2013-10-05 15:15:06

நகரங்கள், இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட ஐ.நா. அதிகாரிகள் வலியுறுத்தல்


அக்.05,2013. இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்கும், அச்சமயங்களில் நகரமக்கள் தங்களின் குடியிருப்புக்களை விட்டுச்செல்வதற்கு மாற்றுவழிகளைக் கொண்டிருப்பதறகும் ஏற்ப நகரங்கள் அமைக்கப்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுமாறு ஐ.நா. அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் முதல் திங்களன்று கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக வீட்டுமனை நாளையொட்டி கருத்து தெரிவித்த ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள், இப்பூமியின் வெப்பநிலை மாற்றம் அதிகரித்துவரும்வேளை, அதற்கேற்ப நகரங்கள் அமைக்கப்படுவது மிகவும் இன்றியமையாதது என்று கூறியுள்ளார்.
இயற்கைப் பேரிடர்கள் இடம்பெறும்போது தங்கள் வாழ்வையும் முதலீடுகளையும் பாதுகாத்துக் கொள்ளவும், அச்சமயங்களில் தேவையான உதவிகள் கிடைக்கவும் திட்டமிடப்பட வேண்டுமென்றும் கேட்டுள்ளார் பான் கி மூன்.
இயற்கைப் பேரிடர்களில் இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய 11 இலட்சம் பேர் இறந்துள்ளனர், 270 கோடிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் பொருளாதாரத்தில் 130 ஆயிரம் கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் பான் கி மூன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.