2012-10-03 16:06:05

கர்தினால் சாரா : கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனங்கள் கத்தோலிக்கத் தனித்தன்மையைக் கொண்டிருக்க அழைப்பு


அக்.03,2012. கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனங்கள் கத்தோலிக்கத் தனித்தன்மையைக் கொண்டிருக்குமாறு திருப்பீட Cor Unum பிறரன்பு அவையின் தலைவர் கர்தினால் இராபெர்ட் சாரா கேட்டுக்கொண்டார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனங்கள் நடத்திய ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் சாரா, முந்தைய தலைமுறைகள் விட்டுச் சென்ற மரபுகள் அச்சுறுத்தப்படும் சவால்களைக் கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனங்கள் உட்பட அமெரிக்கத் திருஅவை இக்காலத்தில் எதிர்கொள்கின்றது என்று கூறினார்.
பொதுவாழ்வில் மதத்தை ஒதுக்கி வைக்கின்ற ஒரு தீவிர உலகாயுதப்போக்கைக் கொண்டுள்ள காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்றுரைத்த அவர், கடவுள் மற்றும் அவரது சட்டங்களில் மனிதர் தங்களது சொந்தக் கருத்துக்கள், தேவைகள், எண்ணங்கள் மற்றும் இன்பங்களைப் புகுத்துவதற்கு இன்றைய உலகாயுதப்போக்கு முனைகின்றது என்றும் தெரிவித்தார்.
உலகாயுதப்போக்கால் பாதிக்கப்படுவதில் கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனங்களும் விதிவிலக்கு அல்ல என்பதால், அவைகள் தாங்கள் பாரம்பரியமாகப் பெற்றுள்ள கத்தோலிக்கத் தனித்தன்மையைக் காத்துக்கொள்ளுமாறு பரிந்துரைத்தார் கர்தினால் சாரா.







All the contents on this site are copyrighted ©.