2013-08-10 16:02:44

கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நன்மதிப்பை வளர்ப்பது இன்றியமையாதது, இந்திய ஆயர்


ஆக.,10,2013. கல்வி வழியாக ஒருவர் ஒருவர்மீது நன்மதிப்பை வளர்க்க வேண்டுமென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது இரமதான் பண்டிகை வாழ்த்துச் செய்தியில் அழைப்பு விடுத்திருப்பது இந்தியாவுக்கு இன்றியமையாதது என்று பேராயர் ஃபீலிக்ஸ் மச்சாடோ கூறினார்.
இரமதான் பண்டிகையை முன்னிட்டு இந்திய முஸ்லீம்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த, இந்திய ஆயர் பேரவையின் உரையாடல் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆணையத் தலைவர் பேராயர் மச்சாடோ, இந்தியத் திருஅவை, தனது ஆயிரக்கணக்கான பள்ளிகளில் எல்லா மதங்களையும் சேர்ந்த மாணவ மாணவியருக்கு இடமளிப்பதன்மூலம் பிற மதங்களை மதிப்பதற்குச் சான்று பகர்ந்து வருகின்றது என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரமதான் வாழ்த்துச் செய்தி குறித்து கருத்து தெரிவித்த பேராயர் மச்சாடோ, இந்தியத் திருஅவை ஏறக்குறைய 20 ஆயிரம் கல்வி நிறுவனங்களை நடத்துகின்றது, இவை பல்சமய உரையாடலுக்குத் தொட்டிலாக அமைந்துள்ளன எனவும் கூறினார்.
15,000 பள்ளிகள், 300 கல்லூரிகள், 125 தாதியர் பள்ளிகள், 5,000 மருத்துவமனைகள் மற்றும் சிறிய மருத்துவமனைகள், 2,000 மறுவாழ்வு மையங்கள், 1,500 தொழில்நுட்ப நிறுவனங்கள், 6 பல்கலைக்கழக மருத்துவமனைகள் மற்றும் 2 பல்கலைக்கழகங்களை இந்தியத் திருஅவை நடத்தி வருகின்றது என்றும் பேராயர் மச்சாடோ தெரிவித்தார்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.