2012-12-01 14:42:34

அருள்தந்தை லொம்பார்தி : திருவருகைக்காலம், நம்பிக்கை மற்றும் காத்திருப்பின் காலம்


டிச.01,2012. கிறிஸ்மஸை எதிர்நோக்கும் திருவருகைக்காலம், நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பின் காலமாக இருக்கின்றது என்று இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
தொலைக்காட்சி மற்றும் வானொலிக்கென வழங்கிய வார இறுதி நிகழ்ச்சியில் இவ்வாறு கூறிய, வத்திக்கான் தொலைக்காட்சி மற்றும் வானொலியின் இயக்குனரான அருள்தந்தை லொம்பார்தி, மனிதர் மற்றும் மத நம்பிக்கையாளர் என்ற வகையில் இவ்வுலகில் பல பிரச்சனைகள் சவால்களை நம்முன் வைக்கின்றன என்று கூறினார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை, எய்ட்ஸ் நோய்ப் பிரச்சனை போன்ற சமூகப் பிரச்சனைகளையும் நலவாழ்வு விவகாரங்களையும் குறிப்பிட்டுப் பேசிய அருள்தந்தை லொம்பார்தி, சிரியா, மாலி, நைஜீரியா, காங்கோவின் கிழக்குப்பகுதி, சொமாலியா, ஆப்கானிஸ்தான், ஈராக், போன்ற நாடுகளில் இடம்பெறும் சண்டைகளையும் வன்முறைகளையும் குறிப்பிட்டதோடு எகிப்து போன்ற நாடுகளில் இடம்பெறும் சமூக மற்றும் அரசியல் பதட்டநிலைகள் குறித்தும் கூறினார்.
உலகில் நம்பிக்கை ஒளியை எப்போதும் பார்ப்பது எளிது இல்லை எனினும், கியூபாவில் கொலம்பிய அரசுக்கும் FARC கெரில்லாக் குழுவுக்குமிடையே இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையின் ஒளிக்கான அடையாளங்கள் குறைவுபடவில்லை என்பதையும் காட்டுகின்றன என்றார் அவர்.
இஞ்ஞாயிறன்று தொடங்கும் திருவருகைக்காலத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்குவோம் என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.







All the contents on this site are copyrighted ©.