2014-03-22 16:09:34

இத்தாலிய அருள்பணியாளர் ஒருவருக்கு ஐ.நா. மக்கள்தொகை விருது


மார்ச்,22,2014. மக்கள்தொகை மற்றும் நலவாழ்வுத் துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளவர்களை கவுரவிக்கும் விதமாக அளிக்கப்படும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 2014ம் ஆண்டின் மக்கள்தொகை விருது ஓர் இத்தாலிய கத்தோலிக்க அருள்பணியாளருக்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒரு தன்னார்வ நிறுவனத்துக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மக்கள்தொகை நிதி நிறுவனம்(UNFPA), 2014ம் ஆண்டின் மக்கள்தொகை விருதுக்கென, மருத்துவரான அருள்பணியாளர் ஆல்தோ மார்க்கெசினி மற்றும் பன்னாட்டு மகப்பேறு மருத்துவக் கல்விக்கான ஜான் ஹாப்கின்ஸ் தன்னார்வ நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மக்கள்தொகை குறித்த விவகாரங்களில் பணியாற்றிவரும் அருள்பணியாளர் மார்க்கெசினி அவர்கள், ஆப்ரிக்க நாடான மொசாம்பிக்கில் பல ஆண்டுகளாக மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார் என்றும், இவர் அந்நாட்டின் உள்நாட்டுப் போரின்போது பல தடவைகள் கடத்தப்பட்டார் மற்றும் சிறைசெய்யப்பட்டார் என்றும் UNFPA நிறுவனம் கூறியது.
மகப்பேறு இறப்புக்களைத் தடுப்பதற்காக 1973ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஜான் ஹாப்கின்ஸ் நிறுவனம் ஏறக்குறைய 160 நாடுகளில் உதவிகளைச் செய்துள்ளது. இன்னும், மகப்பேறு மற்றும் குடும்பக்கட்டுப்பாடு விடயத்தில் 50 இலட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு பயிற்சியளித்துள்ளது.
1981ம் ஆண்டில் ஐ.நா.பொது அவையால் உருவாக்கப்பட்ட இவ்விருது வருகிற ஜூன் 12ம் தேதி ஐ.நா.வில் வழங்கப்படும்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.