2014-03-27 16:46:14

அமெரிக்க அரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்கள், வத்திக்கானில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் மேற்கொண்ட சந்திப்பு


மார்ச்,27,2014. மார்ச் 27, இவ்வியாழன் காலை 10.30 மணிக்கு, அமெரிக்க அரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்கள், வத்திக்கானுக்கு வருகைதந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தார்.
ஏறத்தாழ 50 நிமிடங்கள், மூடிய கதவுகளுக்குப் பின் நடைபெற்ற இச்சந்திப்பின் இறுதியில், ஏனைய விருந்தினர்கள் முன்னிலையில், அமெரிக்க அரசுத் தலைவரும், திருத்தந்தையும் நினைவுப் பரிசுகளைப் பரிமாறிக் கொண்டனர்.
திருத்தந்தையின் சந்திப்பிற்குப் பிறகு, அரசுத் தலைவர் ஒபாமா அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரொ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீட அவையின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி அவர்களையும் சந்தித்தார்.
உலகின் பல பகுதிகளிலும் நிலவும் பிரச்சனைகள், மனிதாபிமான அடிப்படையிலும், மனித மாண்பின் அடிப்படையிலும் தீர்க்கப்படவேண்டும் என்ற கருத்துக்கள் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றதென திருப்பீடம் அறிவித்துள்ளது.
திருப்பீடத்திற்கும் அமெரிக்க அரசுக்கும் இடையே நிலவும் உறவுகள் குறித்த கருத்துப் பரிமாற்றத்தில், மதச் சுதந்திரம் குறித்து கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன என்று கூறப்படுகிறது.
உலகெங்கும் நிலவிவரும் மனித வர்த்தகத்தை ஒழிக்கும் முயற்சிகள் தீவிரமாக்கப்படுவது குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.