2013-12-02 16:53:27

குடும்பம், திருமணம், வாழ்வின் முடிவு ஆகியவை குறித்த விவாதங்களில் கத்தோலிக்கர் முக்கிய பங்காற்றுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு


டிச.02,2013. சமயச்சார்பற்றநிலை அதிகமாக காணப்படும் ஹாலந்து நாட்டுச் சமுதாயத்தில், குடும்பம், திருமணம், வாழ்வின் முடிவு ஆகியவை குறித்த சமூகத்தின் பெரும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதில் அந்நாட்டுக் கத்தோலிக்கர் முக்கிய பங்காற்றுமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஹாலந்தில் குருக்களின் பாலியல் நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள்மீது பரிவு கொண்டிருப்பதாகவும், அவர்களுக்காகத் தான் செபிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை.
சமயச்சார்பற்றநிலை மிகுந்து காணப்படும் ஒரு சமூகத்தில் நம்பிக்கையுடன் இருப்பது எளிதல்ல என்றும், இச்சமூகத்தில் மனித நலனுக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் உழைக்கவேண்டியது திருஅவையின் கடமை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மனச்சான்றை உருவாக்குவதற்கு ஹாலந்து கிறிஸ்தவர்கள் முன்னுரிமை அளிக்குமாறும் வலியுறுத்திய திருத்தந்தை, மனிதர் குறித்த பொதுப்படையான விவாதங்களில், மனிதர்மீதும், அனைத்துப் படைப்புகள் மீதும் இறைவன் கொண்டுள்ள கருணை வெளிப்படையாய்த் தெரியுமாறு கிறிஸ்தவர்கள் செயல்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பல முக்கிய விவகாரங்களில், எடுத்துக்காட்டாக, குடும்பம், திருமணம், வாழ்வின் இறுதி முடிவு போன்றவை குறித்த பொது விவதாங்களில் கத்தோலிக்கர் முழுஈடுபாட்டுடன் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பலவழிகளில் பணக்கார நாடாக விளங்கும் ஹாலந்தில் பலரை ஏழ்மை பாதித்துள்ளது, இந்த ஏழைகளிடம் கிறிஸ்தவர்கள் தங்களின் மனத்தாராளத்தைக் காட்டுமாறும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.