2014-03-18 15:21:06

விவிலியத்
தேடல் பெரிய விருந்து உவமை பகுதி - 8


RealAudioMP3 கற்பனையில் நாம் ஓர் உணவகத்திற்குச் செல்வோம். உணவகத்தில் நாம் அமர்ந்ததும், உணவு பரிமாறுபவர் நம்மிடம் உணவு வகைகள் அடங்கிய 'menu' அட்டையைத் தருகிறார். அந்த அட்டையில் உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன; ஆனால், அவற்றின் விலை குறிப்பிடப்படவில்லை. நமக்குத் தேவையான உணவைக் குறிப்பிடுகிறோம். சுவையான உணவு பரிமாறப்படுகிறது. இறுதியில் நாம் உண்ட உணவுக்கான 'பில்' வருகிறது. அந்த 'பில்'லைப் பார்த்ததும் நமக்கு ஆச்சரியம். காரணம் என்ன? நாம் உண்ட உணவுக்கு வழங்கவேண்டிய தொகை, 0:00 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலே கூறப்பட்டுள்ளவை அனைத்தும் கற்பனையல்ல, உண்மை. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், Berkeley என்ற ஊரில் இத்தகைய உணவகம் ஒன்று 2007ம் ஆண்டு துவக்கப்பட்டது. "Karma Kitchen - Growing in Generosity" அதாவது, "கர்மா சமையலறை - தாராள மனதில் வளர்ந்திட" என்ற அடிப்படைக் கொள்கையுடன் இயங்கும் தொடர் உணவகங்கள், அமெரிக்காவின் வேறு சில நகரங்களிலும், இந்தியாவின் அகமதாபாத், சூரத் ஆகிய இரு நகரங்களிலும், ஜப்பானில் டோக்கியோ நகரத்திலும் இன்று இயங்கி வருகின்றன.
Karma Kitchen அமைப்பினர் நடத்தும் உணவகங்களில் நாம் உண்ட உணவின் மதிப்பு 0:00 டாலர்/ரூபாய்/யென் என்று கூறும் அந்த 'பில்'லில், கீழே ஒரு குறிப்பும் கொடுக்கப்படுகிறது: "உங்களுக்கு முன் இந்த உணவகத்தில் சாப்பிட்ட வேறொருவர், நீங்கள் உண்ட உணவின் தொகையை ஏற்கனவே செலுத்திவிட்டார். இந்த அன்புச் சங்கிலியை நீங்கள் தொடர விருப்பமானால், உங்களுக்குப் பின் இங்கு உணவருந்தப் போகும் வேறொருவருக்கு நீங்கள் ஒரு தொகையைச் செலுத்த உங்களை அழைக்கிறோம்" என்ற குறிப்பு அந்த 'பில்'லில் காணப்படுகிறது.

உணவகத்தில் நாம் உண்ணும் உணவை பணம் என்ற எண்ணிக்கையால் மதிப்பிடாமல், மனதில் எழும் அன்பு உணர்வுகளால் மதிப்பிட மனிதர்களாகிய நம்மால் முடியும் என்ற அடிப்படை வாழ்வியல் கொள்கையுடன் இயங்குவது, 'கர்மா கிச்சன்' தொடர் உணவகங்கள். இந்த அன்புத் தொடருக்கு, 'கிச்சன்' அதாவது ‘சமையலறை’ என்று பெயரிட்டிருப்பது பொருத்தமாகத் தெரிகிறது.
நம் இல்லங்களில் சமையலறை பல மென்மையான, உண்மையான, உன்னதமான உணர்வுகளின் பிறப்பிடம். நாம் சமையலறைகளில் உணவு தயாரிக்கும்போது, ஒவ்வொரு பொருளையும் பாத்திரத்தில் போடும்போது, அப்பொருளின் விலை என்ன, என்று பார்த்துப் பார்த்து நாம் சமைப்பதில்லை. வீட்டில் இருப்பவர்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது, எவ்வகையில் சமைத்தால் அனைவரின் உடல்நலத்திற்கும் நல்லது என்ற கனிவும், கரிசனையுமே நம் சமையலறைகளில் அதிகம் இருக்கும்.
இதே எண்ணங்கள், உணர்வுகள் ஓர் உணவகத்திலும் நிலவினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் உருவானதே 'கர்மா கிச்சன்' முயற்சி. இந்த முயற்சியைக் குறித்து, இன்னும் பல உயர்ந்த எண்ணங்களை, உண்மை அனுபவங்களை பகிர்ந்துகொள்ள முடியும். ஆனால், அது நமது விவிலியத் தேடலின் நோக்கம் அல்ல. 'கர்மா கிச்சன்' முயற்சியைப் பற்றி தயவு செய்து இணையதளத்தின் மூலம் இன்னும் தேடி விவரங்களை அறிந்து, பயன்பெறுமாறு உங்களை அழைக்கிறேன். "Karma Kitchen" என்ற வார்த்தைகளுடன் இணையதளத்தில் உங்கள் தேடலைத் துவக்கலாம். 'கர்மா கிச்சன்' முயற்சியைப் பற்றி நாம் இன்று பேசுவதற்கு முக்கியக் காரணம்... 'பெரியவிருந்து உவமை'யின் இரண்டாம் பகுதியில், வறியோரை, உடல் ஊனமுற்றோரை, வீதிகளில் அலைவோரை வீட்டுத்தலைவர் விருந்துக்குக் கொணர்ந்தார் என்று இயேசு கூறும் கருத்துக்கள்.

இறையாட்சி விருந்தில் தங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற கண்மூடித்தனமான உறுதியுடன் பேசிய பரிசேயர் ஒருவருக்கு, இயேசு கூறிய 'பெரியவிருந்து உவமை' ஓர் அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது என்று சென்ற விவிலியத் தேடலில் குறிப்பிட்டோம். இறையாட்சி விருந்தில் பங்கேற்க முன்னுரிமை, முன்பதிவு என்ற சலுகைகள் யாருக்கும் கிடையாது. விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் வரவேண்டும்; விருந்து மண்டபம் நிறையவேண்டும்; அனைவரும் வயிறார உண்ணவேண்டும் என்ற எண்ணங்களே இறையாட்சி விருந்தின் உயிர் நாடிகள். இவை அழகான எண்ணங்கள்... உண்மைதான். ஆனால், இவை நடைமுறைக்கு ஒத்துவராத எண்ணங்கள் என்ற சந்தேக மேகங்கள் நம் மனதைச் சூழ்கின்றன. இந்த மேகங்களால் நம் மனதை நிரப்புவது... RSVP என்ற நான்கு எழுத்துக்கள்.

இன்றையச் சூழலில், நம்மை வந்தடையும் பல அழைப்புக்களில், அழைப்பிதழின் இறுதியில் RSVP என்ற நான்கு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். பிரெஞ்ச் மொழியில் Répondez, s'il vous plaît என்ற சொற்களின் சுருக்கம் இது. இந்த அழைப்பை ஏற்று நீங்கள் வருவதாக இருந்தால், தயவுசெய்து தெரிவிக்கவும் என்பதே இதன் பொருள். RSVPன் பின்னணியில் பல கணக்குகள் உள்ளன. எத்தனை பேர் பதில் தருகிறார்களோ, அதற்குத் தகுந்த அளவில் உணவு தயாரிக்க வசதியாக இருக்கும் என்ற கணக்கு அது. ஏராளமாகச் செலவுகள் செய்து நடத்தப்படும் விருந்துகளில், RSVP கணக்குகள் அதிகம் இருக்கும். 'எவ்வளவு செலவு செய்யப்போகிறோம்' என்ற எண்ணங்களிலிருந்து விடுதலை அடைந்து, 'எத்தனைபேரை மகிழ்விக்கப் போகிறோம்' என்ற எண்ணங்கள் நம் விருந்துகளில் நிலவவேண்டும் என்பதை 'பெரியவிருந்து உவமை'யின் இரண்டாம் பகுதி வலியுறுத்துகிறது.

உவமை'யின் முதல் பகுதியில், அழைக்கப்பட்டவர்கள் சொன்ன அர்த்தமற்ற சாக்குப் போக்குகளை சென்ற வாரம் நாம் சிந்தித்தோம். பணியாளர் இந்தச் சாக்குப் போக்குகளை தம் தலைவரிடம் அறிவித்தார். பின்னர் அங்கு நடந்ததை இயேசு இவ்விதம் விவரிக்கிறார்:
லூக்கா நற்செய்தி 14: 21-24
வீட்டு உரிமையாளர் சினமுற்றுத் தம் பணியாளரிடம், 'நீர் நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும் விரைந்து சென்று ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டிவாரும்', என்றார். பின்பு பணியாளர், 'தலைவரே, நீர் பணித்தபடி செய்தாயிற்று; இன்னும் இடமிருக்கிறது' என்றார். தலைவர் தம் பணியாளரை நோக்கி, ' நீர் வழியோரங்களிலும் நடைபாதைகளிலும் போய், எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டிவாரும். அழைக்கப் பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச் சுவைக்கப் போவதில்லை என உமக்குச் சொல்கிறேன்' என்றார்.

இந்த உவமையின் முதல் பகுதியில் அழைப்பும் மறுப்பும் என்ற கருத்தைச் சிந்தித்தபோது, நம் வாழ்வில் இறைவன் தொடர்ந்து விடுத்துவரும் அழைப்புக்களை எண்ணிப் பார்க்க தவக்காலம் தகுந்ததொரு தருணம் என்று கூறினோம். இந்த உவமையின் இரண்டாம் பகுதியில், பலனை எதிர்பாராமல் காட்டும் பரிவு, அன்பு இவற்றைப் பற்றிச் சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுவும் தவக்காலத்திற்கு ஏற்ற ஓர் எண்ணம்.

கர்மா கிச்சன் என்ற அந்த முயற்சிக்குத் திரும்புவோம். அந்த உணவகத்தில் சாப்பிடும்போது, நம் உணவுக்கு உரிய விலையை வேறு யாரோ கொடுத்துள்ளனர் என்றும், நாம் கொடுக்கவிரும்பும் தொகையால் வேறு யாரோ உணவருந்தப் போகிறார் என்றும் உணரும்போது, பலனை எதிர்பாராமல் காட்டும் அன்பு எவ்வளவு உன்னதமானது என்று புரிந்துகொள்கிறோம். பகவத் கீதையில் "தன்னலமற்ற, ஆசையற்ற செயல்" என்பதைக் கூறும் “Nish kama karma” என்ற வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. இந்த வார்த்தைகள்தான் “Karma Kitchen” என்ற பெயருக்குக் காரணமாக அமைந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இயேசு தன் உவமையின் இரண்டாம் பகுதியில் கூறிய கதையை, தன்னை விருந்துக்கு அழைத்தவரிடம் ஏற்கனவே ஓர் அறிவுரையாகக் கூறியிருந்தார். அழைப்புக்கு அருகதை அற்றவர்கள் என ஒதுக்கப்பட்டவர்கள், தங்கள் அழைப்புக்கு மறு அழைப்பு தர முடியாதவர்கள் ஆகியோரை அழைப்பது உயர்ந்த விருந்தோம்பல் என்றும், இது இறைவன் வழங்கும் விருந்துக்கு ஒத்தது என்றும் அவர் கூறியிருந்தார்:
லூக்கா நற்செய்தி 14: 12-14
பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, “நீர்... விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்என்று கூறினார்.

தவக்காலத்தில் செபம், உண்ணாநோன்பு, தர்மம் என்ற மூன்று முயற்சிகளை நாம் மேற்கொள்ளவேண்டும் என்று தாய் திருஅவை நமக்குச் சொல்லித் தருகிறார். இந்த முயற்சிகளை மக்கள் பார்க்குபடி செய்வது வீண் என்றும், இவற்றை இறைவனுக்கு மட்டுமே தெரியும்படி செய்வது சிறந்ததென்றும் இயேசு சொன்னார். இவ்வார்த்தைகளை, (மத்தேயு 6:1-6,16-18) தவக்காலத்தின் முதல் நாளான திருநீற்றுப் புதன் அன்று நாம் நற்செய்தியாகக் கேட்டோம்.
குறிப்பாக, நாம் செய்யும் தர்மங்கள் இறைவனுக்கு மட்டும் தெரிந்தால் போதும், அடுத்தவருக்குத் தெரிய வேண்டாம் என்பதை வலியுறுத்த, இயேசு ஓர் அழகிய உருவகத்தையும் கொடுத்தார். இந்த உருவகம் உலகப் புகழ்பெற்ற வார்த்தைகளாக இன்றும் பலருக்கு வழிகாட்டுகிறது. இயேசு கூறிய வார்த்தைகள் இதோ:
மத்தேயு நற்செய்தி 6: 3-4
நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

நம் தர்மங்கள், நற்செயல்கள் ஆகியவை, அடுத்தவருக்கு மட்டுமல்ல, நம் உடலின் ஏனைய பகுதிகளுக்கும் தெரியாமல் இருக்கவேண்டும் என்ற மிக உயர்ந்ததொரு சவாலை இயேசு நம் முன் வைக்கிறார். மனித சமுதாயத்தை ஓர் உடலாகக் கற்பனை செய்துபார்த்தால், அந்த உடலின் பல பகுதிகளாக வாழும் பல்லாயிரம் நல்ல உள்ளங்கள், யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல், நன்மைகளைச் செய்துவருவதை நாம் அறிவோம். எவ்வித விளம்பரமும் இன்றி இந்த நல்ல உள்ளங்கள் ஆற்றும் பணிகளாலேயே மனித சமுதாயம் என்ற உடல் இன்றளவும் நலமுடன் வாழ்கிறது. இத்தகைய முயற்சிகள் இவ்வுலகில் வளர 'பெரியவிருந்து உவமை' ஒரு தூண்டுதலாக அமைந்திருக்கும் என்பது என் நம்பிக்கை.

மார்ச் 19, இப்புதன் ஒரு சிறப்பான நாள். கடந்த ஆண்டு, புனித யோசேப்பின் திருநாளான மார்ச் 19ம் தேதியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் தலைமைப் பணியை ஏற்ற நாள். அன்று அவர் வழங்கிய மறையுரையில், புனித யோசேப்புவின் பெருவிழாவுடன், உரோம் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பணியின் துவக்கவிழாவையும் இன்று நாம் கொண்டாடுகிறோம். பேதுருவின் வழித்தோன்றல் என்ற நிலை அதிகாரமுள்ள ஒரு நிலை. இயேசு பேதுருவுக்கு அதிகாரம் அளித்தார். ஆனால், அது, எவ்வகை அதிகாரம்?
பணி புரிவதே உண்மையான அதிகாரம். இந்தப் பணியில் தன்னை முழுவதும் இணைத்து, சிலுவையில் இறுதியில் இணைவதே திருத்தந்தையின் அதிகாரம். சிறப்பாக, மனுக்குலத்தில் வறியோர், வலுவிழந்தோர், எவ்வகையிலும் முக்கியத்துவம் பெறாதோர் திருத்தந்தையின் பணியில் முதலிடம் பெறவேண்டும்... அன்புடன் பணிபுரிபவர்களால் மட்டுமே அகிலத்தைப் பாதுகாக்க முடியும் என்று கூறினார்.திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் கூறிய வார்த்தைகளை கடந்த ஓராண்டளவாய் வாழ்ந்து காட்டியுள்ளார். அவர் தொடர்ந்து, நல்ல உடல் நலத்துடன் தன் தலைமைப் பணியை முழுமையாக ஆற்றி, பணிவின் எடுத்துக்காட்டாக வாழும் வரத்தை இறைவன் அவருக்கு வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.







All the contents on this site are copyrighted ©.