2013-05-07 16:53:43

விவிலியத்
தேடல் – நல்ல சமாரியர் உவமை : பகுதி 12


RealAudioMP3 'எனக்கு அடுத்திருப்பவர் யார்?' என்று திருச்சட்ட அறிஞர் எழுப்பிய கேள்விக்கு இயேசு தந்த பதிலே 'நல்ல சமாரியர்' என்ற புகழ்பெற்ற உவமை. 'நல்ல சமாரியர்' என்ற வார்த்தைகள் இயேசு சொன்ன வார்த்தைகள் அல்ல. அவர் சொன்ன உவமையில் கள்வர், குரு, லேவியர், சமாரியர் என்ற வார்த்தைகளையே பயன்படுத்தினார். சமாரியருக்கு 'நல்ல' என்ற அடைமொழி கிறிஸ்தவ பாரம்பரியத்தில் இணைக்கப்பட்டது. 'நல்ல சமாரியர்' என்ற வார்த்தைகள் நிறுவனங்களின் பெயர்களாக, விருதுகளாக, கிறிஸ்துவம் என்ற எல்லையையும் கடந்து இன்று உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது.

சமாரியர் நல்லவர் என்றால், உவமையில் சொல்லப்பட்டுள்ள கள்வர், குரு, லேவியர் ஆகியோர் கெட்டவர்களா? 'நல்லவர்', 'கேட்டவர்' என்ற அடையாள வில்லைகளை ஒவ்வொருவர்மீதும் பதிப்பது இயேசுவின் எண்ணம் அல்ல. 'அடுத்திருப்பவர்' என்ற சொல்லுக்கு, உயிருள்ள ஓர் எடுத்துக்காட்டைத் தருவது ஒன்றே இயேசுவின் எண்ணம்.

மனித சமுதாயத்தில், 'நல்லவர்-கெட்டவர்', 'உயர்ந்தவர்-தாழ்ந்தவர்', 'படித்தவர்-படிக்காதவர்', வெள்ளை-கறுப்பு இனத்தவர்',... 'அவர்-இவர்' என்று அடையாள வில்லைகளை ஆயிரக்கணக்கில் நாம் உருவாக்கி விட்டதால், 'அடுத்தவர்' என்ற அடிப்படை அடையாளத்தைக் கண்டுபிடிக்க இயலாமல் நாம் தவிக்கிறோம். நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு 'அடுத்தவர்' என்ற அடிப்படை அடையாளத்தை மறைக்கும் (அல்லது, மறக்கும்) அளவுக்கு, நாம் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் வேறு பல அடையாள வில்லைகளை அவர்கள் மீது ஒட்டிவிடுகிறோம். பின்னர் 'அடுத்தவர் எங்கே?' என்ற தேடலில் இறங்குகிறோம்.

இந்த அடையாள வில்லைகளுக்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்காமல், 'மனிதப்பிறவி' என்ற ஒரே காரணத்திற்காக, மற்றவர் மீது பரிவுகொண்டு உதவிகள் செய்ய முன்வருபவர்களே 'அடுத்தவர்'. அவர்களே 'நல்ல சமாரியர்'! 'மனிதர்' என்ற குறுகிய வட்டத்தைத் தாண்டி, அனைத்து உயிரினங்கள் மீதும் பரிவு கொள்ளும் மனம் மனிதருக்குத் தேவை என்ற எண்ணம் அண்மைய காலங்களில் வலியுறுத்தப்படுகின்றது. இத்தகைய மனநிலை மனிதரிடையே வளர்ந்தால் மட்டுமே இவ்வுலகைக் காக்கமுடியும் என்பதையும் நாம் உணர்ந்துவருகிறோம்.
இத்தகைய எண்ணங்கள் நாம் புதிதாகக் கண்டுபிடித்த எண்ணங்கள் அல்ல. ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன், இராமலிங்க அடிகளார் 'திருவருட்பா'வில் வடித்துள்ள ஓர் அழகிய பாடலை நாம் இங்கு நினைவில் கொள்வது பயனளிக்கும்:
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன், பசியினால் இளைத்தே
வீடுதோறு(ம்) இரந்தும் பசி அறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்
ஈடு இன் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்.

'தினம் ஒரு பா' என்ற வலைத்தளத்தில் இப்பாடலைப் பதிவு செய்துள்ள என்.சொக்கன் அவர்கள், வள்ளலாரின் வரிகளுக்கு சொல்லும் விளக்கம் இதோ:
தண்ணீர் இன்றி வாடியிருக்கும் பயிர்களைப் பார்க்கும்போதெல்லாம் என்னுடைய மனம் வாடுகிறது. பசியினால் இளைத்தவர்கள், ஒவ்வொரு வீடாகக் கெஞ்சிக்கேட்டும் பசி தீராமல் களைத்துப்போன ஏழைகளைப் பார்த்து என் உள்ளம் பதைபதைக்கிறது. நீங்காத நோயினால் அவதிப்படுகிறவர்களை நேருக்கு நேர் பார்க்கும்போது என் நெஞ்சம் துடிக்கிறது.
இவர்களெல்லாம்கூடப் பரவாயில்லை. பசியால் வயிறு காய்ந்தாலும் இணையில்லாத மானம்தான் பெரியது என்று நினைக்கிறவர்கள், அதனால் யாரிடமும் பிச்சை கேட்காமல் சுயமரியாதையோடு பட்டினி கிடக்கிறவர்கள், அவர்களைப் பார்க்கும்போது, நானும் இளைத்துப்போகிறேன்!

பரிவு, இரக்கம், அன்பு ஆகிய உன்னதமான உணர்வுகள் நம்மை மனிதர்களாக, அடுத்திருப்பவராக உருவாக்குகின்றன. அவையே நம்மைச் செயலுக்கும் இட்டுச் செல்கின்றன.
பரிவுடன், அதே நேரம் பின்விளைவுகளைப் பற்றிய கவலை ஏதும் இல்லாமல் துணிவுடன் செயலில் இறங்கும் 'நல்ல சமாரியர்களை'த் தடுக்கும் சக்திகளும் உலகில் பெருகி வருகின்றன. சில மாதங்களுக்கு முன், மின்னஞ்சலில் வந்த ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது.

பெரு நகர் ஒன்றில், புகழ்பெற்ற ஒரு மருத்துவமனையில் பணி புரிந்தவர் டாக்டர் வில்லியம். பெரு நகரம் என்பதால், ஒவ்வொரு நாளும் விபத்துக்களில் அடிபட்டவர்களைக் காப்பாற்றும் தலை சிறந்த Neurosurgeon (நரம்பியல் அறுவைச் சிகிச்சை வல்லுநர்) டாக்டர் வில்லியம்.
ஒரு நாள் இரவு, தன் பணிகளை முடித்துவிட்டு, களைப்புடன் உறங்கிக் கொண்டிருந்த வில்லியம் அவர்களுக்கு நடுஇரவில் தொலைபேசி அழைப்பு வந்தது. சாலைவிபத்து ஒன்றில், தலையில் பலமாய் அடிபட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஓர் இளையவரைக் காப்பாற்றும்படி வந்த அழைப்பு அது.

தனக்கு மிகக் களைப்பாக இருந்தாலும், டாக்டர் வில்லியம் நடுஇரவில் தன் காரில் கிளம்பிச் சென்றார். வழக்கமான வழியில் சென்றால், அதிக நேரம் எடுக்கும் என்பதால், குறுக்கு வழியில் செல்ல அவர் தீர்மானித்தார். அந்த குறுக்கு வழி ஆபத்தான வழி... அந்நகரை அச்சத்தில் ஆழ்த்திவரும் பல வன்முறை கும்பல்கள் அடிக்கடி துப்பாக்கிச் சண்டைகளில் ஈடுபடும் பகுதி அப்பகுதி. போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் பலர், கத்தி முனையில் அல்லது துப்பாக்கி முனையில் பணம் பறிக்கும் பாதை அது. எருசலேமுக்கும் எரிகோவுக்கும் இடையே இருந்த பாதை போல...

ஓர் உயிரைக் காப்பாற்றவேண்டும் என்ற உந்துததால், டாக்டர் வில்லியம் அந்தப் பாதையில் சென்றார். வழியில் ஓரிடத்தில் போக்குவரத்து விளக்கு சிவப்பாக இருந்ததால், காரை நிறுத்தினார். அப்போது, அவரது காரை நோக்கி ஓடிவந்த நடுத்தர வயதுள்ள ஒரு மனிதர், தன் கத்தியைக் காட்டி, பயமுறுத்தி, டாக்டரை காரிலிருந்து இறங்கச் சொன்னார். டாக்டர் தன் அவசரத்தை எடுத்துக் கூற முயன்றதையும் கேட்காமல், அவர் டாக்டரை காரிலிருந்து இழுத்து வெளியேத் தள்ளிவிட்டார். அவர் காருக்குள் ஏறி, சிவப்பு விளக்கையும் பொருட்படுத்தாமல், வேகமாகச் சென்றார். டாக்டரின் 'செல் போனும்' காருக்குள் மாட்டிக்கொண்டதால், அவர் செய்வதறியாது திகைத்து நின்றார்.

டாக்டர் வில்லியம் அங்கு சென்ற பல கார்களை நிறுத்த முயன்று தோற்றுப்போனார். அப்பகுதியின் ஆபத்தை உணர்ந்த எவரும் நிறுத்த விரும்பவில்லை. பல நிமிடங்கள் சென்று அவ்வழியே வந்த ஒரு 'டாக்ஸி'யை நிறுத்தி அவர் மருத்துவமனையை அடைந்தார். டாக்டர் அங்கு சென்று சேர்வதற்குள் அடிபட்ட இளைஞர் இறந்துவிட்டார். டாக்டர் வில்லியம் மிகவும் வருத்தப்பட்டார்.

அப்போது, அடுத்த அறையில் யாரோ கோபத்தில் கத்திக் கொண்டிருந்ததை கேட்டார் டாக்டர் வில்லியம். அந்த அறையைவிட்டு வெளியே வந்த மருத்துவமனை மேலாளரிடம் விளக்கம் கேட்டார் டாக்டர். "நீங்கள் இவ்வளவு தாமதமாக வந்ததற்காக அந்த இளைஞரின் அப்பா கத்திக் கொண்டிருக்கிறார். உங்களால் முடிந்தால் நடந்ததை அவரிடம் சொல்லி அவரைச் சமாதானப்படுத்தப் பாருங்கள்" என்று சொன்னார் மேலாளர்.

தனக்கு வழியில் நேர்ந்ததை எடுத்துச் சொல்லி, அந்தத் தந்தையை சமாதானப்படுத்தலாம் என்று டாக்டர் வில்லியம் அந்த அறைக்குள் நுழைந்தார். அங்கு, அவருக்கும், கத்திக்கொண்டிருந்த தந்தைக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், மகனை இழந்த துயரத்திலும், கோபத்திலும் அங்கு கத்திக் கொண்டிருந்த தந்தை வேறு யாருமல்ல... டாக்டர் வில்லியத்திடமிருந்து காரை பலவந்தமாகப் பறித்துச் சென்றாரே அவர்தான்...

உதவிகள் செய்வதற்கு 'நல்ல சமாரியர்'கள் முற்பட்டாலும், அவர்களது நற்பணியைத் தடுக்க இன்னும் பல எதிர்ப்புச் சக்திகள் உலகில் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும், அந்த வன்முறைச் சக்திகளை வெல்வதற்கு நாம் ஏந்தக்கூடிய, ஏந்த வேண்டிய ஆயுதம் - அன்பு ஒன்றே! அன்பென்ற இந்த ஆயுதத்தின் இலக்கணத்தை வரையறுப்பது இயலாத காரியம், அன்பிற்கு இலக்கியம் மட்டுமே எழுதமுடியும். இத்தகைய இலக்கியத்தை, புனித பவுல் அடியார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் 13ம் பிரிவில் கூறியுள்ளார். பவுல் அடியாரின் வார்த்தைகள் "அன்பே பிரதானம், சகோதர அன்பே பிரதானம்" என்ற பாரம்பரியப் பாடலில் அழகாகச் சொல்லப்பட்டுள்ளன.

இப்பாடலுடன் இறைவார்த்தைகளையும் இணைந்து கேட்கும் ஒரு சிறு தியானத்துடன் நாம் இன்றைய விவிலியத் தேடலையும், கடந்த 12 வாரங்களாக 'நல்ல சமாரியர்' உவமையில் நாம் மேற்கொண்ட சிந்தனைகளையும் நிறைவு செய்வோம்:

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 13 : 1-13
நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.
நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன்.
என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.
அன்பு பொறுமையுள்ளது: நன்மை செய்யும்: பொறாமைப்படாது: தற்புகழ்ச்சி கொள்ளாது: இறுமாப்பு அடையாது.
அன்பு இழிவானதைச் செய்யாது: தன்னலம் நாடாது: எரிச்சலுக்கு இடம் கொடாது: தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது: மாறாக உண்மையில் அது மகிழும்.
அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்: அனைத்தையும் நம்பும்: அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்: அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்.








All the contents on this site are copyrighted ©.