2014-02-20 15:57:59

திருத்தந்தை பிரான்சிஸ் எழுதியுள்ள முன்னுரை - "நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் விலையேறப்பெற்றவர்கள்"


பிப்.20,2014. 'வறுமை' என்ற வார்த்தையைக் கேட்டு, சங்கடப்படாதவர்கள் நம்மில் யாருண்டு? என்ற கேள்வியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுப்பியுள்ளார்.
விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் தலைவர் பேராயர் Gerhard Ludwig Müller அவர்கள், "ஏழைகளுக்காய் ஏழையாய்: திருஅவையின் மறைப்பணி" என்ற பெயரில் எழுதியுள்ள ஒரு நூலுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள முன்னுரையில் இக்கேள்வியை எழுப்பியுள்ளார்.
"நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் விலையேறப்பெற்றவர்கள்" என்ற தலைப்புடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள இந்த முன்னுரையில், ஆன்மீகம், சமுதாயம், நன்னெறி என்ற பல நிலைகளில் வறுமை ஆக்கிரமிப்பு செய்தாலும், பொருளாதார வறுமையை மட்டுமே இவ்வுலக அரசுகள், குறிப்பாக மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறியுள்ள நாடுகள் பெரிதுபடுத்துகின்றன என்று கூறியுள்ளார்.
இவ்வுலகைக் கடந்த ஒரு நிலையைக் குறித்து சற்றும் சிந்திக்காமல், இறைவனுக்கு நிகரான ஓர் இடத்தை செல்வத்திற்கு அளிப்பதால், இவ்வுலகம் மிகவும் வறுமைப்பட்டு நிற்கிறது என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
தன்னைச் சுற்றியுள்ள செல்வத்தை மட்டுமே நம்பி, இறைவனைச் சாராமல் வாழும் மக்களுக்கு மாறாக, வறியோர் இறைவனைச் சார்ந்து வாழ்வதனால், அவர்களைப் 'பேறுபெற்றோர்' என்று இயேசு அழைத்திருப்பதை திருஅவை தன் பணிகளில் உணர்த்தவேண்டும் என்பதை பேராயர் Ludwig Müller அவர்கள் தன் நூலில் வெளிப்படுத்தியிருப்பதற்கு திருத்தந்தை தன் மகிழ்வை வெளியிட்டுள்ளார்.
பிப்ரவரி 22, வருகிற சனிக்கிழமையன்று கர்தினாலாகப் பொறுப்பேற்கும் பேராயர் Ludwig Müller அவர்கள் எழுதியுள்ள இந்நூல், பிப்ரவரி 25, வருகிற செவ்வாயன்று வெளியிடப்படும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.