2014-03-24 17:21:36

திருத்தந்தை பிரான்சிஸ் : மீட்பை விரும்புவோர், தாழ்ச்சியின் பாதையைத் தேர்ந்துகொள்ளவேண்டும்


மார்ச்,24,2014. எவர் ஒருவர் மீட்கப்பட விரும்புகிறாரோ, அவர் தாழ்ச்சியின் பாதையைத் தேர்ந்துகொள்ளவேண்டும் என்பதை மையமாக வைத்து, இத்திங்கள் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி, மறையுரையாற்றியத் திருத்தந்தை அவர்கள், தாழ்ச்சியுடன் மேற்கொள்ளப்படும் செயலே நம்மைக் குணப்படுத்துதலுக்கு அழைத்துச்செல்லும் என்று கூறினார்.
பழைய ஏற்பாட்டில், தொழுநோயுற்ற நாமான் என்பவருக்கும், இறைவாக்கினர் எலிசாவுக்கும் இடையே இடம்பெற்ற உரையாடலை எடுத்துரைத்து, தாழ்ச்சி எனும் பண்பால் புதுமை நடந்ததையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னைமரியாவுக்கு எத்தனையோ நற்குணங்கள் இருந்தும், தாழ்ச்சி என்ற பண்பே அவரின் புகழ்பாடலில் உயர்ந்து நிற்கிறது என்று கூறினார்.
நாம் ஒரு பாவி என்று ஏற்றுக்கொள்வதே நம் முதல் பண்புக்கூறு என்று கூறியத் திருத்தந்தை, அந்த உண்மையை ஏற்பது நம் தாழ்ச்சியைக் காட்டுவதாகும் என்றும் எடுத்துரைத்தார்.
மேலும், இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டிருந்த டுவிட்டர் செய்தியில், 'கடவுள் பாவிகளாம் நம்மிடமிருந்து தூரத்தில் இல்லை; எவ்வித கட்டுப்பாடுமின்றி, தன் இரக்கத்தை அளவின்றி அவர் பொழிய விரும்புகிறார்' என்று எழுதியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.