2014-04-17 15:08:42

திருத்தந்தை பிரான்சிஸ், புனித எண்ணெயை அர்ச்சிக்கும் திருப்பலியில் வழங்கிய மறையுரை - "மகிழ்வின் எண்ணெயால் அர்ச்சிக்கப்பட்டவர்கள்"


ஏப்.17,2014. ஏப்ரல் 17, இப்புனித வியாழனன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், காலை 9.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித எண்ணெயை அர்ச்சிக்கும் திருப்பலியை ஆற்றினார். அருள் பணித்துவத்தை இயேசு கிறிஸ்து உருவாக்கியதையும், அதனால் அருள்பணியாளர்கள் பெறும் மகிழ்வையும் மையப்படுத்தி "மகிழ்வின் எண்ணெயால் அர்ச்சிக்கப்பட்டவர்கள்" என்ற தலைப்பில் திருத்தந்தை வழங்கிய மறையுரையின் சுருக்கம் இதோ:

புனித வியாழன் அன்று, அருள் பணித்துவம் என்ற அழகிய கொடைக்காகவும், நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட அருள் பணித்துவத் திருப்பொழிவுக்காகவும் மகிழ்கிறோம். மகிழ்வின் எண்ணெயால், இறைவன் நம்மை அருள்பொழிவு செய்துள்ளார். அருள்பணியாளராக இருக்கும் மகிழ்வை மனதார ஏற்று, பெருமை பாராட்ட இறைவன் நம்மை அழைக்கிறார்.
இந்த மகிழ்வை ஆழ்நிலை தியானமாகச் சிந்திக்க, அன்னை மரியா பெரிதும் உதவுகிறார். தன் தாழ்நிலையில் இறைவனைப் போற்றிய அன்னை, நமக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
இறைவன் அளிக்கும் இப்பெரும் கொடைக்கு முன்னர் நாம் மிகச் சிறியவர்கள், தகுதியற்றவர்கள். அருள்பணியாளர், கிறிஸ்துவின் வறுமையில் பங்கேற்றால் அன்றி, அவர்தான் உலகிலேயே மிகவும் வறுமைப்பட்டவர். புனித பேதுருவுக்குப் பொறுமையுடன் பாடங்களைச் சொல்லித்தந்த இயேசு, அருள் பணியாளருக்குப் பாடங்கள் சொல்லித்தந்தாலே அன்றி, அவரே உலகில் படிப்பறிவற்றவராய் இருப்பார். தன் திறமைகளை நம்பி வாழும் அருள்பணியாளர், உலகில் மிகவும் சிறியவர், ஆனால், கிறிஸ்துவுடன் இணைந்தால் அவரே வலிமை மிக்கவர். எனவே, அன்னை மரியாவோடு இணைந்து, தன் தாழ்நிலை கண்டு இறைவன் ஆற்றும் அற்புதங்களுக்கு மகிழ்வு கூற அழைக்கப்பட்டவர் அருள்பணியாளர்.

அருள்பணியாளர் என்ற நிலையில் உள்ள மகிழ்வு மூன்று அம்சங்களைக் கொண்டது. நமக்குள் நாமே தங்கி, சுயநலத்தில், பெருமிதத்தில் நாம் கொள்ளும் மகிழ்வு அல்ல இது. மாறாக, அருள்பொழிவினால் உருவாகும் மகிழ்வு, அழியாத மகிழ்வு, பணியாற்றும் மகிழ்வு என்ற மூன்று அம்சங்கள் உள்ளன.
அருள்பொழிவு பெறும்போது, நம்மை முழுவதும் நிறைத்து, நமது எலும்புகள் வரை நம்மை இந்த மகிழ்வு அர்ச்சிக்கிறது. புனித எண்ணெயால் அர்ச்சிக்கப்படல், புனித உடைகளை அணிதல் போன்ற அடையாளங்கள் வழியே நம்மை வந்தடையும் உண்மையான மகிழ்வு இது.
நமது பாவங்கள், குறைபாடுகள், சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்தின் மத்தியிலும் இந்த மகிழ்வு நமக்குள் தங்குகிறது. ஒரு மரக்கட்டை நெருப்புத் துண்டாக மாறியபின்னர், அதன் மேல்பரப்பில் சாம்பல் பூத்திருந்தாலும், உள்ளே, நெருப்பு தொடர்ந்து கனன்றுக் கொண்டிருப்பதைப்போல, சூழ்ந்துள்ள துன்பங்களின் நடுவிலும், நமது மகிழ்வு தொடர்ந்து ஒளிர்கிறது.
இந்த மகிழ்வு, பிறருக்குப் பணியாற்றுவதில் அடங்கியுள்ளது. திருமுழுக்கில், உறுதிப் பூசுதலில், நோயில் பூசுதலில், ஒப்புரவு அருள் அடையாளத்தில் இறைவனின் மக்களுக்கு நாம் வழங்கும் ஆசீரில், அருள்பணியாளரின் மகிழ்வு வாழ்கிறது.
தன் மந்தையின் நடுவில் வாழும்போது, இந்த மகிழ்வு வெளியாகிறது. தனித்து இறைவனைத் தொழும்போதும், அருள்பணியாளர் தன் மந்தையை மனதில் சுமந்து இறைவனிடம் செல்கிறார். தனிமை அவரை வாட்டும்போதும், அவரது மந்தை அவரைக் காத்து வருகின்றது.

அருள்பணியாளரின் மகிழ்வை, மந்தை காப்பதுபோல, மேலும் மூன்று சகோதரிகள் காக்கின்றனர். அவர்கள்தான் - ஏழ்மை, பிரமாணிக்கம், கீழ்ப்படிதல்.
உலகிலிருந்து பிரித்து எடுக்கப்படும் அருள்பணியாளர், உலகச் செல்வங்களை இழக்கிறார். ஆயினும், அவர் மீண்டும் இறைமக்களுக்காகப் பணியாற்றச் செல்லும்போது, உயரியச் செல்வங்களைக் கண்டடைகிறார்.
இறைமக்களைவிட்டு விலகிநின்று, தன் தனித்துவத்தைத் தேடும் அருள்பணியாளர்களின் மனங்களில், 'வெளியே' என்ற அடையாளமே பளிச்சிடுகிறது. தன்னலத்திலிருந்து, தன் குறுகிய உலகிலிருந்து, அருள்பணியாளர் வெளியேற வேண்டும் என்ற அழைப்பு மீண்டும், மீண்டும் எழுகிறது. இந்தத் தன்னல மறுப்பில், அருள்பணியாளரின் ஏழ்மை அடங்கியுள்ளது.
அருள்பணியாளரை மகிழ்வில் காக்கக்கூடிய அடுத்த சகோதரி, பிரமாணிக்கம். பிரமாணிக்கமாய் இருப்பது எனில், அப்பழுக்கற்றவராய் இருப்பது என்பது, முதன்மையான பொருள் அல்ல. அவ்விதம் இருந்தால், அது இறைவன் தரும் பெரும் கோடை.
பிரமாணிக்கமாய் வாழ்வது என்பது, தன் பணியின் வழியாக அருள்பணியாளர், எவ்வளவு பயனுள்ளவராக, இறைவனுக்கு எத்தனை மக்களைப் பெற்றுத்தருபவராக வாழ்கிறார் என்பதே பொருள்.
அருள் பணித்துவ மகிழ்வுக்கு அடுத்தச் சகோதரி - கீழ்ப்படிதல். பணியில் மூழ்கியுள்ள திருஅவைக்கு, அருள்பணியாளர் எவ்வளவு தூரம் பணிந்து, திருஅவையின் தேவைகளைப் புரிந்து வாழ்கிறார் என்பதைப் பொருத்து, அவரது மகிழ்வும் வளரும்.
எலிசபெத்தின் தேவைகளையும், கானாவில் நடந்த திருமண விருந்தில் ஏற்பட்டத் தேவைகளையும் புரிந்து பணியாற்றிய அன்னை மரியா, அருள்பணியாளர்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு.

அழைக்கப்பட்டவர் அனைவரும் இதை உணரவேண்டும். அதாவது, மக்களிடமிருந்து பிரித்து எடுக்கப்பட்டு, மீண்டும் அதே மக்களிடம் இறை அருளைப் பகிர்ந்தளிக்கும் அருள் வடிகாலாக அனுப்பப்படும் அருள்பணியாளர்கள், இவ்வுலகில் மகிழ்வுடன் இருக்க முடியும் என்பதை உணரவேண்டும்.
அருள் பணித்துவத்தைக் கொண்டாடும் இந்த வியாழனன்று, இளையோர் பலருக்கு, அருள் பணித்துவ வாழ்வைத் தேர்ந்துகொள்ளும் அழைப்பை ஏற்கும் மனதை இறைவன் தரவேண்டும் என்று மன்றாடுகிறேன்.
அருள் பணித்துவத்தைக் கொண்டாடும் இந்த வியாழனன்று, புதிதாகத் திருநிலைப்படுத்தப்பட்ட அருள்பணியாளர்கள், தங்கள் முதல் திருப்பலி, முதல் மறையுரை, முதல் திருமுழுக்கு, முதல் ஒப்புரவு அருள் அடையாளம் என்பனவற்றை ஆற்ற தங்களையே தயாரிக்கும் நேரங்களில், அவர்களை இறைவன் மகிழ்வில் நிறைக்கவேண்டும் என்று செபிக்கிறேன்.
அருள் பணித்துவத்தைக் கொண்டாடும் இந்த வியாழனன்று, இப்பணியில் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளவர்கள், இந்த அர்ச்சிப்பின் மகிழ்வை மீண்டும் ஒரு முறை புத்தம் புதிதாய் உணரும்படியாகவும், இறைவாக்கினர் நெகேமியாவைப் போல், "ஆண்டவரின் மகிழ்வே தங்களது வலிமை" (நெகேமியா 8:10) என்பதை உணரும்படியாகவும், இறைவனிடம் வேண்டுகிறேன்.
இறுதியாக, அருள் பணித்துவத்தைக் கொண்டாடும் இந்த வியாழனன்று, அருள்பணி வாழ்வில் பல்லாண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள, அல்லது, உடல் நலம் குன்றியுள்ள, வயதில் முதிர்ந்த அருள்பணியாளர்களுக்காகவும் இறைவனிடம் வேண்டுகிறேன். இவர்கள் அனைவரும் முடிவற்ற வாழ்வின் முன்சுவையை உணர்ந்து, தங்கள் மகிழ்வில் நிலைத்திருக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு தன் மறையுரையை வழங்கியத் திருத்தந்தை, தொடர்ந்து ஆற்றியத் திருப்பலியில், மூன்று வகையான புனித எண்ணெயை அர்ச்சித்தார்.
இம்மூவகை புனித எண்ணெய், திருமுழுக்கில் அர்ச்சிப்பு, நோயுற்றோர் அர்ச்சிப்பு, அருள் பணியாளர் திருப்பொழிவு, மற்றும் ஆயர்கள் திருப்பொழிவு என்ற பல அருள் அடையாள நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகின்றது.

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.