2013-06-06 16:25:30

அகதிகள் எவ்வகையில் நடத்தப்படுகின்றனர் என்பதே உலகக் கலாச்சார வளர்ச்சியின் அளவுகோல் - கர்தினால் Vegliò


ஜூன்,06,2013. நாட்டுக்குள்ளும், பிறநாடுகளுக்கும் புலம்பெயரும் மக்கள், அகதிகள் ஆகியோர் எவ்வகையில் நடத்தப்படுகின்றனர் என்பதே இவ்வுலகம் எவ்வளவு தூரம் கலாச்சாரத்தில் வளர்ந்துள்ளது என்பதன் அளவுகோல் என்று வத்திகான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
"புலம்பெயர்ந்தோரிலும், கட்டாயமாக தங்கள் நிலங்களை விட்டு அகற்றப்படுவோரிலும் கிறிஸ்துவை வரவேற்றல் - மேய்ப்புப்பணி வழிமுறைகள்" என்ற தலைப்பில் இவ்வியாழனன்று திருப்பீடம் வெளியிட்ட ஓர் அறிக்கையைக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்தினால் Antonio Maria Vegliò இவ்வாறு கூறினார்.
புலம்பெயர்ந்தோர் மற்றும் பயணிகளுக்கு மேய்ப்புப்பணி ஆற்றும் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Vegliò அவர்களும், திருப்பீடத்தின் பிறரன்பு அமைப்பான Cor Unum அவையின் தலைவர் கர்தினால் Robert Sarah அவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, இன்றைய உலகில் புலம்பெயர்ந்தோர் அடையும் துயரங்களை விளக்கிக் கூறுகிறது.
புலம்பெயர்ந்தொரைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மே மாதம் நிகழ்ந்த ஒரு புதன் மறைப்போதகத்தில் பேசுகையில், புலம் பெயர்ந்தோரின் உடல், கிறிஸ்துவின் உடல் என்று கூறியதை, இவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
நான்கு பகுதிகளைக் கொண்ட இவ்வறிக்கையில், அரசியல் அடக்குமுறைகள், மத மற்றும் கலாச்சார மோதல்கள், இயற்கை பேரிடர்கள் என்ற பல்வேறு காரணங்களால் தங்கள் சொந்த நாட்டுக்குள்ளும், நாட்டை விட்டும் வெளியேற்றப்படும் மக்கள் அடையும் துயரங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.