2013-10-31 16:05:33

கர்தினால் Filoni அவர்கள் பாகிஸ்தானில் மேய்ப்புப் பணி பயணம்


அக்.31,2013. நற்செய்தி அறிவிப்புப்பணி திருபீடப்பேராயத்தின் தலைவரான கர்தினால் Fernando Filoni அவர்கள், அக்டோபர் 31, இவ்வியாழன் முதல் பாகிஸ்தானில் மேய்ப்புப் பணி பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
பைசலாபாத் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள அருள்பணியாளர் Joseph Arshad அவர்களை, நவமபர் 1, இவ்வெள்ளியன்று கொண்டாடப்படும் அனைத்துப்புனிதர்களின் பெருவிழாவன்று, கர்தினால் Filoni அவர்கள், ஆயராகத் திருநிலைப்படுத்தவுள்ளார்.
இந்தத் திருநிலைத் திருப்பலியில் 10,000க்கும் அதிகமான மக்கள் கலந்துகொள்வர் என்றும், பாகிஸ்தானில் பணியாற்றும் ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்வர் என்றும் பைசலாபாத் முதன்மை அருள்பணியாளரான Khalid Rashid Asi அவர்கள் Fides செய்தியிடம் கூறினார்.
ஆயர் Arshad அவர்கள் அருட்பொழிவு செய்யப்படும் திருச்சடங்கின்போது, காவல்துறையினரின் பலத்த காவலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அருள்பணியாளர் Rashid Asi தெரிவித்தார்.
கர்தினால் Filoni அவர்களின் மேய்ப்புப்பணி பயணத்தின்போது, பாகிஸ்தான் ஆயர்கள் அனைவரையும், இவ்வியாழனன்று சந்தித்து உரையாடினார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.