2013-05-18 15:31:53

திருத்தந்தை பிரான்சிஸ் : பிறரது வாழ்வில் தலையிடும் சோதனையைக் கிறிஸ்தவர்கள் மேற்கொள்ள வேண்டும்


மே,18,2013. திருஅவையில் எவ்வளவு வீண்பேச்சுக்கள் பேசப்படுகின்றன, கிறிஸ்தவர்களாகிய நாம் பயனில்லாதப் பேச்சுக்களை எப்படி பேசுகிறோம், தவறான தகவல், பெயரைக் கெடுத்தல், அவதூறு ஆகிய மூன்று கூறுகளை இந்த நடத்தைக் கொண்டுள்ளது, இவை மூன்றுமே பாவங்கள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
யோவானைக் கண்டதும் பேதுரு இயேசுவிடம், இவருக்கு என்ன ஆகும் என்று கேட்டதற்கு இயேசு, அது பற்றி உனக்கு என்ன எனப் பேதுருவிடம் கேட்கும் இந்நாளின் நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இந்நிகழ்வை வைத்து இக்காலக் கிறிஸ்தவர்களுக்கு ஓர் எச்சரிப்பையும் முன்வைத்தார்.
இயேசுவோடு அன்பு உரையாடலை மேற்கொண்ட பேதுருவின் உரையாடல் திசை மாறுகிறது, பிறரது வாழ்வில் தலையிடும் சோதனையால் அவர் துன்புறுகிறார் என்றுரைத்த திருத்தந்தை, பேதுரு உட்பட்ட இரு சோதனைகள் குறித்து விளக்கினார்.
ஒருவரைப் பிறரோடு ஒப்பிட்டுப் பேசுதல், புறணி பேசுதல் ஆகிய இரு சோதனைகள் குறித்து இச்சனிக்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் விளக்கிய திருத்தந்தை, ஒருவரைப் பிறரோடு ஒப்பிட்டுப் பேசும்போது அது கசப்புணர்விலும், பொறாமையிலும்கூடக் கொண்டுபோய் விடுகின்றது, பொறாமை கிறிஸ்தவச் சமூகத்தை அரித்து விடுகின்றது என்று கூறினார்.
அடுத்து, புறணி பேசுதல். இது முதலில் அறிவார்ந்த வழியில் தொடங்கி பின்னர் மோசமாக உணரும் நிலையில் விட்டுவிடுகின்றது, திருஅவையில் நாம் அனைவரும் புறணி பேசுகிறோம், இது ஒருவர் ஒருவரைப் புண்படுத்துகின்றது, இது ஒருவர் மற்றவரை வீழ்த்த விரும்புவதுபோல் உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மீட்பு என்பது பிறரோடு ஒப்பிடுவதிலோ, வீண்பேச்சுப் பேசுவதிலோ இல்லை, மாறாக, இயேசுவைப் பின்செல்லுவதில் இருக்கின்றது, எனவே நாம் பிறரின் வாழ்வில் தலையிடாதிருக்கும் வரத்தை இயேசுவிடம் கேட்போம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.