2014-06-12 15:57:52

இந்தியர்கள் இருவர் உட்பட, ஆறுபேருக்கு நவம்பர் 23ல் புனிதர் பட்டம்


ஜூன்,12,2014. கேரளாவின் அருள்பணி Kuriakose Elias Chavara, அருள்சகோதரி Eufrasia Eluvathingal உட்பட ஆறு முத்திப்பேறுபெற்றவர்கள், கிறிஸ்து அரசர் பெருவிழாவாகிய வருகிற நவம்பர் 23ம் தேதியன்று புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வியாழன் காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முன்னிலையில் நடந்த கர்தினால்கள் அவைக் கூட்டத்தில் ஆறு முத்திப்பேறுபெற்றவர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படும் நாள் குறிக்கப்பட்டது.
முத்திப்பேறுபெற்ற அருள்பணி Kuriakose Elias Chavara அவர்கள், CMI என்ற கார்மேல் அமல அன்னை சபையை நிறுவியவர். முத்திப்பேறுபெற்ற அருள்சகோதரி Eufrasia Eluvathingal அவர்கள், முத்திப்பேறுபெற்ற அருள்பணி Chavara அவர்கள் பெண்களுக்கென தொடங்கிய கார்மேல் அன்னை அருள்சகோதரிகள் சபையைச் சேர்ந்தவர்.
மேலும், திருஇதயங்களின் புனித Dorotea பிள்ளைகள் சபையை நிறுவிய Vicenza ஆயர் Giovanni Antonio Farina; “Bigie” எனப்படும் சகோதரிகள் சபையை தோற்றுவித்த பிரான்சிஸ்கன் சபை அருள்பணி Ludovico da Casori; Minims சபையின் Nicola da Longobardi, இன்னும், பொதுநிலையினர் Amato Ronconi ஆகிய நான்கு முத்திப்பேறுபெற்றவர்களும் வருகிற நவம்பர் 23ம் தேதியன்று புனிதர் நிலைக்கு உயர்த்தப்படவுள்ளனர்.
புனித பிரான்சிஸ் மூன்றாம் சபையைச் சேர்ந்த முத்திப்பேறுபெற்ற Amato Ronconi அவர்கள் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். அது இன்று "Blessed Amato Ronconi Nursing Home”என அழைக்கப்படுகிறது.
கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று புனிதர் நிலைக்கு உயர்த்தப்படவுள்ள ஆறு முத்திப்பேறுபெற்றவர்களில் இருவர் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற நால்வரும் இத்தாலியர்கள். இவர்களில் ஒருவர் பொதுநிலை விசுவாசி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.