2014-01-15 15:58:38

சிரியாவில் மனிதாபிமான அடிப்படையில் பல அவசர உதவிகள் தேவை - பாப்பிறை அறிவியல் அறக்கட்டளை


சன.15,2014. சிரியாவில் அரசியல் வழியில் தீர்வுகள் கிடைப்பதற்கு முன், அங்கு மனிதாபிமான அடிப்படையில் பல அவசர உதவிகள் தேவை என்று பாப்பிறை அறிவியல் அறக்கட்டளை விண்ணப்பித்துள்ளது.
வருகிற 22ம் தேதி, சிரியாவின் அமைதி குறித்து ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் பன்னாட்டுக் கூட்டத்தையொட்டி, உரோம் நகரில், பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean-Louis Pierre Tauran அவர்கள் தலைமையில், பாப்பிறை அறிவியல் அறக்கட்டளை நடத்திய ஒரு கருத்தரங்கில் இந்த விண்ணப்பம் வெளியிடப்பட்டது.
130,000 பேருக்கும் மேலாக உயிர்களைப் பலிவாங்கியுள்ள சிரியாவின் உள்நாட்டுப் போர் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் எனவும், அதற்கு, அந்நாட்டில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் முற்றிலுமாகக் களையப்படவேண்டும் என்றும் இக்கருத்தரங்கில் கூறப்பட்டது.
அரசியல் தீர்வுகள் கிடைக்கும்வரை காத்திருந்தால், அங்கு வாழும் சிறுவர் சிறுமியர் மற்றும் இளையோர் தங்கள் எதிர்காலத்தை முற்றிலும் இழந்துவிடும் ஆபத்து அதிகம் என்பதால், அவர்களுக்குத் தேவையான உதவிகளை உலக நாடுகள் செய்வதற்கு முன்வருவது உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்று இக்கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.