2013-11-08 15:23:27

கடவுள் உணர்வற்ற பெற்றோரின் பிள்ளைகளுக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செபம்


நவ.08,2013. இலஞ்சம், ஊழல் ஆகியவற்றினால் கிடைக்கும் பணத்தால் தங்கள் பெற்றோரிடமிருந்து “அழுக்கான உணவு” உண்ணும் பல இளையோருக்காக இவ்வெள்ளிக்கிழமை காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்விளையோர் தங்கள் மாண்புக்காகப் பசியோடு இருக்கின்றனர், ஏனெனில் நேர்மையற்ற வேலை மாண்பை பறித்து விடுகின்றது என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இலஞ்சக் கடவுளை வணங்கும் பக்தர்களின் இதயங்களை ஆண்டவர் மாற்றுவாராக என்றும், ஒவ்வொரு நாளைய மாண்புடன்கூடிய, நேர்மையான வேலையிலிருந்து மாண்பு வருகின்றது என்பதையும், ஊழல்மிக்க எளிதான பாதைகள் இறுதியில் மனித மாண்பையும், அனைத்தையும் கிழித்தெறியும் என்பதையும் இவர்கள் உணரவேண்டுமென்றும் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நேர்மையற்ற வீட்டுப்பொறுப்பாளர் உவமை குறித்த இந்நாளைய நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து இத்திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, இவ்வுலகின் போக்கு, உலகப்பற்று எவ்வளவு ஆபத்தானது என்று விளக்கி, தமது சீடர்கள் இந்த ஆபத்தில் வீழ்ந்துவிடாதிருக்க இயேசு தமது தந்தையிடம் செபித்தார் என்றும் கூறினார்.
இந்த உலகப்பற்றுநிறைந்த வழிகள் எதிரி என்றும், நாம் நமது பகைவர்களை நினைக்கும்போது நாம் உண்மையிலேயே முதலில் சாத்தானை நினைக்கிறோம், அது நம்மை வருத்துகின்றது என்றும், இவ்வுலகப்பற்றுமிக்க சூழலும், அத்தகைய வாழ்வும் சாத்தானை அதிகமாகப் பிரியப்படுத்துகின்றது என்றுரைத்த திருத்தந்தை, நற்செய்தி வாசகத்தில் சொல்லப்பட்டுள்ள நேர்மையற்ற வீட்டுப்பொறுப்பாளர் உலகப்பற்றுக்கு எடுத்துக்காட்டு என்றும் கூறினார்.
இலஞ்சம் வாங்கும் பழக்கம் உலகப்போக்கானது, இது மிகவும் பாவமான பழக்கமாகும், இது கடவுளின் பழக்கமல்ல, நேர்மையான வழிகளில் உழைத்து நாம் நம் வீட்டுக்கு உணவு கொண்டுவரவேண்டுமென்று கடவுள் ஆணையிடுகிறார், ஆனால் இந்த நேர்மையற்ற வீட்டுப்பொறுப்பாளர் நேர்மையற்ற உழைப்பில் சேகரித்த அழுக்கான உணவை, தனது குழந்தைகளுக்கு வழங்கினார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தங்கள் பெற்றோரிடமிருந்து “அழுக்கான உணவு” உண்ணும் பல சிறார் மற்றும் இளையோருக்காக இன்று செபிப்போம், இவர்கள் தங்கள் மாண்புக்காகப் பசியாயிருக்கிறார்கள், இத்தகைய பெற்றோரின் இதயங்களை ஆண்டவர் மாற்றுவாராக என்று இத்திருப்பலியில் செபிப்போம் என்று மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.