2013-05-06 16:41:01

சுவிஸ் வீரர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் திருத்தந்தையின் சிறப்பான நன்றி


மே,06,2013. அர்ப்பண சிந்தையோடும், முழு ஈடுபாட்டுடனும் நீங்கள் செய்துவரும் சேவைகளை ஒவ்வொரு நாளும் நான் கண்டு வருகிறேன், உங்கள் தாராள உள்ளத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மெய்காப்பாளர்களிடம் கூறினார்.
திருத்தந்தையின் மெய்க்காப்பாளர்களாக பணியாற்றிவரும் சுவிஸ் வீரர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும் இத்திங்கள் நண்பகல் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அந்த வீரர்களை இப்பணிக்கு மகிழ்வுடன் அளித்த குடும்பத்தினருக்கும் தன் சிறப்பான நன்றியைத் தெரிவித்தார்.
1527ம் ஆண்டு மே 6ம் தேதி, உரோமையப் பேரரசர் 5ம் சார்ல்ஸ் படைவீரகளுக்கும், திருத்தந்தையைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சுவிஸ் வீரகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில், 147 சுவிஸ் வீரர்கள் உயிர் துறந்தனர். இந்தத் தியாகச் செயலின் நினைவைக் கொண்டாடும் இத்திங்களன்று சுவிஸ் வீரகளைச் சந்தித்தத் திருத்தந்தை, இந்த வரலாற்று நிகழ்வை இன்னும் பெருமையுடன் எண்ணிப் பார்க்க முடிகிறது என்று கூறினார்.
இவ்வீரர்கள் தங்கள் இளமைப் பருவத்தை இத்தகைய உன்னதப் பணியில் செலவழிப்பதை சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, திருமுழுக்கில் அவர்கள் பெற்ற கொடையை இன்னும் ஆழப்படுத்த இந்தக் காவல் பணி இன்னும் பெரும் உதவியாக இருக்கும் என்பதையும் எடுத்துரைத்தார்.
இறைவன் அவர்களோடு என்றும் துணையாக நடக்கிறார் என்பதை தன் உரையில் இறுதியில் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுவிஸ் வீரகளுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.