2014-02-13 16:28:22

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்கேரியா நாட்டு ஆயர்களுக்கு வழங்கிய 'அத் லிமினா' உரை


பிப்.13,2014. பல்கேரியா நாட்டில், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் ஆட்சி செலுத்தியபோது, அவர்கள் கலாச்சார வெற்றிடங்களை உருவாக்கிச் சென்றிருந்தாலும், அவற்றைச் சவாலாக ஏற்று, வெற்றிடங்களை நிறைவுசெய்த தலத் திருஅவையைத் தான் பாராட்டுவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
பல்வேறு நாடுகளில் பணியாற்றும் ஆயர்கள், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் 'அத் லிமினா' எனப்படும் நிகழ்வில் கலந்துகொள்ள கடந்த சில நாட்களாக வத்திக்கான் வந்திருந்த பல்கேரியா நாட்டு ஆயர்களை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, தலத்திருஅவை ஆற்றிவரும் பணிகள் குறித்து தன் மகிழ்வை எடுத்துரைத்தார்.
பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் திருஅவையுடன் இணைந்து, கத்தோலிக்கத் திருஅவை அந்நாட்டில் ஆற்றிவரும் பணிகளுக்குத் தன் பாராட்டுக்களைக் கூறியத் திருத்தந்தை, அந்நாட்டின் பல்வேறு வழிபாட்டு முறை சபைகளின் பிரதிநிதிகளும், ஏப்ரல் 27ம் தேதி, முன்னாள் திருத்தந்தையர் இருவருக்கு நடைபெறவிருக்கும் புனிதர் நிலைத் திருச்சடங்கில் கலந்துகொள்வர் என்பது தனக்கு மகிழ்வைத் தருகிறது என்றும் குறிப்பிட்டார்.
திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், ஒன்பது ஆண்டுகள் பல்கேரியா நாட்டில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றியதையும், ஸ்லாவிய இனத்திலிருந்து முதல்முறையாக ஒருவர் திருத்தந்தையானதை இரண்டாம் ஜான்பால் அவர்கள் நமக்கு உணர்த்துகிறார் என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறப்பாகக் கூறினார்.
கத்தோலிக்க திருஅவைக்கும், ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கும் இடையே இன்னும் நெருக்கமான உறவுகள் வளரவேண்டுமென்ற வாழ்த்துக்களோடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த பல்கேரிய ஆயர்களுக்குத் தன் செபங்களையும் ஆசீரையும் வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.