2014-06-04 15:09:08

அமைதி ஆர்வலர்கள் – 1929,1930ல் நொபெல் அமைதி விருது(Frank Billings Kellogg)


ஜூன்,04,2014. அன்பு நேயர்களே, 1928ம் ஆண்டுக்கான நொபெல் அமைதி விருது யாருக்கும் வழங்கப்படவில்லை. எனவே 1929 மற்றும் 1930ம் ஆண்டுகளில் நொபெல் அமைதி விருது பெற்றவர்கள் பற்றி இன்று பார்ப்போம்.
அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் பிரான்சின் முயற்சியால் 1928ம் ஆண்டில் பாரிசில் ப்ரெஞ்ச் வெளியறவு தூதரகத்தில் Kellogg–Briand என்ற உடன்படிக்கை கையெழுத்தானது. இந்த உடன்படிக்கை, பொதுவாக போரைப் புறக்கணிப்பதற்கு நாடுகளுக்கு அழைப்புவிடுக்கின்றது. நாடுகளுக்கிடையே பிரச்சனைகள், மோதல்கள் எதுவாக இருந்தாலும் அவற்கைத் தீர்ப்பதற்குப் போரைக் கருவியாகப் பயன்டுத்துவதை Kellogg–Briand உடன்படிக்கை தடை செய்கின்றது. பல போச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் 1928ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி அமெரிக்க ஐக்கிய நாடு, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகள் முதலில் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. விரைவில் பிற நாடுகளும் அதில் கையெழுத்திட்டன. இந்த உடன்படிக்கை முதலில் கையெழுத்திடப்பட்ட சமயத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கானடா, செக்கோஸ்லோவாக்கியா, பிரிட்டன், இத்தாலி, ஜப்பான், நியுசிலாந்து, போலந்து, தென்னாப்ரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் இருந்தனர். அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுச்செயலர் அதாவது அந்நாட்டின் வெளியறவு அமைச்சர் Frank B. Kellogg, ப்ரெஞ்ச் வெளியறவு அமைச்சர் Aristide Briand ஆகிய இருவரின் பெருமுயற்சியால் இந்த உடன்படிக்கை கொண்டுவரப்பட்டதால் இது இவ்விருவரின் பெயரால் Kellogg–Briand உடன்படிக்கை என அழைக்கப்படுகிறது. இது 1929ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி அமலுக்கு வந்தது. அச்சமயத்தில் மொத்தம் 64 நாடுகள் இதில் கையெழுத்திட்டிருந்தன. இந்த Kellogg–Briand அமைதி உடன்படிக்கை கொண்டுவரப்படுவதற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் Frank Billings Kellogg எடுத்த முயற்சிகளுக்காக அவருக்கு 1929ம் ஆண்டில் அமைதி நொபெல் விருது வழங்கப்பட்டது.
Frank Billings Kellogg, 1856ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியுயார்க்கின் Potsdamல் பிறந்தார். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் ஒரு வழக்கறிஞராக, அரசியல்வாதியாக அனைத்துலக அளவில் புகழ்பெறும் அளவுக்கு உயர்ந்தார். 1865ம் ஆண்டில் இவரது குடும்பம் Minnesotaவில் குடியேறியது. Rochesterல் வழக்கறிஞர் தொழிலைச் செய்துவந்த Kelloggஐ, 1880களில் தியோடர் ரூஸ்வெல்ட் அரசின் நீதித்துறையில் வழக்கறிஞராக நியமித்தார். 1911ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் நியுஜெர்சி எண்ணெய் நிறுவனத்துக்கும் இடையேயான வழக்கை இவர் கையாண்டவிதம் எல்லாரலும் பாராட்டப்பட்டது. அதன்பின்னர் Kelloggன் புகழ் பரவியது. இதைத் தொடர்ந்து அமெரிக்க வழக்கறிஞர் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1916ம் ஆண்டில் குடியரசு கட்சி சார்பாக Minnesotaவிலிருந்து அமெரிக்க செனட் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். Versailles போர் ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டபோது அதற்கு Kellogg ஆதரவு தெரிவித்தார். அமெரிக்க நாடுகளின் 5வது அனைத்துலக மாநாடு சிலே நாட்டு சந்தியாகோவில் 1923ம் ஆண்டில் நடைபெற்றபோது இவர் பிரதிநிதியாகச் சென்றார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிரிட்டனுக்கான தூதராக 1923ம் ஆண்டு முதல் 1925ம் ஆண்டுவரை பணியாற்றினார். Calvin Coolidge அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவராக இருந்த காலத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்தார் Kellogg. 1928ம் ஆண்டில் அயர்லாந்தின் டப்ளினில், நகர சுதந்திரம் என்று விருதைப் பெற்றார். 1929ம் ஆண்டில் பிரான்ஸ் அரசு இவரை கவுரவ உறுப்பினராக்கியது. Kellogg 1937ம் ஆண்டு தனது 81வது வயதில் இறந்தார்.
1930ம் ஆண்டில் அமைதி நொபெல் விருது பெற்ற Lars Olof Jonathan Söderblom சுவீடன் லூத்தரன் சபை போதகராவார். நாதன் என்றும் அழைக்கப்படும் இவர், சுவீடன் நாட்டின் Trönö (தற்போதைய Söderhamn நகராட்சி) என்ற கிராமத்தில் 1866ம் ஆண்டு பிறந்தார். Nathan Söderblomனின் தந்தை, சுவீடன் லூத்தரன் கிறிஸ்தவ சபை போதகர். எனவே இவரும் ஆழமான கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்க்கப்பட்டார். உயர்கல்வி படிக்க விரும்பி, 1883ம் ஆண்டில் Uppsala பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இவர், இடையில் தனது மனதை மாற்றிக் கொண்டு தனது தந்தையின் வழியைப் பின்பற்றி போதகரானார். 1912ம் ஆண்டில் Leipzig பல்கலைக்கழகத்தில் சமயக் கல்விப் பேராசிரியரானார். 1914ம் ஆண்டில் Uppsalaவில் சுவீடன் லூத்தரன் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார். திருமணமாகி 13 குழந்தைகளுக்குத் தந்தையானார். பாரிசிலுள்ள சுவீடன் கிறிஸ்தவ சபையில் போதகர் பணி செய்ய அனுப்பப்பட்டார். பாரிசில் அக்கிறிஸ்தவ சபையில் ஆல்பிரட் நொபெல் உட்பட பல எழுத்தாளர்கள், கலைஞர்கள் என சுவீடன் நாட்டைச் சேர்ந்த பலர் உறுப்பினர்களாக இருந்தனர். முதல் உலகப் போரின்போது அனைத்துக் கிறிஸ்தவத் தலைவர்களையும் அமைதிக்காகவும் நீதிக்காகவும் உழைக்குமாறு கேட்டுக்கொண்டார் Söderblom.
திருஅவையின் ஒன்றிப்பு, உலகுக்கு நற்செய்தியை வழங்குவதில் சிறப்புப் பங்காற்ற முடியும் எனவும், சமுதாய வாழ்வுக்கு இயேசுவின் நற்செய்திகள் பொருத்தமானவை எனவும் நம்பினார் Söderblom. 1920களில், வாழ்வும் பணியும் என்ற கிறிஸ்தவ இயக்கத்தில் இவர் வகித்த தலைமைப் பதவி, கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு முக்கிய அடித்தளமிட்டவர்களில் ஒருவராக இவரை உலகுக்குக் காட்டியது. 1925ம் ஆண்டில் Stockholmல் வாழ்வும் பணியும் என்ற கருத்தரங்கு நடைபெறுவதற்கு இவரே கருவியாக இருந்து அதற்குத் தலைமை தாங்கி நடத்தினார். இதில் பல கிறிஸ்தவ சபைகள் பங்கேற்றன. ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபையில், கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கையில் தீவிரமாக இருந்த George Bell அவர்களுடன் இவர் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். 1931ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி Uppsalaவில் மரணமடைந்தார் Söderblom. இவரது உடல் Uppsala பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. Lars Olof Jonathan Söderblom அமைதியை ஊக்குவிப்பதில் கிறிஸ்தவ சபைகளின் பங்களிப்பை ஊக்கப்படுத்தினார். கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிப்புக்காவும் இவர் முயற்சித்தார்.








All the contents on this site are copyrighted ©.