயலர் ஆயர் Joseph Kalathiparambil ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.