2013-01-10 15:37:27

சிரியாவில் இருந்து புலம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியிருந்த ஒரு முகாம் பகுதி பனிப் புயலால் சேதமடைந்துள்ளது


சன.10,2013. சிரியாவில் இருந்து புலம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியிருந்த ஒரு முகாம் பகுதி பனிப் புயலால் சேதமடைந்துள்ளது என்று ஜோர்டான் காரித்தாஸ் இயக்குனர் Wael Suleiman கூறினார்.
Zaatari எனும் பகுதியில், பாலை நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த 500 கூடாரங்கள் பனிப் புயலால் சேதமடைந்துள்ளன என்றும், இதனால் 50,000க்கும் அதிகமான மக்கள் எவ்விதப் பாதுகாப்பும் இல்லாமல் உள்ளனர் என்றும் Suleiman எடுத்துரைத்தார்.
கடந்த மூன்று நாட்களாக அங்கு பெய்துவரும் மழையாலும், பனிப் புயலாலும் இதுவரை யாரும் இறக்கவில்லை எனினும், இம்மக்கள், முக்கியமாக, குழந்தைகள் பல்வேறு நோய்களால் தாக்கப்படும் ஆபத்து அதிகம் உள்ளதென்று காரித்தாஸ் அமைப்பு கூறியுள்ளது.
ஜோர்டான் பகுதியில் தற்போது 2,80,000 பேர் முகாம்களில் தங்கியுள்ளனர் என்றும், இவர்களில் பலர் சிரியாவுக்கேத் திரும்பிவிடும் எண்ணத்தில் உள்ளனர் என்றும் Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
Zaatari பகுதியில் மிகவும் கடினமானச் சூழலில் வாழும் இம்மக்களுக்கும், அங்கு பணியாற்றும் ஐ.நா. தொண்டர்களுக்கும் மோதல் உருவானது என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.