2014-06-07 15:19:07

நூறாண்டுகளுக்கும் மேலாக தொடரும் அன்னதானப் பணி


ஜூன்,07,2014. திருச்சியில் நூறாண்டுகளாக எந்தவிதமான ஆடம்பரமோ, ஆரவாரமோ இல்லாமல் அன்னதான சேவையில் ஈடுபட்டு வருகிறது திருச்சி அன்னதான சமாஜம் என்ற அமைப்பு.
நூறாண்டுகளுக்கு முன்னர் திருச்சி நீத்துக்காரத் தெருவில் வாழ்ந்த பரமசிவம் பிள்ளை தினந்தோறும் காலையில் ஏழைகளுக்கு தன் வீட்டிலேயே பழைய சோறு அளித்து வந்தார். அதனாலேயே அவர் பழைய சோறு பரமசிவம் பிள்ளை என்று கூட அழைக்கப்பட்டார். இவர் 1909-ம் ஆண்டில் மறைந்தார்.
பரமசிவத்தின் பணியை முன்னுதாரணமாகக் கொண்டு 1912-ம் ஆண்டில் நந்திக்கோயில் தெருவில் அன்னதான சமாஜம் என்ற பெயரில் ஏழைகளுக்கு தினந்தோறும் அன்னதானம் வழங்கும் பணியை சிலர் சேர்ந்து தொடங்கினர். இதனால் ஈர்க்கப்பட்ட பலரும் சமாஜத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தாராள மனம் படைத்த பலரும் இந்த சமாஜத்துக்கு வீடு, நிலம் உள்ளிட்டவைகளை எழுதி வைத்துள்ளனர். பலரும் தங்களது பிறந்தநாள், குழந்தைகளின் பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்தப்பூர்த்தி, சதாபிஷேக விழா, நீத்தார் நினைவு நாள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் அன்னதான சமாஜத்துக்கு வந்து நிதியை அளித்து, அன்றைய தினம் அன்னதானத்தையும் வழங்குகின்றனர். இவ்வாறாகத் தான் நூறாண்டுகளைக் கடந்த நிலையிலும் தொடர்ந்து இந்த சமாஜம் உணவளிக்கும் பணியை தினந்தோறும் மேற்கொண்டு வருகிறது.
உணவும் உடையும் கொடுத்து வரும் சமாஜத்தின் பணியை மேலும் விரிவாக்கும் வகையில் முதியோர் இல்லம் ஒன்று 1992-93ம் ஆண்டில் குணசீலத்தில் தொடங்கப்பட்டது. முற்றிலும் வசதியற்ற ஏழை, ஏளிய முதியவர்கள் 65 பேர் (ஆண்கள், பெண்கள்) தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மூன்று வேளை உணவு, உடை, உறைவிடம் ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : தி இந்து







All the contents on this site are copyrighted ©.