2013-01-10 15:33:44

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாட்டு ஆயர் பிரதிநிதிகள் அளித்துள்ள புனித பூமி அறிக்கை


சன.10,2013. புனித பூமியில் வளர்ந்து வரும் பிரிவினை உணர்வுகளும், இறுக்கமானச் சூழலும் அங்கு வாழும் இஸ்ரயேல் மக்கள், பாலஸ்தீனியர்கள், யூதர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் எண்ணிக்கையில் குறைந்துவரும் கிறிஸ்துவ மக்கள் அனைவருக்கும் ஆழமான பதட்டங்களை உருவாக்கி வருகின்றன என்று ஐரோப்பிய, அமெரிக்க ஆயர்கள் கூறினர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஆயர்களின் சார்பில், ஒவ்வோர் ஆண்டும் ஆயர் பிரதிநிதிகள் குழுவொன்று புனித பூமிக்குச் செல்வது வழக்கம்.
13வது முறையாக இவ்வாண்டு சனவரி 5ம் தேதி முதல், 10ம் தேதி இவ்வியாழன் முடிய புனித பூமியில் தங்கள் பயணத்தை முடித்த எட்டு ஆயர்கள் இணைந்து அளித்துள்ள ஓர் அறிக்கையில், புனித பூமியில் நிலவும் அமைதியற்றச் சூழலைக் குறித்து தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இருபகுதிகளிலும் வாழும் இளையோர் தங்களிடையே உறவுகளை வளர்த்துக்கொள்ள விழைந்தாலும், அதற்குரியச் சூழலை பெரியவர்கள் உருவாக்கித் தராமல் இருப்பது வருங்காலத்திற்கு நல்லதல்ல என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.
கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு, ஜெர்மனி, இஸ்பெயின், பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து சென்றுள்ள இரு பேராயர்கள், மற்றும் ஆறு ஆயர்கள் அடங்கிய இக்குழு, இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகளுக்கிடையே கட்டப்பட்டு வரும் மதில் சுவர், தொடர்புகளை வளர்த்துவரும் இன்றைய கலாச்சாரத்திற்கு ஓர் அவமானச் சின்னம் என்று தங்கள் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.