2014-06-26 16:43:18

திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசு நல்ல ஆயர் என்பதை மக்கள் ஏற்பதால் அவரைப் பின்செல்கின்றனர்


ஜூன்,26,2014. இயேசு நல்ல ஆயர் என்பதை மக்கள் ஏற்பதால் அவரைப் பின்செல்கின்றனர் என்று கூறிய அதேவேளை, ஒழுக்க முறைமைக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களோடு பேரம்பேசும் தேடலுக்குமென விசுவாசத்தை வைத்துக்கொள்வதை எச்சரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலை திருப்பலி நிகழ்த்தி ஆற்றிய மறையுரையில் இயேசுவை, பலர் பின்செல்வதற்கான காரணத்தை விளக்கினார்.
மக்கள் இயேசுவின் போதனைகளைக் கண்டு வியப்படைந்து, தங்கள் இதயங்களில் ஏதோ நன்மைகளை, பெரிய செயல்களை அப்போதனைகள் கொண்டுவருவதை உணர்ந்து பெருங்கூட்டமாக மக்கள் அவரைப் பின்சென்றனர் என்றுரைத்த திருத்தந்தை, இயேசுவின் போதனைகள் சென்றடையாத நான்கு குழுக்கள் பற்றியும் குறிப்பிட்டார்.
பரிசேயர்கள், சதுசேயர்கள், தீவிரப்பற்றாளர்கள், எஸ்ஸினியர்கள் என்ற இறைவனுக்குத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த துறவிகள் ஆகிய நான்கு குழுக்கள் பற்றி விவரித்த திருத்தந்தை, இந்தத் துறவிகள் மக்களைவிட்டு வெகுதொலைவில் இருந்தார்கள், அதனால் மக்களால் அவர்களைப் பின்செல்ல முடியவில்லை என்றும் கூறினார்.
இந்த நான்கு குழுக்களின் குரல்களும் மக்களைச் சென்றடைந்தாலும், மக்களின் இதயங்களை இதமாக்க இவற்றில் எந்தக் குரலாலும் இயலவில்லை, ஆனால் இயேசுவின் குரல் கூட்டத்தினரின் இதயங்களை இதமாக்கியது, இயேசுவின் செய்தி மக்கள் கூட்டத்தின் இதயத்தைத் தொட்டது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இயேசு இந்த நான்கு குழுவினர் போல் இல்லை, ஆனால் அவர் மேய்ப்பராக, ஆயராக இருந்தார், கடவுள் பற்றிய உண்மைகளைப் பேசினார், கடவுள் பற்றிய காரியங்களை மக்கள் விரும்பும் வழியில் பேசினார், எனவே மக்கள் அவரைப் பின்சென்றனர் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் தனது மறையுரையில் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.